நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை. அரசவையைக் கூட்டினான்.
“”அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்கவேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,” என்றுஉத்தரவிட்டான்.
அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார். ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர். அமைச்சர் வீட்டில் பக்தி மிக்க சமையல்காரன் ஒருவன் இருந்தான். தைரியசாலியான அவன்,இதற்கு பதிலளிக்க முன்வந்தான்.
“”அமைச்சரே! ஒருயோசனை! பண்டிதர் வேடத்தில் நான் அவைக்கு வருகிறேன். எனக்கு தெரிந்ததை மன்னனுக்கு எடுத்துச் சொல்கிறேன். அனுமதிப்பீர்களா? ” என்றான்.
“”ஆபத்திற்கு பாவமில்லை” என்ற எண்ணிய அமைச்சரும் சம்மதித்தார்.
சமையல்கார பண்டிதரும் அவைக்கு வந்தார்.
“”மன்னா! ஒரு குவளை நிறைய பால் வர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றார் பண்டிதர்.
மன்னரும் பணியாளனிடம் உத்தரவிட்டார்.
பண்டிதரிடம் பால் வழங்கினான் பணியாளன்.
பண்டிதர் பணியாளனிடம், “”தம்பி! என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ இங்கிருந்து போகலாம்!” என்றார்.
இதைக் கேட்ட அவையோர் சிரித்து விட்டனர்.
இதைக் கேட்ட அவையோர் சிரித்து விட்டனர்.
அமைச்சர் அவரிடம்,””உங்களைப் பார்த்தால் கற்ற பண்டிதரைப் போல இருக்கிறது. மன்னரின் கேள்விக்கு விடையளிக்க வந்தவர் என நினைத்தோம். ஆனால், நீங்களே எங்களிடம் கேள்விக்கணை தொடுத்தால் எப்படி?” என்றார்.
ஆனால், மன்னனோ, “”கேட்கட்டும், கேட்கட்டும்” என்று அனுமதியளித்தான்.
பண்டிதர் பணியாளனிடம் கேள்விகளைத் தொடுத்தார்.
“”பாலின் நிறம் என்ன?”
“”வெண்மை!” .
பண்டிதர், “”இந்த பாலைக் கொடுத்தது எது?”
“”அரண்மனை காராம்பசு”.
காராம்பசு என்றால்…..என இழுத்தார் பண்டிதர்
“கருப்பு நிற பசு’ என்றான் பணியாளன்.
சட்டென்று காராம்பசுவுக்கு உணவாக என்ன கொடுப்பாய்?
“பச்சைப்புல் அதன் அன்றாட உணவு’
“”தம்பி! நன்றாக விடையளித்தாய்” என்றார் பண்டிதர்.
பண்டிதர் நிமிர்ந்தபடி, “”மன்னா! பசு தின்பது பச்சைநிறப் புல். அதன் நிறமோ கருப்பு.தருவதோ வெள்ளை நிறப்பால். ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா? இப்படிநம்ப முடியாத அதிசயத்தை, தினமும் நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டிருப்பவன்தான் கடவுள்.
அவனால், தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. உயிர்கள் நிற்பதும், நடப்பதும் அவன் அருளால் தான். அகிலத்தில் அவன் அன்றி ஓர் அணு கூட அசைய முடியாது. முதலுக்கும், முடிவுக்கும் காரணகர்த்தா அவனே. அவனுக்கே கடவுள் என்று உருவம் கொடுத்து கோயில்களில் வணங்குகிறோம். அவனுக்கு பெயரும் இல்லை. ஊரும் இல்லை. ஆனால், ஆயிரமாயிரம் திருநாமங்களைச் சொல்லி, திருத்தலங்களை நாடித் துதிக்கிறோம். அவன் அருளை உள்ளத்தால் உணரமுடியுமே ஒழிய, இதுதான் என்று யாராலும் ஒருபோதும் காட்ட முடியாது,” என்று சொல்லி அவையை வணங்கினார்.
மன்னன் பண்டிதரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்தான். அனைவரும் கரகோஷம் எழுப்பினர். உணவு பரிமாறுபவன், நல்லுணர்வையும் பரிமாறியதைக் கண்ட அமைச்சர் மெய்மறந்தார்.