Home » தன்னம்பிக்கை » திறமை இருந்தும் தோல்வி ஏன்?
திறமை இருந்தும் தோல்வி ஏன்?

திறமை இருந்தும் தோல்வி ஏன்?

நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம்.

அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள் தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும் அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதில் முதலாவது,அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது பிரகாசிப்பதில்லை.

இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில்இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே போகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் இருக்கின்றன, திறமைக்கும்குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை இருப்பதில்லை.
மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பாஸ்கல் (Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர்பிற்காலத்தில் தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்சட்டம் மட்டுமே மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது.எனவே அவர் தந்தை மகன் சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக் கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில் வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன் எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து எழுத்துக் கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார்.

ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத் துவங்கினார்.கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள் இவருடையவித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல் தொடர்ந்தஇத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும் உண்டா? வெற்றியும், புகழும்கடைசியில் அவருக்கு உலக அளவில் கிடைத்தன.பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், தினமும்குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று உறுதியுடன் ஓய்வு நேரங்களில்தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள்,பேனா மை, தபால் செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள் மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள் காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.

இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி என்றுதீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப் போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும் வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத் திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள் விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.

எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில் வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று எண்ணாதீர்கள்.

தடங்கல்கள் சகஜம் என்று எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். உங்கள் சக்திகளைஎதிர்மாறான பல துறைகளில் அடிக்கடித் தாவி சிதறடிக்காதீர்கள். தொடர்ந்து ஈடுபாடு குறையாமல் செயல்படுங்கள். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள். நீங்களாக ஏற்றுக் கொள்ளாத வரை தோல்வி சாசுவதமல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள். விதியின் நாயகனான இறைவன் திறமையை உங்களுக்குத் தந்திருக்கிறார் என்றால் அது நீங்கள் வெற்றி பெறவே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top