ஒரு பணக்காரர் துறவியிடம் போனார்.
அவரிடம், “”மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,” என்றார்.
பணக்காரரோ பெரிய கருமி.
“”பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?” என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து,
“”நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,” என்றார்.
அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான்.
அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர்.
“”வீட்டுக்கு போவதற்குள் இந்த பழங்கள் அழுகி விடுமே! இதைப் போய் தானம்செய்கிறாராக்கும்,” என்று எண்ணிய வேலைக்காரி, அங்குள்ள பண்ணையில் இருந்தபால் கறப்பவனிடம் கொடுத்து, “”இவற்றை மாட்டுக்கு கொடுங்கள்,” என்றாள்.
“”அழுகும் நிலையிலுள்ள பழத்தை மாட்டுக்கு கொடுத்தால் ஆகாது,” என்ற அவன் அவற்றை விட்டெறிந்தான்.
தன் கருமித்தனத்தால் பணக்காரரும் செல்வத்தை இழந்தார்.
மற்றவர்கள் மனம் குளிரும் வகையில் தானம் செய்தால் தான் புண்ணியம்.தானத்திலும் கருமித்தனம் கூடாது. புரிகிறதா!