எப்போதும் இளமையாக இருக்க…
தினமும் இளநீர் குடியுங்கள்!!!
தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக்கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்.இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும்.
இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர் பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து, காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள கனிமங்கள் உடலுக்கு நல்லது.
விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால், இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள்.
டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம் ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள்.
வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.