இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு.
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.
இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.