Home » சிறுகதைகள் » புண்ணியம் வேண்டுமா?
புண்ணியம் வேண்டுமா?

புண்ணியம் வேண்டுமா?

ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ‘ஐயா… என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக்கொண்டிருக்கிறேன்…’ என்றார்.
‘பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி,பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்…’என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்குவாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.
தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும்,போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.
எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்காரவைத்தான். ‘புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்…’ என்று சொல்லி,அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, ‘இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே…’ என்று கேட்டான்.
அதற்கு எமதர்மன், ‘இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்…’ என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, ‘சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவிசெய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்…’ என்று சொல்லி,எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், ‘என் பணமும்அதில் சேரட்டும்…’ என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top