சிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொள்வேன். அதை கையில் வைத்து ஆட்டியபடி எனது அம்மாவுடன் செல்லுவேன். பின்னர் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு முறை புது பிளான்ட் ஓபன் செய்ய பூஜை போட்டபோது வெளிநாட்டில் இருந்து வந்தவரிடத்தில் குத்து விளக்கு ஏற்ற சொன்னபோது அவரது உயரம் இருந்ததை பார்த்து வியந்து விளக்கேற்றினார். இப்படி அவ்வப்போது குத்துவிளக்கு என்பது நமது கலாசாரத்துடனும், என்னுடைய வாழ்க்கையிலும் இருந்து வந்தது. ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் குத்துவிளக்கை தேடி ஒரு பயணம் போக போகிறேன்!
விளக்கு வகைகள் : அகல் விளக்கு, குத்து விளக்கு, சட்ட விளக்கு, நாகாசு குத்துவிளக்கு, நந்தி அடுக்கு விளக்கு, பாவை விளக்கு (சிற்பம்), அஷ்டோத்திர விளக்கு, கிளை விளக்கு, கேரள விளக்கு, தொங்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு
நாச்சியார்கோவிலில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் ஐந்து முக அமைப்பு கொண்டது. கேரளாவில் உற்பத்தியாகும் விளக்குகள் நான்கு முக அமைப்பை கொண்டது. ஐந்து முக அமைப்பும், நாகாசு வேலைப்பாடும் கொண்டதால் நாச்சியார்கோவில் குத்துவிளக்குக்கு வீடுகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் தனி மகத்துவம் உண்டு. நாச்சியார்கோவில் குத்துவிளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது.
இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மாமண்டூர் (ஆரணி பக்கம்) மட்டுமே இந்த பித்தளையின் மூல பொருட்கள் கிடைக்கின்றன, தூத்துக்குடியில் சில இடங்களிலும் கிடைப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த பித்தளையை தயாரித்து அதை டியுப் போன்று இங்கு வருகிறது, அதை இந்த நாச்சியார் கோவிலில் உருக்கி குத்துவிளக்கை செய்கிறார்கள்.
குத்து விளக்கு செய்யும்போது மிகவும் முக்கியம் என்பது அதன் டிசைன். அது முடிவு ஆனவுடன் அச்சு செய்கிறார்கள். அடி பாகம், நடு பாகம், மேல் பாகம் மற்றும் அன்ன பட்சி டிசைன் என்று நான்கு அச்சு செய்து கொள்கின்றனர். முதலில் மண்ணை (ஸ்பெஷல் மண்) ஒரு சமதளமாக ஆக்கி அதில் இந்த அச்சை வைத்து எடுக்கின்றனர். அச்சு நன்கு பதிந்தவுடன் வெளியே எடுத்து அதை போலவே அடுத்த பாகம் செய்கின்றனர். பின்னர் இரண்டு பாகங்களையும் சேர்த்து விடுகின்றனர். இப்போது பித்தளையை உருக்க வேண்டும் ! பித்தளை என்பது இவர்களுக்கு பல வழிகளில் கிடைக்கிறது….. ஒன்று உடைந்த பித்தளைகள் (ஸ்க்ராப்), பித்தளை ராட் அல்லது பார் என்று. இதைதான் உருக்கி அந்த அச்சின் உள்ளே ஊற்றுகின்றனர்.
அது முடிந்தவுடன் பாலீஷ் செய்யாமல் விட்டால் கையை கிழிக்குமாம். இதனால் அவர்கள் அதை கொண்டு சென்று பாலீஷ் செய்து எனக்கு தந்தபோது சிறிது நேரத்திற்கு முன்பு நான் பார்த்த பழைய சாமான் போல இருந்ததா இப்போது எனது கையில் பளபளக்கிறது என்று ஆச்சர்யம் மேலோங்கியது. அதை அவர்கள் வாங்கி கீழே கலர் செய்தனர். இந்த கலர் அவர்களுக்கு ஒரு அடையாளம் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீடு இருக்கிறது என்பதும் புரிந்தது. இப்படி நூற்றுக்கணக்கில் என் முன்பு குத்துவிளக்கு தயாராகி கொண்டு இருந்தது. பின்னர் என்னை அவர்கள் குத்துவிளக்கு கோடௌன் கூட்டி சென்றனர். அதுவரை எப்படி குத்துவிளக்குகளை அடுக்கி வைப்பார்கள் என்பது தெரியாது இருந்தது….. உள்ளே சென்று பார்த்தபோது அழகாக சைஸ் வாரியாக நன்கு அடுக்கி வைத்து இருந்தது கண்டு மகிழ்ந்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீடு, அது தொழில் சார்ந்து இருந்தது ! இரண்டு அடிக்கு மேல் உள்ள விளக்குகள் பெரும்பாலும் எடை அளவில் விற்பனையாகிறது. குத்துவிளக்கு ஒரு கிலோ ரூ.600 லிருந்து ரூ.650 வரை விற்பனையாகும்.