அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,
ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார்
சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல்,
உற்றது உரைத்தல், உறுவது கூறல்,
இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப
நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386)
பாடியவர்: பவணந்தி முனிவர்
கேள்விகள் ஆறு வகைப்படும். இந்த ஆறையும் புலவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்:
1. அறி வினா (பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார், ‘இந்தியாவின் தலைநகரம் எது?’)
2. அறியா வினா (பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி. உதாரணமாக, மகன் தாயைக் கேட்கிறான், ‘அம்மா, இன்னிக்கு என்ன டிஃபன்?’)
3. ஐயுறல் வினா (சந்தேகமாகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?’ )
4. கொளல் வினா (ஒன்றைப் பெறுவதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’)
5. கொடை வினா (ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? வெறும் காலோட நடக்கறே? உன் காலுக்குச் செருப்பு இல்லையா?’)
6. ஏவல் வினா (ஏவுதல் / கட்டளை இடுதல் பொருட்டுக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘என்னய்யா? சாப்டாச்சா?’)
*
அதேபோல், பதில்கள் ஆறு வகைப்படும். இதில் முதல் மூன்றைவிட, அடுத்து வரும் ஐந்து மிகவும் சிறந்தவை:
1. சுட்டு விடை (ஒன்றைச் சுட்டிக்காட்டிச் சொல்வது, உதாரணமாக, ‘அதோ அந்த வழியா நடந்தா ஆத்தங்கரைக்குப் போகலாம்’)
2. மறை விடை (எதிர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்யமாட்டேன்’ என்ற பதில்)
3. நேர் விடை (நேர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செய்வேன்’ என்ற பதில்)
4. ஏவல் விடை (ஏவுதல் / கட்டளை இடுதல். உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நீயே செய்’ என்ற பதில்)
5. வினாதல் விடை (ஒரு கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே கேட்பது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா எனக்கு என்ன தருவே?’ என்ற பதில்)
6. உற்றது உரைத்தல் விடை (நடந்ததைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘நேத்துலேர்ந்து எனக்கு ஒரே தலைவலி’ என்ற பதில்)
7. உறுவது கூறல் விடை (இனிமேல் நடக்கப்போவதைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற கேள்விக்கு, ‘செஞ்சா என் உடம்பு வலிக்கும்’ என்ற பதில்)
8. இனமொழி விடை (நேரடிப் பதில் சொல்லாமல் அதோடு தொடர்புடைய இன்னொரு விஷயத்தைச் சொல்வது. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என்ற பதில்)
துக்கடா
◾’இந்த உரையே துக்கடமாதிரிதான் இருக்கிறது. இன்னும் எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் எழுதப்போகிறானா?’ என்று டென்ஷனாகாதீர்கள். ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்
◾‘நேர்மறை எண்ணங்கள்’ என்று படித்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து, அப்படி எழுதுவது சரியல்ல, ‘நேர் எண்ணங்கள்’ போதும்
◾உதாரணமாக, இந்த இரண்டாவது சூத்திரத்தில் ’மறை, நேர்’ என்ற பகுதியைக் கவனியுங்கள். ‘நேர்’ என்றால் ‘நேர்’தான், குழப்பம் இல்லை, அதற்கு oppositeஆக ‘எதிர்’ என்று சொல்லாமல் ‘மறை’ என்று பயன்படுத்துகிறார் பவணந்தி முனிவர், தமிழில் இதன் அர்த்தம், எதிர்மறுத்தல்
◾ஆக, ‘எதிர்மறை’ என்றால், கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருமுறை ‘எதிர்’க்கிறோம். அதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. ‘நேர்மறை’ என்றால்? ‘நேர் எதிர்’ என்று அர்த்தமா?