Home » சிறுகதைகள் » குருவிற்கே குருவானவன்!!!
குருவிற்கே குருவானவன்!!!

குருவிற்கே குருவானவன்!!!

வேடன் ஒருவனுக்கு, மற்றவர்களைப் போல படிப்பறிவு இல்லையே, கடவுளை அறியும் அறிவும் இல்லையே, காட்டிலுள்ள முனிவர்களைப் போல் மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடிவதில்லையே என்று பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில், எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.ஒருமுறை ஒரு துறவியைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். தன்னை நாடி வரும் அன்பர்களிடம் பெறும் தட்சணையும், பால், பழமும் பெற்று உண்டு கொழுத்து உடம்பை நன்கு வளர்த்திருந்தார். அவரது உள்ளத்தில் அருள்நாட்டமே இல்லை. அவரை வேடன் பணிந்தான். குருவே! நான் வேடனாய் பிறந்தும் மாமிசம் உண்பதில்லை. சிவனருளை எண்ணி எண்ணி தூக்கம் வருவதில்லை. அருள் மார்க்கத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். எனக்கு நல்வழி காட்டுங்கள். என்று வேண்டினான்.

வேடனின் வேண்டுதலைக் கேட்ட துறவி, கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன்? பக்திக்கும் உனக்கும் வெகுதூரம். காட்டில் கிடைக்கின்ற தேன்,பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனிவகைகளை எனக்கு கொண்டு வந்து கொடு, உனக்கு உபதேசம் செய்வது பற்றி பிறகு பார்க்கலாம், என்று சொன்னார். எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற ஆவலில் வேடன் மீண்டும் காட்டிற்கு சென்றான். குருநாதர் கேட்ட கனிவகைகள், தேன், தினைமாவை தட்சிணையாக எடுத்துக் கொண்டு மடத்தை வந்தடைந்தான். குருவினை வணங்கி, ஐயனே! தாங்கள் கேட்டதை கொண்டு வந்து இருக்கிறேன். பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள். என்று வேண்டினான். ஏ! வேடனே! சிவாயநம என்று தினமும் ஜபம் செய். உனக்கு விரைவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால், ஒரு நிபந்தனை. அவ்வப்போது எனக்கு காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உனக்கு ஈசனருள் கிடைக்காது என்று சொல்லி அனுப்பினார்.காட்டிற்கு திரும்பிய வேடன் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். தூக்கத்திலும் அவன் சிவாயநம என்றே உளறுவான். தனக்கு உபதேசித்த குருவின் மீது அலாதி நம்பிக்கை கொண்டிருந்தான். அவர் சொன்னபடி நிச்சயம் தனக்கு ஈசனின் காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. ஒரு நாள், சிவன் அவனுக்கு ஆசியளிப்பது போல கனவு கண்டான். அன்று முதல் அவனுக்கு தெளிந்த ஞானம் உண்டாயிற்று. பாசபந்தங்களை விட்டான். காண்பதெல்லாம் சிவ காட்சியாகவே தென்பட்டது. தன் குருநாதரான துறவியைக் காணச் சென்றான். தன் சிவானுபவத்தை குருவிடம் சொன்னான். வேடனின் வார்த்தைகள் அவ்வளவும் உண்மை என்பதை துறவி உணர்ந்தார். அவனது முகத்தில் தெய்வீக ஒளி இருந்தது. உண்மை ஞானம் உள்ளம் சார்ந்தது என்ற உண்மையை துறவி உணர்ந்தார். குருவாக இருந்து பலகாலம் ஆசாபாசங்களில் சிக்கிக் கிடந்த அற்பனாகிய நான் இனிமேல் குருவல்ல! என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீ தான் எனக்கு குரு! என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் சுவாமி! என்று வேடனின் கால்களில் விழுந்து, தன்னைப் பற்றிய உண்மையையும் கூறி மன்னிப்பும் கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top