சிந்திக்க தெரிந்த உணர்வாளர்கள் நிலை எப்போதும் எக்காலத்தும் அந்தோ பரிதாபம்தான். ஏசு, புத்தர், டார்வின், சாக்ரடீஸ், கலீலியோ முதல் இன்றைய ஸ்டீபன் ஹாக்கிங் வரை எத்தனை எத்தனை விஞ்ஞானிகள், ஞானிகள்? மனித குலத்திற்கு தொண்டாற்ற தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், சிந்தனையாற்றல் அற்ற மற்றும் சுயநலப்போக்குள்ள மக்களால் பட்ட துன்பங்களுக்கு எல்லையே இல்லை.
ஏனெனில் நிர்வாகமும், அதிகாரமும் பல சமயங்களில் சிந்தனையாற்றல் அற்ற சுயநலமிகளிடம் சென்றுவிடுகின்றன. இந்த சுயநல ஒட்டுண்ணிகள் நிர்வாகம் என்பதே பிறரை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதுதான் என்ற தங்களின் சொந்த இலக்கணத்தின் அடிப்படையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கொ்ண்டு பணம், புகழ் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானலும் செல்வதற்கு தயாராகி விடுகிறார்கள். தாங்கள் சொல்வதை எதிர் கேள்வி கேட்காமல் செய்து முடிக்கும் அடிமை அறிவு கொண்டவர்களை மட்டுமே இவர்கள் உடன் வைத்துக்கொள்வர்.
இதனால் பல சமயங்களில் சிறந்த சிந்தனையாளர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. சிறந்த சிந்திக்கும் ஆற்ற்ல் பெற்ற இளைஞர்கள், படித்தவர்கள் மிகுந்த மனவேதனையோடு ஒதுங்கி வெளியேறி விடுகிறார்கள். ஒரு அமைப்பிற்கு இளைஞர்கள் மிகப்பெரிய பலம். இளைஞர்களை அரவணைத்துச் செல்லாத் அமைப்பு அழிவுப்பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பது திண்ணம். விவேகானந்தர் நூறு இளைஞர்களைத் தானே கேட்டார். மேலும்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
என்ற வள்ளுவனின் வாக்கையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
நிர்வாகம் என்பது அடக்கி ஆள்வது அல்ல. ஒருவரிடத்தில் உள்ள் முழுமையான திறமையை, ஆற்றலை வெளிக்கொண்டு வருவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொள்ளாத் எந்த அமைப்பும், நிறுவனமும் காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்பது சத்தியம்.