ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான்.
“”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார்.
அரசனுக்கு புரியவில்லை.
“”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார்.
இளவரசியோ,””இவரைத் தவிர வேறு யாரையும் கனவிலும் கூட நினைக்க மாட்டேன்,” என்று அவரை பின்தொடர்ந்தாள்.
அரசனும், துறவியும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
எப்படியோ சந்நியாசி தப்பி விட்டார். பின் தொடர்ந்து வந்த துறவியையும், அரசனையும் பார்த்த ராஜகுமாரி, தன் கதையைக் கூறினாள். அவர்களும் ஏதும் அறியாதவர்கள் போல கேட்டனர். அப்பொழுது இரவாகி விட்டதால், அங்கேயே தங்கிவிட்டு, அடுத்தநாள் காலை செல்ல தீர்மானித்தனர்.
அவர்கள் தங்கிய இடத்தில் இருந்த ஆலமரத்தில், புறா ஒன்று தன் பெண் துணையோடும், குஞ்சுகளோடும் குடும்பம் நடத்தி வந்தது.
இவர்களைக் கண்டதும், ஆண்புறா “”நமது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். இரவோ, ரொம்பவும் குளிராக இருக்கிறது.
குளிர் காய இவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றது. மேலும் குச்சிகளையும் எடுத்து வந்து அவர்கள் அருகில் போட்டது.
அவர்கள் அவற்றை அருகில் கிடந்த சருகுகளுடன் சேர்த்து “தீ’ மூட்டி குளிர் காய்ந்தனர்.
அப்போது ஆண் புறா, மற்ற புறாக்களை நோக்கி, “”நாமே இல்லறத்தில் இருப்பவர்கள். விருந்தாளிகளை சுகப்படுத்த வேண்டியது நமது கடமை. நம்மிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. என் உடம்பைக் கொடுத்தாவது இவர்களின் பசியைப் போக்குகிறேன்,” என்று சொல்லி, சற்றும் தாமதிக்காமல் எரியும் தீயில் விழுந்து உயிர்விட்டது. இந்த உண்மை தெரியாத அரசன் அதை எடுத்து சாப்பிட முற்பட்டான்.
அப்போது பெண்புறா, “”என் கணவரால் மட்டும் இந்த மூவரின் பசி எப்படி அடங்கும்? கணவன் செய்த தர்மத்தை மனைவி முழுதாக செய்ய வேண்டுமல்லவா!” என்றபடி தானும் தீயில் விழுந்தது.
இப்படி இரண்டு புறாக்களும் நெருப்பில் விழவே, அவர்கள் மூவரும் திகைப்படைந்தனர்.
துறவி, அந்த இரண்டு புறாக்களின் இல்லற தர்மத்தைப் பற்றி போற்றி, பாராட்டினார்.
அப்போது குஞ்சு புறாக்கள் இரண்டும், “”பெற்றோர் செய்த தான, தர்மத்தை பின்பற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை,” என்று சொல்லி அவையும் தீயில் விழுந்து மாண்டன. தர்ம ஆத்மாக்களான, அந்த புறாக்களை தின்ன அவர்களுக்கு மனம் வரவில்லை.
அடுத்தநாள் இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, அரசனும் துறவியும் தமது ஊர் நோக்கி திரும்பினர். வழியில் துறவி அரசனிடம், “”சந்நியாசி என்றால், சுயம்வர சந்நியாசியைப் போல தன்னை விரும்பி வலிய வந்த பெண், ராஜகுமாரி என்று தெரிந்தும் ஏற்காதது போல் இருக்க வேண்டும். இல்லறத்தான் என்றால், புறாக்களைப் போல் தங்கள் உயிரையும் ஒருவருக்கொருவர் கொடுக்கத் தயங்கக்கூடாது,” என்று விளக்கினார். அரசனும் உண்மையை உணர்ந்தான்.