Home » படித்ததில் பிடித்தது » மகான் யோகி ராம்சுரத்குமார்
மகான் யோகி ராம்சுரத்குமார்

மகான் யோகி ராம்சுரத்குமார்

பகவான் யோகிராம் சுரத் குமார்

கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம ஜபமே என்று கூறி, ராம நாம ஜபத்தின் மூலமே ஆன்மிகத்தின் மிக உயரிய நிலையை எட்டியவர் பகவான் யோகி ராம்சுரத் குமார். கங்கைக் கரையை ஒட்டியுள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் – குசுமா தேவி தம்பதியினருக்கு 1918ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1 மகவாகத் தோன்றினார் யோகி ராம் சுரத் குமார். கங்கைக்கரைக்கு அடிக்கடி சாதுக்கள் பலர் வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும், அவர்களது ஆன்மிகஅனுபவங்களைக் கேட்பதும் ராம் சுரத் குமாருக்கு மிக விருப்பமானதாக இருந்தது. அது, அந்தச் சிறுவயதிலேயே ஞான வேட்கையை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது

ஒரு சிறு பறவையின் மரணம் ராம்சுரத்தின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியது. வாழ்க்கையின் நிலையாமையை அவருக்கு உணர்த்தியது. ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. இமயம் முதல் குமரி வரை சுற்றினார். கபாடியா பாபா உள்பட பல சாதுக்களின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. ராம் ரஞ்சனி தேவி என்பவருடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. ஆனாலும் மனம் துறவறத்தையே நாடியது. 1947ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்தார். ரமணரின் அருள் தரிசனம் பெற்றார். பின்னர் சில நாட்கள் அங்கே கழித்தவர் மீண்டும் ஊர் திரும்பினார்.

யோகி, தன் குருநாதர்களுடன்

சில வருடங்கள் கழித்து மீண்டும் ஆன்மிக தாகம் பெருக பாண்டிச்சேரிக்கு வந்தார். மகா யோகி அரவிந்தரின் தரிசனம் பெற்றார். ஸ்ரீஅன்னையின் அருளும் ஆசியும் அவருக்குக் கிடைத்தது. பின்னர் அண்ணாமலை சென்று பகவான் ரமணரை தரிசித்தார். சக சாது ஒருவரின் மூலம் கேரளாவின் கஞ்சன்காட்டில் உள்ள ’அனந்தாஸ்ரமம்’ பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்றார். சுவாமி ராமதாஸரின் தரிசனம் பெற்றார். சுவாமி ராமதாஸரே தனது குரு என்பதை உணர்ந்தார். ராமதாஸர் ஒரு நாள், ராம் சுரத் குன்வரின் காதில் ‘ஓம் ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய ராம் ஜெய ராம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை ஓதி, ’இதையே குரு உபதேசமாக எண்ணி 24 நேரமும் ஜெபித்து வா!’ என்று கூறி ஆசிர்வதித்தார். குருவின் வாக்கை திருவாக்காக ஏற்று நாம ஜபத்தைத் தொடங்கினார் ராம் சுரத் குன்வர். லட்சக்கணக்காக நாம ஜபம் செய்து அதன் மூலமே ஆத்மானுபூதி பெற்றார். குடும்பத்தைத் துறந்து விட்டு திருவண்ணாமலையை வந்தடைந்தார். அன்று முதல் அண்ணாமலையையே தனது இருப்பிடமாகக் கொண்டு, அருணாசலரையே தனது தந்தையாகக் கொண்டு தூய தவ வாழ்வு வாழ ஆரம்பித்தார்.

யோகியார்

கையில் ஒரு பனையோலை விசிறி, கொட்டாங்குச்சி, நிலையான தங்குமிடம் என்று எதுவுமில்லாமல் அண்ணாமலையில் அலைந்து திரிந்தார். பின்னர் தேரடி வீதியில் ஒரு சிறு வீட்டில் தங்கினார். அவரது பெருமையை அறிந்த பலரும் அவரை நாடி வந்து தரிசித்து ஆன்ம உயர்வு பெற்றனர்.

இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி. இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம். அதுவே சரணாகதி” என்று பக்தர்களிடம் நாம ஜபத்தை வலியுறுத்திய மகான் யோகி ராம் சுரத் குமார், புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 20, 2001 அன்று மகாசமாதி அடைந்தார். இன்றும் அவரது சமாதித் தலத்திலிருந்து தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு ஆன்ம ஒளி காட்டிக் கொண்டிருக்கிறார் யோகி.

யோகிராம் சுரத்குமார! யோகிராம் சுரத்குமார!
யோகிராம் சுரத்குமார! ஜெய குரு ராயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top