Home » பாரதியார் » பாரதியார் கவிதைகள் – நெஞ்சு பொறுக்கு திலையே!!!
பாரதியார் கவிதைகள் – நெஞ்சு பொறுக்கு திலையே!!!

பாரதியார் கவிதைகள் – நெஞ்சு பொறுக்கு திலையே!!!

நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார் – சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் – இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே – ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை – இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் – அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் – இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? – ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் – அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் – ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் – இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே – இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் – இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் – பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top