Home » விவேகானந்தர் » ராஜ யோகம் பகுதி – 15

ராஜ யோகம் பகுதி – 15

4. கைவல்ய பாதம்

முக்தி

1. ஜன்மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய

பிறவி, ரசாயன மருந்துகள், மந்திர ஆற்றல், தவம், சமாதி, இவற்றின் மூலம் சித்திகள் கிடைக்கின்றன.

சிலவேளைகளில் ஒருவன் பிறக்கும்போதே சித்திகளுடன் பிறக்கலாம். இவை முற்பிறவிகளில் அடையப் பெற்றவை. அவற்றின் பயனை அனுபவிப்பதற்கேபோல் இந்த முறை அவர்கள் பிறக்கின்றனர். சாங்கியத் தத்துவத்தின் தந்தையாகிய கபிலமுனிவர் பிறவிச் சித்தர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் என்ற சொல்லுக்கு வெற்றி அடைந்தவர் என்று பொருள்.

இந்தச் சித்திகளை ரசாயன முறைகளிலும் பெறலாம் என்று யோகிகள் கூறுகின்றனர். ரசாயன சாஸ்திரம் அதாவது வேதியியல் முதலில் ரசவாதத்தில் தொடங்கியது என்பது எல்லோருக்கும் தெரியும். பரிசமணி காயகல்பம் முதலியவற்றைத் தேடி மக்கள் அலைந்தனர். இந்தியாவில் ரசாயனர் என்று ஒரு பிரிவினர் இருந்தனர். லட்சியம், ஞானம், ஆன்மீகம், மதம் எல்லாம் வேண்டியது தான். ஆனால் இவற்றையெல்லாம் அடைவதற்கான ஒரே கருவி உடம்பு மட்டுமே என்பது இவர்கள் கூற்று. உடம்பு விரைவாக அழியுமானால் லட்சியத்தை அடைவதற்கான காலம் அதிகமாகும். உதாரணமாக, ஒருவன் யோகப் பயிற்சி செய்ய விரும்புகிறான். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். சிறிது முன்னேறும் முன்பே இறந்துவிடுகிறான். மீண்டும் பிறக்கிறான். ஆரம்பிக்கிறான். இறக்கிறான். இவ்வாறு பிறப்பதிலும் இறப்பதிலுமே அதிகக் காலம் செலவழிந்துவிடும். எனவே உடம்பை அதிக வலிமையாகவும் திடமாகவும் செய்து, பிறப்பு, இறப்பு இல்லாமல் செய்ய முடியுமானால், ஆன்மீகத்தில் முன்னேற இன்னும் அதிகக் காலம் கிடைக்கும். ஆதலால் முதலில் உடலை உறுதியாக்குங்கள் என்று ரசாயனர்கள் கூறுகிறார்கள். உடம்பை அழிவில்லாமல் வைத்திருக்க முடியும் என்று அவர்கள் துணிந்து சொல்கிறார்கள். உடலை உண்டாக்குவது மனம் என்றால், ஒவ்வொரு மனமும் எல்லையற்ற ஆற்றல் வெளிப்படுகின்ற ஒரு வழி மட்டுமே என்பது உண்மையானால், அந்த ஒவ்வொரு வழியும் எல்லையற்றதிலிருந்து பெறும் சக்திக்கு ஓர் எல்லையே இருக்கக் கூடாது. நமது உடலை நாம் ஏன் எப்போதும் வைத்துக் கொள்ளக் கூடாது. நமது உடலை நாம் ஏன் எப்போதும் வைத்துக் கொள்ளக் கூடாது? நமக்கு உரிய எல்லா உடல்களையும் நாமே உருவாக்க வேண்டும். இந்த உடல் இறந்தால், உடனே மற்றொன்றைச் செய்ய வேண்டியுள்ளது. அப்போது நாம் செய்ய முடியுமானால், இப்போதே, இங்கேயே இந்த உடம்பிலிருந்து வெளியேறாமலேயே ஏன் செய்ய முடியாது? கோட்பாடு சரியாகத்தான் இருக்கிறது. இறந்த பிறகும், நாம் வாழவும் வேறு உடல்களை உருவாக்கவும் முடியுமானால், இந்த உடம்பை முற்றிலும் அழிக்காமலேயே, தொடர்ந்து சில மாற்றங்களை மட்டும் செய்வதன் மூலம் இங்கேயே ஏன் வேறு உடல்களைச் செய்யலாகாது என்று ரசாயனர்கள் கேட்கின்றனர். பாதரசத்திலும் கந்தகத்திலும் மிகவும் அற்புதமான ஆற்றல் உள்ளது எனவும், இவற்றிலிருந்து செய்யும் மருந்துகள் மனிதனின் உடலை அவன் விரும்பிய காலம்வரை அழியாமல் இருக்கச் செய்யும் என்றும் அவர்கள் நினைத்தனர்.

சில மருந்துகளை உண்பதால் ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆற்றல்கள் கிடைக்கும் என்று வேறு சிலர் நம்பினர். இக்காலத்திலுள்ள மிக அற்புதமான மருந்துகள் பலவும் குறிப்பாக மருந்தில் உலோகங்களைப் பயன்படுத்துவதும் ரசாயனர்கள் கண்டுபிடித்தவையே. தங்கள் குருமார்கள், பழைய உடலிலேயே வாழ்வதாக யோகிகளுள் ஒருசாரார் நம்புகின்றனர். யோக நெறியின் தந்தையான பதஞ்சலி முனிவரும் இதை மறுக்கவில்லை.

சொற்களின் வலிமை: மந்திரங்கள் எனப்படும் சில புனிதமான சொற்கள் உள்ளன. குறிப்பிட்ட நியதிகளைப் பின்பற்றி அவற்றை ஜபித்தால் அசாதாரண ஆற்றல்களைக் கொடுக்க வல்லவை அவை. இதுபோன்ற எத்தனையோ அற்புதங்களுக்கிடையில் இரவும்பகலும் நாம் வாழ்கிறோம். ஆனால் அவற்றை நாம் நினைப்பதே இல்லை. மனிதனின் ஆற்றலுக்கும் சொற்களின் வலிமைக்கும் மனத்தின் வலிமைக்கும் எல்லையே இல்லை.

தவம்: ஒவ்வொரு மதத்திலும் தவங்களும் விரதங்களும் கடைப்பிடிக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். இவற்றை மிகத் தீவிரமாக அனுஷ்டிக்கின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் கைகளை உயரே தூக்கி வைத்துக் கொண்டு நிற்கின்றனர். இறுதியில் கை உயிரற்று மரத்துப் போய்விடுகிறது. சிலர் இரவும்பகலும் தொடர்ந்து நிற்கின்றனர். இதன் விளைவாக கால் வீங்கி, கட்டைபோல் மரத்துப்போய்விடுகிறது. அதன்பிறகு அவர்கள் உயிர் வாழ்ந்தாலும் கால்களை மடக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்கின்றனர். ஒருசமயம் இவ்வாறு கைகளை உயர்த்தி வைத்திருக்கும் ஒருவரை நான் கண்டேன். இப்படிச் செய்வது ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். அது ஒரு பயங்கர சித்திரவதை என்று அவர் பதில் அளித்தார்.வலி பொறுக்க முடியாமல், ஓர் ஆற்றில் சென்று நீரில் மூழ்கி இருந்தபின் அவருக்கு வலி சிறிது குறைந்ததாம். ஒரு மாதத்திற்குப் பின் தாம் அதிகம் துன்புறவில்லை என்று சொன்னார். இத்தகைய பயிற்சிகளால் சித்திகள் வருகின்றன.

சமாதி: ஒருமைப்பாடே சமாதி, உண்மையில் யோகம் என்பது இதுவே. இந்த விஞ்ஞானத்தின் உயர்தனிக் கொள்கையும் இதுதான். மிகச் சிறந்த வழியும் இதுவே. முன்பு கூறப்பட்டவை இரண்டாம் படியிலுள்ளவை. அவற்றின்மூலம் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியாது. மன நிலையில், ஒழுக்க நிலையில், ஆன்மீக நிலையில் நாம் எதை வேண்டுமானாலும் அடைவதற்கு வழி சமாதியே.

2. ஜாத்யந்தரபரிணாம ப்ரக்ருத்யா பூராத்

பிரகிருதி உட்புகுந்து நிறைப்பதால் ஓர் இனம் மற்றோர் இனமாக மாறுகிறது.

பிறப்பு, சிலவேளைகளில் மருந்துகள், தவம் இவற்றின் மூலம் ஒருவனுக்குச் சித்திகள் வாய்க்கும் என்கிறார் பதஞ்ஜலி. உடலை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இப்போது அவர் ஓர் இனத்திலிருந்து மற்றோர் இனமாக மாறுவதற்கான காரணத்தைக் கூறுகிறார். பிரகிருதி உட்புகுந்து நிரப்புவதால் என்கிறார் அவர். அடுத்த சூத்திரத்தில் இதைத் தெளிவுபடுத்துகிறார்.

3. நிமித்தமப்ரயோஜகம் ப்ரக்ருதீனாம் வரண பேதஸ்துதத ஷேத்ரிகவத்

இயற்கையின் மாறுபாட்டிற்கு நற்செயல்களும் தீயசெயல்களும் நேர்க்காரணங்கள் அல்ல. நீரின் போக்கிலுள்ள தடையை விவசாயி நீக்கும்போது அது தன் சொந்த இயல்பாலேயே பாய்வதுபோல், செயல்களும் இயற்கையின் பரிணாமத்திற்கான தடைகளை நீக்குகின்றன.

வயல்களுக்குப் பாய வேண்டிய நீர் ஏற்கனவே வாய்க்காலில் இருக்கிறது. மடைகளால் தடுக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான், விவசாயி இந்த மடைகளைத் திறந்ததும், புவியீர்ப்பு விசையால் நீர் தானாகப் பாய்ந்து செல்கிறது. அதுபோல் எல்லா முன்னேற்றமும் ஆற்றல்களும் ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்கனவே உள்ளன; நிறைநிலை, மனிதனின் இயல்பிலேயே உள்ளது. அது தன் போக்கில் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது அவ்வளவுதான். யாராவது அந்தத் தடைகளை நீக்கினால் இயற்கை முன்னே பாய்கிறது; அவன் தன்னிடம் ஏற்கனவே உள்ள ஆற்றல்களை அடையப் பெறுகிறான்; தீயவர் என்று நாம் கருதுபவர்கள். தடை நீக்கப்பட்டு இயற்கை பாய்ந்தவுடன் மகான்களாகி விடுகின்றனர். நிறைநிலையை நோக்கி இயற்கையே நம்மை இட்டுச் செல்கிறது. உரிய காலத்தில் அது எல்லோரையும் அங்குக் கொண்டு சேர்க்கும். ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் எல்லாம் தடைகளை நீங்குவதற்காகவே, தடைகள் நீங்கினால் மட்டுமே போதும், நமது பிறப்புரிமையாகிய நமது இயல்பாகிய நிறைநிலையின் வாசல்கள் திறக்கின்றன.

பண்டைய யோகிகளின் பரிணாமக் கொள்கை, தற்கால ஆராய்ச்சிகளின் வெளிச்சத்தில் நன்கு விளங்கும். ஆனாலும் பண்டைய யோகிகளின் விளக்கம் சிறந்தது. தற்கால விஞ்ஞானிகள் பரிணாமத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். ஒன்று, வாழ்க்கைத் துணை தேர்வு. இரண்டாவது, தகுதி மிக்கதே வாழ முடியும் என்ற கொள்கை ஆனால் இவை போதுமானவை அல்ல. உணவு தேடுதல், வாழ்க்கைத் துணை தேடுதல் ஆகிய இரண்டுமே தேவைப்படாத அளவிற்கு மானிட அறிவு முன்னேறிவிட்டதென்று வைத்துக்கொள்வோம். அப்போது பரிணாமமே நின்றுபோய், மனித முன்னேற்றமும் நின்றுபோய் உயிர்கள் அழிந்துபோகும் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுவார்கள். ஒவ்வொரு கொடியவனின் மனச்சாட்சிக்கு ஒரு தவறான சமாதானம் உண்டாவதுதான் இந்த வாதத்தின் விளைவு. கொடியவர்களையும் தகுதியற்றவர்களையும் (தகுதியைத் தீர்மானிக்கின்ற ஒரே நீதிபதிகளும் அவர்களே) கொன்று அழிப்பதன் மூலம் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டு தங்களையும் தத்துவ மேதைகளாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை.

மகத்தான பண்டைய பரிணாமவாதியான பதஞ்ஜலியோ, ஒவ்வோர் உயிரிலும் ஏற்கனவே உள்ள நிறை நிலையை வெளிப்படுத்துவதுதான் பரிணாமத்தின் உண்மை ரகசியம் என்கிறார். இந்த நிறைநிலை தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைக்குப் பின்னால் உள்ள எல்லையற்ற அலை தன்னை வெளிப்படுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கும் போட்டிகளுக்கும் காரணம் நமது அறியாமையே மடையைத் திறந்து, நீருக்கு வழிவிட நமக்குச் சரியான வழி தெரியவில்லை. பின்னால் உள்ள எல்லையற்ற அலை தன்னை வெளிப்படுத்த வேண்டும். இதுவே எல்லா வெளிப்பாடுகளுக்கும் காரணம்.

உயிர்வாழ்வதற்கும் காமத்தைத் தணித்துக் கொள்வதற்குமான போட்டிகள் வெறும் தற்காலிகமானவை. அவை தேவையற்றவை, அறியாமையால் ஏற்பட்ட புறவிளைவு. இந்தப் போட்டிகள் எல்லாமே நின்ற பின்பும் நாம் ஒவ்வொருவரும் நமது இயல்பான நிறைநிலையை அடையும்வரை, இந்தப் பூரணமான இயற்கை நம்மை முன்னே தள்ளிக் கொண்டு செல்லும், ஆதலால் முன்னேற்றத்திற்குப் போட்டி தேவை என்று எண்ணுவது நியாயமல்ல. மிருகத்திடம் மனித சக்தி அடக்கப்பட்டுக் கிடந்தது. கதவு திறந்ததும் அது வெளி வந்தது. அது போன்று மனிதனிடம் தெய்வம் தோன்றா நிலையில் உள்ளது. அறியாமையாகிய சிறையில் அது அடைபட்டுள்ளது. அறிவு சிறையை உடைத்துத் திறக்கும்போது தெய்வம் வெளிப்படுகிறது.

4. நிர்மாணசித்தான்யஸ்மிதாமாத்ராத்

நான் உணர்விலிருந்தே படைக்கப்பட்ட சித்தங்கள் வெளிவருகின்றன.

நாம் செய் நல்ல அல்லது தீய செயல்களாலேயே நாம் துன்புறுகிறோம் என்பது கர்மக் கோட்பாடு. மனிதன் தனது மகிமையை மீண்டும் பெறச் செய்வதே எல்லா தத்துவ சாஸ்திரங்களின் நோக்கம். அனைத்து சாஸ்திரங்களும் மனிதனுடைய ஆன்மாவின் பெருமையையே பாடுகின்றன. அதே மூச்சில் கர்மத்தைப் பற்றியும் போதிக்கின்றன. நற்செயலால் இது விளையும், தீய செயலால் அது விளையுமென்று கூறுகின்றன. ஆனால் இந்த நல்ல மற்றும் தீய செயல்களால் ஆன்மா பாதிக்கப்படுமென்றால் அது ஒன்றுமே இல்லை. புருஷனின் இயல்பு வெளிப்படுவதை தீய செயல்கள் தடுக்கின்றன. நம் செயல்கள் அந்தத் தடைகளை நீக்குகின்றன. புருஷனின் பெருமை வெளிப்படுகிறது. புருஷன் ஒருபோதும் மாறுபடுவதில்லை. நீங்கள் எது செய்தாலும் சரி, அது உங்கள் மகிமையை, உங்கள் சொந்த இயல்பை அழிப்பதில்லை. ஏனெனில் ஆன்மாவை எதனாலும் பாதிக்க முடியாது. ஒரு திரை மட்டுமே அதன் முன்னால் தொங்குகிறது. அது அதன் நிறைநிலையை மூட மட்டுமே செய்துள்ளது. அவ்வளவுதான்.

தங்கள் வினைப் பயன்களை விரைவில் தீர்ப்பதற்காக யோகிகள் காய வியூகங்களை அதாவது பல உடல்களைப் படைத்துக் கொள்கின்றனர். அவற்றின்மூலம் தங்கள் கர்மத்தை அனுபவிக்கின்றனர், இந்த எல்லா உடல்களுக்கும் வேண்டிய சித்தங்களை நான் உணர்விலிருந்தே அவர்கள் படைத்துக் கொள்கின்றனர். அவர்களது மூல சித்தத்திலிருந்து இவை வேறுபட்டிருப்பதால் இவை நிர்மாண சித்தங்கள், படைக்கப்பட்ட சித்தங்கள் எனப்படுகின்றன.

5. ப்ரவ்ருத்திபேதே ப்ரயோஜகம் சித்தமேகமனே கேஷாம்

வெவ்வேறு நிர்மாண சித்தங்களின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், யோகியின் மூல சித்தமே அவற்றை எல்லாம் அடக்கி ஆள்கிறது.

பல்வேறு உடல்களில் செயல்படுகின்ற வெவ்வேறான இந்தச் சித்தங்கள் நிர்மாண சித்தங்கள் எனவும், இந்த உடல்கள் நிர்மாண காயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன; அதாவது படைக்கப்பட்ட சித்தங்கள் மற்றும் படைக்கப்பட்ட உடல்கள். ஜடப் பொருளும் மனமும் வற்றாத இரு களஞ்சியங்கள் நீங்கள் யோகிகளாகும்போது அவற்றை அடக்கி ஆளும் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம். அது எப்போதும் உங்களுடையதாகவே இருந்தது. நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள். யோகியானதும் நினைவிற்குக் கொண்டு வருகிறீர்கள். அதன்பின் அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். விரும்பியவாறு பயன்படுத்தலாம். அண்டம் எந்தப் பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருளாலேயே, படைக்கப்பட்ட சித்தங்கள் ஆக்கப்பட்டுள்ளன. மனம் ஒரு பொருள், ஜடம் வேறு பொருள் என்று சொல்வதற்கில்லை. அவை ஒரே பொருளின் வேறுபட்ட நிலைகள்தான். யோகியின் நிர்மாண சித்தங்களும், நிர்மாண காயங்களும் ஸத்தின் சூட்சும நிலை அதாவது அஸ்மிதை அதாவது நான்- உணர்வினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. எனவே இயற்கையிலுள்ள இந்தச் சக்திகளின் ரகசியத்தை யோகி அறிந்தால், அஸ்மிதையிலிருந்து அவன் பல சித்தங்களையும் உடல்களையும் படைத்துக் கொள்வான்.

6. தத்ர த்யானஜமனாசயம்

பல்வேறு சித்தங்களுள் சமாதியின் மூலம் அடைந்த சித்தமே ஆசையற்றது.

வெவ்வேறு மனிதர்களிடம் நாம் காணும் வெவ்வேறு சித்தங்களுள் பூரண ஒருமைப்பாட்டு நிலையை, சமாதி நிலையை அடைந்த சித்தமே மிக உயர்ந்தது. மருந்து, மந்திரம், தவம் இவற்றால் சித்திகளைப் பெற்றவனுக்கு ஆசைகள் உண்டு. ஆனால் தியானத்தின் மூலம் சமாதி நிலை அடைந்தவனுடைய சித்தம் மட்டுமே ஆசைகள் அற்றது.

7. கர்மாசுக்லாக்ருஷ்ணம் யோகிநஸ்த்ரிவிதமித ரேஷாம்

யோகிகளுக்குச் செயல்கள் வெளுத்திருப்பதுமில்லை. கறுத்திருப்பதில்லை. மற்றவர்களுக்கு அவை வெளுத்தவை. கறுத்தவை, இரண்டும் கலந்தவை என்று மூவகைகளில் உண்டு. யோகி பூரண நிலையை அடைந்த பிறகு, அவனுடைய செயல்களும் அவற்றின் பலன்களும் அவனுக்குத் தளைகளை உண்டாக்காது. ஏனெனில் அவன் ஆசையால் தூண்டப் பெற்று அந்தச் செயல்களைச் செய்யவில்லை. அவன் செயல் புரிந்துகொண்டே போகிறான். நன்மை செய்ய விரும்புகிறான். அதனால் செயல்புரிகிறான். பலனைப்பற்றி எண்ணாததால் அவை அவனிடம் வருவதில்லை. அந்த உயர்நிலையை அடையாத சாதாரண மனிதனிடம் காணப்படும் செயல்கள் கறுப்பு(தீய செயல்), வெளுப்பு(நற்செயல்) இவற்றின் கலப்பு என மூவகைப்படும்.

8. ததஸ்தத்விபாகானு குணானாமேவாபி வ்யக்திர் வாஸனானாம்

இந்த மூவகைச் செயல்களிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் அந்த நிலைக்குப் பொருத்தமான ஆசை மட்டும் வெளிப்படும் (மற்றவை அந்த வேளைக்கு அடங்கி இருக்கும்)

நன்மை, தீமை, கலப்பு, ஆகிய மூவகைச் செயல்களை நான் செய்ததாக வைத்துக் கொள்வோம், நான் இறந்து சொர்க்கத்தில் தேவன் ஆகிறேன். அங்கே தேவ உடலில் இருக்கும்போது எழும் விருப்பங்கள், மனித உடலில் இருக்கும்போது எழும் விருப்பங்களைப்போல் இருக்காது. தேவ உடலுக்கு உணவும் பானமும் வேண்டியதில்லை உண்பது, பருகுவது போன்ற ஆசைகளை எழுப்புவதான எனது கடந்த கால கர்மங்கள், நான் அனுபவித்து முடிக்காத அந்தக் கர்மங்கள் அப்போது என்னவாகும்? நான் தேவனாகும்போது இந்தக் கர்மங்கள் எங்கே போகும்? இந்த விருப்பங்கள் அவற்றிற்குத் தகுந்த சூழ்நிலையில் மட்டும்தான் வெளிப்படும் என்பதே இதற்கு விடை. சூழ்நிலைக்குப் பொருத்தமான விருப்பங்கள் மட்டுமே வெளிப்படும். எஞ்சியவை சேர்த்து வைக்கப்படும். இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவ ஆசைகளும், மனித ஆசைகளும், விலங்கு ஆசைகளும் இருக்கலாம். தேவனின் உடலை எடுத்தால் நல்ல ஆசைகள் மட்டும் வெளிப்படும், சூழ்நிலை அந்த விருப்பங்களுக்கே பொருத்தமாக உள்ளது. விலங்கின் உடலை எடுக்கும்போது விலங்கின் விருப்பங்கள் வெளிப்பட்டுத் தோன்றும். அப்போது நல்ல விருப்பங்கள் காத்திருக்கும் வேண்டும். இது எதைக் காட்டுகிறது? சூழ்நிலையின் துணையினால் நாம் இந்த ஆசைகளை அடக்க முடியும் என்பதைத்தான். கர்மத்தையேகூட அடக்குவதற்கான வலிமை மிக்க ஒரு கருவி சூழ்நிலை என்பதையே இது காட்டுகிறது.

9. ஜாதி தேச கால வ்யவஹிதானாமப்யானந்தர்யம் ஸ்ம்ருதி ஸம்ஸ்காரயோரேக ரூபத்வாத்

பிறவி, இடம், காலம் இவற்றால் பிரிக்கப்பட்ட போதிலும், நினைவும் சம்ஸ்காரங்களும் ஒத்திருப்பதால் ஆசைகளுக்கிடையில் ஒரு தொடர்ச்சி உள்ளது.

அனுபவங்கள் நுண்ணியவையாகும்போது சம்ஸ்காரங்கள் ஆகின்றன. சம்ஸ்காரங்கள் மீண்டும் உணர்வு பெற்றெழும்போது நினைவு ஆகிறது. இங்கு நாம் நினைவு என்று சொல்லும்போது பழைய அனுபவ சம்ஸ்காரங்களும், இப்போதைய உணர்வுபூர்வமான செயல்களும் உணர்வறு நிலையில் ஒன்றுகூடும் நிலையையே குறிப்பிடுகிறோம். ஒவ்வோர் உடலிலும் இதற்குமுன் அதுபோன்ற உடல்களில் சேர்க்கப்பட்ட சம்ஸ்காரத் தொகுதி மட்டுமே செயல்புரிவதற்குக் காரணமாகிறது. வேறுவித உடல்களில் சேகரிக்கப்பட்ட அனுபவங்கள் அப்போது நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வோர் உடலும் அதே மாதிரியுள்ள பல உடல்களின் சந்ததி போலவே செயல்புரிகிறது. ஆகையால் ஆசைகளின் தொடர்ச்சி விட்டுப் போவதில்லை.

10. தாஸாமனாதித்வம் சாசி÷ஷா நித்யத்வாத்

இன்ப நாட்டம் என்பது என்றென்றைக்கும் இருப்பதால் ஆசைகளும் ஆரம்பம் இல்லாதவையாக இருக்கின்றன.

இன்பம் வேண்டும் என்ற ஆசையிலிருந்தே எல்லா அனுபவங்களும் உண்டாகின்றன. அனுபவத்திற்கு ஆரம்பம் இல்லை. ஏனெனில் புதிய அனுபவம் ஒவ்வொன்றும் பழைய அனுபவங்களால் ஆக்கப்பட்ட சம்ஸ்காரங்களிலிருந்தே எழுகிறது. ஆதலால் ஆசைக்கு ஆரம்பம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top