31. கண்டகூபே க்ஷúத்பிபாஸா நிவ்ருத்தி
தொண்டைக் குழிமீது சம்யமம் செய்தால் பசி மறைகிறது.
ஒரு மனிதனுக்குப் பசி அதிகமிருந்தால், தொண்டைக் குழி மீது அவன் சம்யமம் செய்தால் பசி அடங்கிவிடுகிறது.
32. கூர்ம நாட்யாம் ஸ்தைர்யம்
கூர்ம நாடிமீது சம்யமம் செய்தால் உடல் உறுதிபெறும்.
பயிற்சி வேளையில் உடல் அசைவற்று உறுதி நிலையில் இருக்கும்.
33. மூர்த்த ஜ்யோதிக்ஷி ஸித்த தர்சனம்
உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின்மீது சம்யமம் செய்வதால், சித்தர்களது காட்சி கிடைக்கிறது.
சித்தர்கள் என்பவர்கள் ஆவிகளுக்குச் சற்று மேல் நிலையில் இருப்பவர்கள். தலையின் உச்சியில் மனத்தை சம்யமம் செய்வதால் யோகி சித்தர்களைக் காண்கிறான். முக்தி பெற்றவர்களைச் சித்தர்கள் என்று பொதுவாகக் குறிப்பதுண்டு. இங்கே நாம் அந்தப் பொருளில் குறிப்பிடவில்லை.
34. ப்ராதிபாத்வா ஸர்வம்
அல்லது பிரதிபா சக்தியால் எல்லா அறிவும் பெறுகிறான்.
சம்யமம் எதுவும் இல்லாமலே பிரதிபையின் (தூய வாழ்வினால் தானாக எழும் அறிவுவிழிப்புணர்வு) வலிமையால் இவை எல்லாவற்றையும் பெற முடியும். பிரதிபையின் உயர்ந்த நிலைக்கு முன்னேறினால் அந்தப் பேரொளி வாய்க்கிறது. அதன்மூலம் அவனுக்கு எல்லாம் தெரிய வருகிறது. சம்யமம் இல்லாமலே அவனிடம் எல்லாம் இயல்பாக வருகிறது.
35. ஹ்ருதயே சித்த ஸம்வித்
இதயத்தில் (சம்யமம் செய்வதால் மனங்களைப்) பற்றிய அறிவு உண்டாகிறது.
36. ஸத்வ புருஷயோரத்யந்தா ஸங்கீர்ணயோ ப்ரத்ய யாவிசேஷாத் போக பரார்த்தத்வாத் ஸ்வார்த்த ஸம்யமாத் புருஷஜ்ஞானம்
சத்வமும் புருஷனும் முற்றிலும் வேறானவை. இவற்றைப் பிரித்து அறியாமல் இருப்பதால் சுக அனுபவம் உண்டாகிறது. ஏனெனில் சத்வம் இருப்பது புருஷனுக்காக தன் நிலையில் இருப்பதான ஒன்றை சம்யமம் செய்தால் புருஷனைப் பற்றிய அறிவு உண்டாகிறது.
பிரகிருதியின் மாறுபாடுகளுள் ஒன்று சத்வம். ஒளியும் இன்பமும் அதன் பண்புகளாகும். சத்வத்தின் செயல்கள் எல்லாம் ஆன்மாவின் பொருட்டே. சத்வம் அகங்காரத்திலிருந்து விலகிய புருஷனுடைய சுத்த புத்தியால் ஒளிரும்போது அது தன்னிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த நிலையில் அது எவ்விதத் தொடர்புகளையும் சாராமல் இருக்கிறது.
37. தத ப்ராதிபச்ராவண வேதனாதர்சாஸ்வாத வார்த்தா ஜாயந்தே
அதிலிருந்து பிரதிபா அறிவும், (அமானுஷ்யமான) ஒலி கேட்டல், தொட்டுணர்வு, சுவை, வாசனை முதலியவை உண்டாகின்றன.
38. தே ஸமாதாவுபஸர்கா வ்யுத்தானே ஸித்தய
இவை சமாதிக்கு இடையூறுகள் ஆனால் லௌகீக வாழ்வில் இவை சித்திகள்
புருஷனும் மனமும் சேர்வதால் யோகிக்கு லௌகீக சுகங்களைப் பற்றிய அறிவு வருகிறது. பிரகிருதியும் ஆன்மாவும் வெவ்வேறு என்று சம்யமம் செய்வதால், அவனுக்குப் புருஷனைப் பற்றிய அறிவு வருகிறது. இதிலிருந்து விவேகம் வருகிறது. விவேகம் பெற்றபின், மேலான அறிவாகிய பிரதிபையை அவன் பெறுகிறான். ஆனால் குறிக்கோளாகிய ஆன்மஞானத்தையும் முக்தியையும் பெற இந்தச் சித்திகள் தடைகளே. வழியில் இவற்றையெல்லாம் யோகி சந்திக்க வேண்டும். இவற்றைப் புறக்கணித்தால் மிகவுயர்ந்த நிலையை அடைவான். இந்தச் சித்திகளைப் பெற முயன்றால் அவனது முன்னேற்றம் தடைப்படும்.
39. பந்தகாரண சைதில்யாத் ப்ரசாரஸம்வேதனாச்ச சித்தஸ்ய பரசரீராவேச
சித்தத்தின் தளைகளுக்கான காரணங்கள் தளர்ந்து சித்தத்தின் செயலுக்கான பாதைகளைப் (நரம்புகளை)பற்றி அறியும்போது அவன் பிற சரீரத்தில் புக முடியும்.
யோகி தன் உடலில் செயல்புரிந்து கொண்டிருக்கும் போதே, இறந்துபோன ஓர் உடலில் புகுந்து அதை எழுந்து நடமாடச் செய்யலாம். உயிருள்ள ஒர் உடலினுள் புகுந்து, அந்த மனிதனின் மனத்தையும் புலன்களையும் வசப்படுத்தி அந்த உடல் வழியாகச் செயல்புரியலாம். புருஷன் வேறு, பிரகிருதி வேறு என்ற விவேக அறிவால் யோகி இதைச் செய்ய முடிகிறது. அவன் மற்றோர் உடலில் புக விரும்பினால். அந்த உடலின்மீது சம்யமம் செய்து அதில் புகுகிறான். ஏனெனில் தனது ஆன்மா மட்டுமின்றி, மனமும் எங்கும் நிறைந்தது என்று யோகி கூறுகிறான். தற்பொழுது இந்த உடலின் நரம்புகள் மூலம் மட்டுமே செயல்பட முடிகிறது. ஆனால் இந்த நரம்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் பிற பொருட்கள் வழியாகவும் அவன் செயல்படுகிறான்.
40. உதான ஜயாஜ்ஜலபங்ககண்டகாதிஷ்வஸங்க உத்க்ராந்திச்ச
உதானன் என்னும் நாடியை வெல்வதால், யோகி நீரின் மேலும் சேற்றின் மேலும், முள்ளின் மேலேயும் நடக்க முடியும். தான் விரும்பும்போது அவன் மரணமடையலாம்
உதானன் என்ற நாடி அல்லது நரம்பு ஓட்டம் சுவாசப் பைகளையும் உடலின் மேற்பகுதிகளையும் இயங்கச் செய்கிறது. இந்த நாடியை வசப்படுத்தும்போது, அவனது உடல்லேசாகிறது. அவன் நீரில் அமிழ்வதில்லை. முள்ளின் மேலும், வாட்களின் மீதும் நெருப்பின்மீதும் அவன் நடக்க முடியும். விரும்பும்போது இந்த வாழ்விலிருந்து அவன் விடைபெறவும் செய்யலாம்.
41.ஸமான ஜயாத் ப்ரஜ்வலனம்
சமானன் என்ற நாடியை வசப்படுத்துவதால், யோகியின் உடலைச் சுற்றி ஓர் ஒளி வீசுகிறது.
இந்தச் சித்தி பெற்ற யோகி விரும்பும்போது, அவனது உடலிலிருந்து ஒளி தோன்றுகிறது
42. ச்ரோத்ராகாசயோ ஸம்பந்த ஸம்யமாத் திவ்யம் ச்ரோத்ரம்
காதிற்கும் ஆகாசத்திற்குமுள்ள தொடர்பில் சம்யமம் செய்வதால், அமானுஷ்ய ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் வருகிறது.
ஆகாசமும், அதன் கருவியாகிய செவியும் உள்ளன. இவற்றின்மீது சம்யமம் செய்வதால், யோகி அமானுஷ்யமான ஒலிகளைக் கேட்கும் சக்தி பெறுகிறான். அவன் எல்லாவற்றையும் கேட்கிறான்; பல மைல்களுக்கு அப்பால் பேசப்படும் பேச்சையும் ஒலியையும் யோகியால் கேட்க முடியும்.
43. காயாகாசயோ ஸம்பந்த ஸம்யமால்லகுதூல ஸமாபத்தேச்சாகாச கமனம்
ஆகாசத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின்மீது சம்யமம் செய்வதால் உடம்பு பஞ்சுபோல் லேசாகிவிடுகிறது. இதைக் குறித்து தியானம் செய்வதால் யோகிக்கு வான் வழியாகச் செல்லும் ஆற்றல் கிடைக்கிறது.
இந்த உடல் ஆகாசத்தினால் ஆனது. ஆகாசமே ஒருவகையில் உருவெடுத்து உடலாயிற்று. யோகி உடலில் உள்ள ஆகாச மூலக்கூறின்மீது சம்யமம் செய்தால் உடல் ஆகாசம்போல் லேசாகிவிடுகிறது. அப்போது விரும்பிய இடத்திற்கு வான் வழியாக யோகி செல்ல முடியும். பிறவற்றுக்கும் இவ்வாறே.
44. பஹிரகல்பிதா வ்ருத்திர் மஹாவிதேஹா தத ப்ரகாசாவரணக்ஷய
உடலுக்கு வெளியே உள்ள மனத்தின் உண்மையான விருத்திகளுக்கு உடலற்ற மாபெரும் நிலை என்று பெயர் அதன்மீது சம்யமம் செய்வதால் ஆன்ம ஒளியை மறைக்கின்ற மறைப்பு விலகிவிடுகிறது.
இந்த உடலில் மட்டும்தான் செயல்புரிவதாக மனம் மூடத்தனமாக எண்ணுகிறது. அது எங்கும் பரந்ததானால் ஓர் உடலிலுள்ள நரம்புகளில் மட்டும் ஏன் கட்டுப்பட்டிருக்க வேண்டும்? நான் உணர்வை ஏன் இந்த ஓர் உடலில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. விரும்பிய இடங்களில் எல்லாம் நான்-உணர்வை உணர்வதற்கு யோகி விரும்புகிறான். உடலில் நான்-உணர்வு இல்லாத நிலையில், மனத்தில் எழும் அலைகள் அகல்பித விருத்திகள் (உண்மையான விருத்திகள்) அல்லது மகாவிதேகம் (உடலற்ற மாபெரும் நிலை) என்று கூறப்படுகிறது. இந்த விருத்திகளின்மீது சம்யமம் செய்து வெற்றி பெற்றால், ஒளியை மறைக்கின்ற எல்லா மறைப்பும் அகன்று விடுகின்றன. எல்லா இருளும் அறியாமையும் விலகிவிடுகின்றன. ஒவ்வொன்றும் அறிவு மயமாக அவனுக்குத் தெரியும்.
45. ஸ்தூல ஸ்வரூப ஸூக்ஷ்மான்வயார்த்தத்வ ஸம் யமாத்பூதஜய
பூதங்களின் தூல மற்றும் சூட்சுமத் தன்மை, அவற்றின் முக்கியப் பண்புகள், அவற்றில் அடங்கியிருக்கும் தன்மை, ஆன்மாவின் அனுபவத்திற்குப் பொருட்டாயிருத்தல், இவற்றின் மீது சம்யமம் செய்வதால் பூதங்களை வெற்றிகொள்ள முடிகிறது.
ஐம்பூதங்களின்மீது முதலில் தூல நிலையிலும், பின்னர் சூட்சும நிலையிலும் யோகி சம்யமம் செய்கிறான், பவுத்தர்களில் ஒரு பிரிவினர் இத்தகைய சம்யமத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனர். முதலில் அவர்கள் களிமண்கட்டி ஒன்றை எடுத்து, அதன்மீது சம்யமம் செய்கின்றனர். பின்னர் படிப்படியாக, அது எந்த நுண்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக் காண்கின்றனர். அவற்றை எல்லாம் கண்ட பிறகு அந்தப் பொருள் மீது அவர்களுக்கு ஆதிக்கம் உண்டாகிறது. இவ்வாறே யோகி எல்லா பூதங்களையும் வென்று அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
46. ததோணிமாதிப்ராதுர்பாவ காய ஸம்பத் தத்தர்மானபிகாதச்ச
அதிலிருந்து நுண்ணிய தன்மை, பிற சித்திகள், மகிமை பெற்ற உடல் உடலின் குணங்கள் அழியாமை எல்லாம் உண்டாகின்றன.
யோகி அஷ்டமா சித்திகளையும் அதாவது எட்டு சித்திகளையும் எய்திவிட்டான் என்பது இதனால் விளங்குகிறது. அவன் தன்னை அணு போன்று சிறியதாக்கிக் கொள்ளலாம். மலை போன்று பெரியதாக்கிக் கொள்ளலாம். பூமியைப் போன்று பளு உடையவனாகச் செய்யலாம். காற்றைப் போன்று லேசாக்கிக் கொள்ளலாம். எதை விரும்பினாலும் அதை அடையலாம். விரும்பியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். எல்லாவற்றையும் தன்வசமாக்கிக் கொள்ளலாம். சிங்கம்கூட ஆட்டுக்குட்டி போன்று அவன் காலடியில் அமர்ந்திருக்கும். அவன் விரும்பிய யாவும் நிறைவேறும்.
47. ரூபலாவண்ய பல வஜ்ரஸம்ஹனனத்வானி காய ஸம்பத்
இனிய உருவமும், அழகும், ஆற்றலும், வைரம் போன்ற உடல்கட்டும் காய சம்பத் (மகிமை பெற்ற உடல்) எனப்படும்.
அவனது உடல் அழிக்க முடியாததாகிவிடுகிறது. அதற்கு யாரும் எந்தத் தீங்கும்செய்ய முடியாது. அவன் விரும்பாமல் அவனது உடம்பை யாரும் அழிக்க முடியாது. காலம் என்னும் தடியை ஒடித்து எறிந்துவிட்டு பிரபஞ்சத்தில் தன் உடலோடு அவன் வாழ்கிறான். அவனுக்கு அதன்பின் நோயோ மரணமோ துன்பமோ இல்லை என்று வேதம் சொல்கிறது.
48. க்ரஹண ஸ்வரூபாஸ்மிதான்வயார்த்தத்வ ஸம் யமாதிந்த்ரிய ஜய
புலன்களின் புறச்சார்பு அதிலிருந்து உண்டாகும் அறிவு, இந்த அறிவால் வரும் நான்-உணர்வு இவற்றின் முக்குணங்கள், அவற்றினால் ஆன்மாவுக்கு வரும் அனுபவம் இவற்றின்மீது சம்யமம் செய்வதால் புலன்கள் வெல்லப்படுகின்றன.
புறப்பொருளனுபவத்தின் போது, புலன்கள் மனத்தில் தங்களுக்குரிய இடத்தை விட்டு அவற்றை நாடிச் செல்கின்றன. அதனால் அவற்றைப் பற்றிய அறிவு உண்டாகிறது. நான்-உணர்வும் இதில் ஈடுபட்டுள்ளது. இவற்றின் மீதும், படிப்படியாக மற்ற இரண்டின் மீதும் யோகி சம்யமம் செய்யும் போது, அவன் புலன்களை வெல்கிறான். நீங்கள் பார்க்கின்ற அல்லது உணர்கின்ற எந்தப் பொருளை வேண்டுமானாலும், உதாரணமாக ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் மனத்தை அதன்மீது ஒருமுகப்படுத்துங்கள். பின்னர் புத்தக வடிவில் இருக்கின்ற அறிவின்மீதும், பிறகு புத்தகத்தைக் காண்கின்ற நான்-உணர்வின் மீதும் ஒருமுகப்படுத்துங்கள். இவை எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சம்யமம் செய்தால் புலன்கள் அனைத்தையும் வெல்ல முடியும்.
49. ததோ மனோஜவித்வம் விகரணபாவ ப்ரதான ஜயச்ச
இதிலிருந்து உடலுக்கு மனத்தின் வேகத்தோடு இயங்கக் கூடிய ஆற்றலும், புலன்கள் உடலிலிருந்து பிரிந்து தனித்து நின்று செயல்புரியக்கூடிய ஆற்றலும், இயற்கையை வெல்கின்ற ஆற்றலும் உண்டாகின்றன.
பூதங்களை வெல்வதால், மகிமை பெற்ற உடல் கிடைப்பதுபோல் புலன்களை வெல்வதால் மேலே கூறிய சித்திகள் கிடைக்கின்றன.
50. ஸத்வ புருஷான்யதா க்யாதி மாத்ரஸ்ய ஸர்வ பாவாதிஷ்டாத்ருத்வம் ஸர்வஜ்ஞாத்ருத்வஞ்ச
சத்வத்திற்கும் புருஷனுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பிரித்தறிகின்ற விவேகத்தின்மீது சம்யமம் செய்வதால் எல்லா ஆற்றல்களும் எல்லா அறிவும் உண்டாகின்றன.
இயற்கையை வென்றபிறகு, புருஷனுக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்த பிறகு, அதாவது, புருஷன் அழிவற்றவன், தூயவன், பூரணன் என்பதை உணர்ந்த பிறகு எல்லாம் வல்ல தன்மையும் எல்லா அறிவும் வருகிறது.
51. தத் வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம்
இவற்றையும் விட்டுவிட்டால் தீமையின் விதைகளே அழிந்துவிடும். அதனால் கைவல்யம் கிடைக்கிறது.
அவன் தனிமை நிலையை அடைகிறான். எதையும் சார்ந்திராத நிலையை அடைகிறான். முக்தி பெறுகிறான். தான் எல்லா ஆற்றல்களும் எல்லா அறிவும் பெற்றவன் என்ற எண்ணத்தை ஒருவன் விட்டுவிடும்போது, புலன்களால் வரும் இன்பத்தையும், தேவர்களால் காட்டப்படும் இன்பங்களையும் அவன் ஒதுக்குகிறான். இந்த அற்புதச் சித்திகள் தன்னை வந்து அடைந்தும் அவற்றை யோகி விலக்குவானானால் அவன் தன் குறிக்கோளை அடைகிறான். இந்தச் சித்திகள் என்பவை என்ன? வெறும் தோற்றங்கள், கனவுகளைவிடச் சற்றும் உயர்ந்தவை அல்ல. எல்லா ஆற்றல்களையும் பெறுதல் என்பதுகூடக் கனவே தான். ஏனெனில் அது மனத்தைச் சார்ந்தது. மனம் இருக்கும்வரையே அது உணரப்படுகிறது. ஆனால் குறிக்கோளோ மனத்திற்கு அப்பால் உள்ளது.
52. ஸ்தான்யுபநிமந்த்ரணே ஸங்கஸ்மயாகரணம் புனரனிஷ்ட ப்ரஸங்காத்
தேவர்களின் தூண்டுதல்களால் யோகி மகிழவோ மயங்கவோ கூடாது. அதனால் தீமை ஏற்படுகின்ற அச்சம் உள்ளது.
வேறு ஆபத்துக்களும் உள்ளன தேவர்களும் மற்றவர்களும் அவனது ஆசைகளைத் தூண்டுவதற்காக வருகின்றனர். யாரும் முக்தி பெறுவதை அவர்கள் விரும்புவதில்லை. நம்மிடம்இருப்பது போன்று அவர்களிடமும் பொறாமை உண்டு. சில வேளைகளில் நம்மைவிட அதிகமாகவே பொறாமை கொள்கின்றனர். தங்கள் பதவி பறி போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உண்டு. நிறை நிலையை அடையாத யோகிகள் மரணத்திற்குப் பின்னர் தேவர்கள் ஆகின்றனர். நேர்ப்பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்று இந்தச் சித்திகளைப் பெறுகின்றனர். அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும். இந்தத் தூண்டுதல்களை மறுத்து, உறுதியுடன் நிற்க வல்லவன் நேராகக் குறிக்கோளை அடைந்து முக்தி பெறுகிறான்.
53. க்ஷண தத்க்ரமயோ ஸம்யமாத்விவேகஜம் ஜ்ஞானம்
ஒரு கணப்பொழுதின்மீதும், அதன் முன்னும்பின்னும் உள்ள காலத்தின்மீதும் சம்யமம் செய்வதால் விவேகம் உண்டாகிறது.
தேவர்களையும் சொர்க்கங்களையும் சித்திகளையும் நாம் எவ்வாறு புறக்கணிப்பது? விவேகத்தால் நல்லது எது? கெட்டது எது என்று பிரித்தறிவதால். ஆதலால் விவேகத்தைத் திடப்படுத்திக் கொள்வதற்கான சம்யமம் கூறப்படுகிறது. அது கணப்பொழுதின்மீதும் அதன் முன்னும் பின்னும் உள்ள காலத்தின்மீதும் சம்யமம் செய்வது ஆகும்.
54. ஜாதி லக்ஷண தேசைரன்யதானவச்சேதாத் துல்யயோஸ்தத ப்ரதிபத்தி
இனம், அடையாளம், இடம் இவற்றால் வேறுபடுத்தி அறிய முடியாதவற்றைகூட, மேலே கூறிய சம்யமத்தால் பிறக்கின்ற விவேகத்தால் அறிய முடியும்.
நாம் படும் துயரம் அறியாமையால் வருகிறது. உண்மையையும் உண்மையின்மையையும் வேறுபடுத்தி அறிய முடியாததால், விவேகமின்மையால் வருகிறது. நாம் எல்லோருமே தீமையை நன்மையாகவும் கனவை உண்மையாகவும் கருதுகிறோம். ஆன்மா ஒன்றே உண்மைப் பொருள். அதை நாம் மறந்துவிட்டோம். உடல் என்பது ஒரு பொய்க் கனவு, ஆனால் நாம் என்பது உடல்கள் என்று நினைக்கிறோம். இந்த விவேகமின்மையே துயரத்திற்குக் காரணம். இது அறியாமையால் ஏற்படுகிறது. விவேகம் வலிமையைத் தருகிறது. அப்போதுதான் உடல் சொர்க்கலோகங்கள், தேவர்கள் போன்ற எண்ணங்களை நாம் விட முடியும். இனம், அடையாளம், இடம் இவற்றை அடிப்படையாக வைத்து வேற்றுமை காண்பதால் தான் இந்த அறியாமை உண்டாகிறது. உதாரணமாக, இன வேறுபாட்டினால் தான் பசுவை நாயிலிருந்து வேறாகக் காண்கிறோம். பசுக்களுள் ஒரு பசுவை மற்றொரு பசுவிலிருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காண்கிறோம்? அடையாளங்களால், இனி அடையாளங்களில் இரண்டு பொருட்கள் முற்றிலும் ஒத்திருக்கும்போது, அவை வெவ்வேறு இடங்களில் இருக்குமானால், அந்த இட வேறுபாட்டால் வேறுபடுத்துகிறோம். இனம், அடையாளம், இடம் இவற்றின் துணையால்கூட பாகுபடுத்த முடியாதபடி பொருட்கள் கலந்து இருக்குமானால் மேலே கூறப்பட்ட பயிற்சிகளால் பெறுகின்ற விவேகத்தின் மூலம் அவற்றைப் பிரிக்க முடியும். புருஷன் தூயவன், பரிபூரணன், பிரபஞ்சத்தில் உள்ள ஒரே தனிப் பொருள் அவன் மட்டுமே. இந்த உண்மையையே யோகிகளின் மிகவுயர்ந்த தத்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. உடலும் மனமும் சேர்க்கைப் பொருட்கள், எனினும் நாம் நம்மை அவற்றுடன் எப்போதும் ஒன்றுபடுத்திக் கொள்கிறோம். இவ்வாறு வேறுபாட்டை இழந்தது பெரிய தவறு. இந்த விவேகத்தைப் பெறும்போது, உலகுடனும் மனத்துடனும் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் கூட்டுப் பொருட்களே என்றும், அவை புருஷனாக முடியாது என்றும் மனிதன் அறிகிறான்.
55. தாரகம், ஸர்வவிஷயம் ஸர்வதா விஷயமக்ரமஞ்சேதி விவேகஜம் ஜ்ஞானம்
பொருட்கள் அனைத்தையும் அவற்றின் வேறுபாடுகளையும் ஒரே காலத்தில் ஏற்றுக்கொள்ளும் விவேக ஞானமே கரையேற்றும் ஞானமாகும்.
யோகியைப் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து கரையேற்றுவதால் இது கரையேற்றும் ஞானம் எனப்படுகிறது. தூல மற்றும் சூட்சுமமாகிய எல்லா நிலைகளிலும் பிரகிருதி முழுவதும் இந்த அறிவுக்கு எட்டுவதாகவே உள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக, முறையாக வரும் தன்மை இந்த அறிவில் இல்லை. இது அனைத்தையும் ஒரே நேரத்தில் பற்றுகிறது.
56. ஸத்வ புருஷயோ சுத்தி ஸாம்யே கைவல்யமிதி
சத்வத்தின் தூய்மையும் புருஷனின் தூய்மையும் ஒரே தன்மையானவை ஆகும்போது கைவல்யம் கிடைக்கிறது.
தேவர்கள் முதல் மிகச் சாதாரணமான அணுவரை இந்தப் பிரபஞ்சத்தில் எதனையும் ஆன்மா சார்ந்திருக்கவில்லை என்று அனுபவத்தில் அறியும்போது , அது நிறைநிலையாகிய கைவல்ய (தனித்திருத்தல்) நிலை எனப்படுகிறது. தூய்மையும் மலினமும் கலந்த சத்வத்தை(புத்தியை), புருஷனைப் போன்று தூய்மையாக்கும்போது கைவல்யம் கிடைக்கிறது, அப்போது குணமற்ற தூய்மையின் சாரத்தை மட்டுமே அதாவது புருஷனை மட்டுமே சத்வம் (புத்தி) பிரதிபலிக்கிறது.