21. ததர்த்த ஏவ த்ருச்யஸ்யாத்மா
காணப்படுவதன் இயல்பு அவனுக்காக அமைந்துள்ளது.
பிரகிருதிக்குச் சுய ஒளி இல்லை. புருஷன் அதில் இருக்கும்வரை அது ஒளிபோல் தோன்றுகிறது. ஆனால் அந்த ஒளி கடன் வாங்கியது. சந்திரனின் ஒளிபோல் பிரதிபலிப்பு ஒளிதான். இயற்கையின் வெளிப்பாடுகள் எல்லாமே இயற்கை தனக்குத்தானே உண்டாக்கியவை. புருஷனைச் சுந்திரனாகச் செய்வதைத் தவிர இயற்கையின் இந்தச் செயலுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை என்று யோகிகள் கூறுகின்றனர்.
22. க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்யநஷ்டம் ததன்ய ஸாதாரணத்வாத்
குறிக்கோளை அடைந்தவர்களுக்கு அது அழிந்தாலும், பொதுவாக இருப்பதால் அது மற்றவர்க்கு அழிவதில்லை.
பிரகிருதியின் செயல்கள் அனைத்துமே, ஆன்மா பிரகிருதியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை ஆன்மாவிற்கு உணர்த்துவதற்கே. ஆன்மா இதை அறியும் போது, இயற்கையின் கவர்ச்சிகள் அவனுக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் முக்தி அடைந்தவனுக்கு மட்டுமே இயற்கை முற்றிலுமாக மறைகிறது. எண்ணற்ற மற்றவர்கள் எப்போதும் இருப்பார்கள், இயற்கை அவர்களுக்காகத் தன் செயலைச் செய்து கொண்டேயிருக்கும்.
23. ஸ்வஸ்வாமி சக்த்யோ ஸ்வரூபோபலப்தி ஹேது ஸம்யோக
பிரகிருதி, அதன் தலைவன் இருவரின் சக்திகளை உணர்வதற்குக் காரணமாக இருப்பது சேர்க்கையே
பிரகிருதி, புருஷன் இரண்டும் சேரும்போதே இரண்டின் சக்திகளும் வெளிப்படுகின்றன என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. அப்போதுதான் எல்லா வெளிப்பாடுகளும் உண்டாகின்றன. இந்தச் சேர்க்கைக்கு அறியாமையே காரணம். உடலுடன் நம்மை இணைத்துக் கொள்வதுதான் நமது இன்ப துன்பங்களுக்கு எப்போதும் காரணமாக இருக்கிறது என்பது நமது அன்றாட அனுபவம். நான் இந்த உடல் அல்ல என்று உறுதியாக என்னால் நினைக்க முடியுமானால் சூடு, குளிர் போன்ற எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த உடல் ஒரு கூட்டுப் பொருள். என் உடல் வேறு, உங்கள் உடல் வேறு, சூரியன் வேறு என்று எண்ணுவதெல்லாம் கற்பனையே, பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஜடப் பொருள் கடல். அதில் ஒரு துணுக்கு நான், ஒரு துணுக்கு நீங்கள், வேறொரு துணுக்கின் பெயர் சூரியன். இந்த ஜடப் பொருள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்று சூரியனில் இருப்பது நாளை நம் உடலில் வந்து சேரக்கூடும்.
24. தஸ்ய ஹேதுரவித்யா
அதன் காரணம் அறியாமை
அறியாமையால் ஒரு குறிப்பிட்ட உடலுடன் நாம் நம்மை இணைத்துக் கொண்டு துன்பங்களுக்கு உட்படுகிறோம். உடலைப் பற்றிய இந்த எண்ணம் வெறும் முட்டாள் தனமானது. இந்த மூடத்தனம் தான் நம்மை மகிழ்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்துகிறது. அறியாமையால் விளைந்த இந்த மூடநம்பிக்கைதான் சூடு-குளிர், மகிழ்ச்சி- வேதனை என்று எல்லாவற்றையும் அனுபவிக்கச் செய்கிறது. இந்த மூடத்தனத்தை நாம் கடந்து செல்லவேண்டும். அதற்கு யோகி வழி காட்டுகிறான். சில குறிப்பிட்ட மன நிலைகளில், ஒரு மனிதனைத் தீயினால் சுட்டாலும் வலியை அவன் உணர்வதில்லை என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மனம் திடீரென்று சூறாவளிபோல் இந்த நிலைக்கு உயர்கின்றது! மறுகணமே மறைந்தும்விடுகின்றது.யோகப் பயிற்சிமூலம் இந்த நிலையை அடைந்தால் உடலையும் ஆன்மாவையும் பிரித்துணரும் நிலையை நிரந்தரமாகப் பெறலாம்.
25. ததபாவாத் ஸம்யோகாபாவோ ஹானம் தத்த்ருசே கைவல்யம்
அது (அறியாமை) இல்லாததால், விலக்கவேண்டிய சேர்க்கை நீக்கப்படுகிறது. அதுவே காண்பவனுடைய கைவல்யமாகும்.
யோகத் தத்துவப்படி அறியாமையின் காரணமாகவே பிரகிருதியுடன் ஆன்மா இணைந்தது. இயற்கை நம்மீது ஆதிக்கம் செலுத்துவதை அகற்றுவதே நோக்கம் எல்லா மதங்களின் நோக்கமும் இதுவே. ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன்மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது தத்துவ ஆராய்ச்சி இவற்றுள் ஒன்றினாலோ பலவற்றினாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முழு உண்மை. கொள்கைகளும் கோட்பாடுகளும், சடங்குகளும் நூல்களும், கோயில்களும் உருவங்களும் இரண்டாம் நிலையிலுள்ள விளக்கங்களே, பிராணனை வசப்படுத்தும் பயிற்சியின்மூலம் யோகி இந்த இலக்கை அடைய முயல்கிறான்.
இயற்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளாத வரை, நாம் அடிமைகளே. அதன் கட்டளைப்படியே நாம் நடக்க முடியும். மனத்தை வசப்படுத்துபவன் ஜடப்பொருளையும் வசப்படுத்தலாம் என்கிறான் யோகி. அக இயற்கை புற இயற்கையைவிட மிகவும் உயர்ந்தது. அதனுடன் போராடுவது கடினமானது. வசப்படுத்துவதோ அதைவிடக் கடினம், அதை அடக்குபவன் பிரபஞ்சத்தையும் அடக்கியாள்வான், அது அவனுக்கு அடிமையாகிறது. இயற்கையை வெல்வதற்கான முறைகளை ராஜயோகம் காட்டுகிறது. நாம் அறிந்த புறச்சக்திகளைவிட வலிமை மிகுந்த சக்திகளை நாம் வசப்படுத்த வேண்டும். இந்த உடல் என்பது மனத்திற்கு ஒரு புறக்கூடு மட்டுமே. அவை இரண்டு பொருட்கள் அல்ல, சிப்பியும் அதன் ஓடும் போன்றவை அவை. இரண்டும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள் மட்டுமே. சிப்பியின் அகப்பொருள், புறத்திலிருந்து பொருளைப் பெற்று ஓட்டை உண்டாக்குகிறது. அதுபோலவே மனம் என்று நாம் அழைக்கின்ற அக நுண்சக்திகள் புறத்திலிருந்து தூலப் பொருளை எடுத்து, அதிலிருந்து புறக்கூடாகிய இந்த உடலை உண்டாக்குகிறது. எனவே அகத்தை அடக்க முடியுமானால் புறத்தை அடக்குவது மிக எளிதாகும்.
இனி, இந்தச் சக்திகளும் வேறானவையல்ல. சிலசக்திகள் பவுதீகமானவை. சில சூட்சுமமானவை என்பது கிடையாது. எப்படித் தூல உலகம் என்பது நுண் உலகத்தின் தூல வெளிப்பாடு மட்டுமோ, அப்படியே சூட்சும சக்திகளின் தூல வெளிப்பாடே பவுதீக சக்திகள்.
26. விவேகக்யாதிரவிப்லவா ஹானோபாய
விவேகத்தை இடைவிடாது பயில்வது அறியாமையை ஒழிக்கும் வழி.
எது உண்மைப்பொருள், எது உண்மையற்றது என்று பிரித்தறிவதே பயிற்சியின் உண்மையான நோக்கம். புருஷன் என்பது பிரகிருதி அல்ல, ஜடப்பொருள் அல்ல, மனமும் அல்ல. அது இயற்கை அல்ல. ஆதலால் புருஷனிடம் மாற்றங்கள் நிகழ முடியாது. சேர்வதும் பிரிவதும் மீண்டும் சேர்வதுமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது இயற்கைதான். தொடர்ந்த பயிற்சியின்மூலம் விவேகத்துடன் நாம் பிரித்தறியத் தொடங்கும்போது அறியாமை அகல்கிறது. புருஷன் தன் உண்மை இயல்பில், எங்கும் நிறைந்த எல்லா சக்தியும் பெற்ற எல்லாம் அறிந்த நிலையில் ஒளிர ஆரம்பிப்பான்.
27. தஸ்ய ஸப்ததா ப்ராந்த பூமி: ப்ரஜ்ஞா
அவனது அறிவு ஏழு வகையான உன்னத பூமிகளை அடைகின்றது.
இந்த அறிவு வரும்போது, அது ஒன்றன்பின் ஒன்றாக ஏழு படிகளில் வருவது போலுள்ளது. அவற்றுள் ஒன்று வரத்தொடங்கும்போது, நாம் அறிவை அடைந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறோம்.
முதற்படியில், நாம் அறிய வேண்டியவற்றை அறிந்துள்ளோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இதனால் மனம் திருப்தியடைகிறது. நாம் அறிவை நாடி ஓடுவதை உணரும்போது இங்கும் அங்கும் தேடத் தொடங்குகிறோம், எங்கோ, ஏதோ உண்மை கிடைக்கும் என்று நினைத்தால் அங்கு ஓடுகிறோம். அங்கே கிடைக்காவிட்டால் அதிருப்தி அடைந்து வேறு வழியில் தேடுவோம். அறிவு நமக்குள்ளேயே இருக்கிறது, யாரும் நமக்கு உதவ முடியாது, நாமே நமக்கு உதவ வேண்டும் என்பதை உணரும்வரை நமது தேடல்கள் அனைத்தும் வீணே. நாம் விவேகத்தைப் பழகத் தொடங்கும்போது, நாம் உண்மையை நெருங்குகிறோம் என்பதற்கு முதல் அடையாளமாக நமது அதிருப்தி அகன்றுவிடும்; உண்மையைக் கண்டுவிட்டோம், அது உண்மையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று உறுதி நம்மிடம் உண்டாகும். அப்போது நமக்கு சூரிய உதயம் உண்டாகி விட்டது, விடியல் தோன்றிவிட்டது என்று நாம் அறிவோம். இந்த உறுதியுடன் குறிக்கோளை அடையும்வரை தைரியத்துடன் இடைவிடாது முயன்று முன்னேற வேண்டும்.
இரண்டாவது படி, துன்பங்கள் அனைத்தும் அகன்றுவிடுதல், அகத்திலோ புறத்திலோ உள்ள எதுவும் நமக்குத் துன்பம் தர முடியாது. மூன்றாவது படி, பூரண அறிவை, எல்லாம் அறிந்த நிலையை அடைவது ஆகும், நான்காவது படியில், விவேகத்தின் மூலம் நமது கடமைகள் எல்லாம் முற்றுப் பெற்ற நிலையை அடைகிறோம். ஐந்தாவது படியில், சித்தத்தின் சுதந்திரம் நமக்கு வாய்க்கிறது. எல்லா துன்பங்களும் போராட்டங்களும் எல்லா சஞ்சலங்களும் மலை உச்சியிலிருந்து வீழ்ந்த கல்லைப் போல் மீண்டும் வராத வகையில் ஒழிந்துவிட்டன என்பதை அறிவோம். ஆறாவது படியில்,நாம் விரும்பும் பொழுது, சித்தம் அதன் மூலகாரணங்களால் கரைந்து போவதைச் சித்தம் தானே உணரும்.
நாம் நமது ஆன்மாவில் நிலைத்திருக்கிறோம். பிரபஞ்சத்தில் நாம் தனித்துள்ளோம். உடலுக்கும் மனத்திற்கும் நம்முடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை, அவை நம்முடன் இணைந்திருக்கின்றன என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதையெல்லாம் புரிந்து கொள்கிறோம். அவை தம் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறியாமையால் நாம் நம்மை அவற்றுடன் இணைத்துக் கொண்டோம். ஆனால் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லா பேறும் பெற்றவர்களாகிய நாம் தனியாகவே உள்ளோம்; நமது ஆன்மா அவ்வளவு தூய்மையானது அவ்வளவு பரிபூரணமானது, நமக்கு வேறு யாரும் தேவைஇல்லை. நம்மை இன்புற்றிருக்கச் செய்ய வேறு யாரும் தேவை இல்லை. ஏனெனில் நாமே ஆனந்த வடிவினர். அறிவு வேறு எதையும் சார்ந்திருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். நமது அறிவின் முன் ஒளிபெறாத எந்தப் பொருட்களும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருக்க முடியாது. இதுதான் கடைசி நிலை. இங்கு யோகி அமைதியை அடைகிறான். சாந்த நிலையில் திளைக்கிறான். இனிமேல் எந்தத் துன்பமும் அவனைத் தீண்டுவதில்லை. எந்த மயக்கமும் அவனைப் பற்றுவதில்லை. எந்தக் கவலையும் அவனை வாட்டுவதில்லை. தான் எப்போதும் பேறுபெற்றவன், எப்போதும் பரிபூரணமானவன், எல்லாம் வல்லவன் என்பதை அவன் அறிகிறான்.
28. யோகாங்கானுஷ்டானாதசுத்திக்ஷயே ஞான தீப்திராவிவேகக்யாதே
யோகத்தின் பல அங்கங்களைப் பயிற்சி செய்வதால் மலினங்கள் அகல்கின்றன. அறிவு ஒளிர்கிறது. அதன் இறுதி நிலை விவேகம்.
இப்போது பயிற்சியைப்பற்றிக் கூறப்படுகிறது. இது வரை நாம் கூறியது உயர்ந்த நிலை. அது நமது கைக் கெட்டாத தூரத்தில் இருந்தாலும் அதை அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். முதலில் உடலையும் மனத்தையும் வசப்படுத்த வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைவது உறுதிப்படும். நோக்கம் தெளிவான பிறகு, அதை அடைவதற்கு வேண்டிய பயிற்சியைச் செய்ய வேண்டும்.
29. யம நியமாஸன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான ஸமாதயோஷ்டாவங்கானி
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை யோகத்தின் எட்டு அங்கங்கள்.
30. அஹிம்ஸா ஸத்யாஸ்தேய ப்ரஹ்மசர்யாபரிக்ரஹாயமா
கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகிய ஐந்தும் யமம்.
பூரண யோகியாக இருக்க விரும்புபவன் காம உணர்வை விடவேண்டும். ஆன்மாவுக்குப் பால்வேறுபாடு இல்லை. காம உணர்வினால் தன்னை ஏன் அது இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்? இந்த உணர்வை ஏன் விலக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பின்பு தெளிவாகக் காண்போம்.
தானமாக ஒன்றைப் பெறுபவனின் மனம், கொடுப்பவனின் மனத்தால் பாதிக்கப்படுகிறது. எனவே பெறுபவன் கீழ்நிலையை அடைய நேரலாம். தானம் பெறுவது மனத்தின் சுதந்திரத்தை அழிக்கிறது, நம்மை அடிமைகள் ஆக்குகிறது. ஆதலால் எதையும் தானமாகப் பெறாதீர்கள்.
31. ஏதே ஜாதி தேச கால ஸமயானவச்சின்னா ஸார்வபௌமா மஹாவ்ரதம்
இவை காலம், இடம், நோக்கம், ஜாதி நியமங்கள் இவற்றால் தடைபடாததால்(உலகம் தழுவிய) மகா விரதங்கள் ஆகும்.
கொல்லாமை, உண்மை பேசுதல், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், தானம் ஏற்காமை ஆகியவற்றை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் கடைப்பிடிக்க வேண்டும், தேச, கால, நிலை வேறுபாடின்றி ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
32. சௌச ஸந்தோஷ தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி நியமா
அக மற்றும் புறத் தூய்மை, திருப்தி, தவம், கற்றல், இறை வழிபாடு இவை நியமங்கள்
புறத் தூய்மை என்பது உடம்பைத் தூய்மையாக வைத்திருத்தல், அழுக்கானவன் ஒருபோதும் யோகியாக முடியாது. அகத் தூய்மையும் அவசியம். 1.33 இல் கூறப்பட்ட நற்பண்புகளைப் பின்பற்றுவதால் அதனை அடையலாம். புறத் தூய்மையைவிட அகத் தூய்மை முக்கியமானது. என்றாலும் இரண்டுமே அவசியம். அகத் தூய்மையின்றி புறத்தூய்மை பயனற்றது.
33. விதர்க்கபாதனே ப்ரதிபக்ஷபாவனம்
யோகத்திற்கு எதிரான எண்ணங்களைத் தடுக்க அவற்றிற்கு நேர்மாறான எண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்.
நற்பண்புகளைப் பழகுவதற்கு இதுவே வழி, உதாரணமாக மனத்தில் கோபம் பேரலையாகப் பொங்கி எழும்போது நாம் அதை எப்படி அடக்குவது? எதிரான ஓர் அலையை எழுப்புவதன் மூலம்தான். அன்பை நினையுங்கள். தாய் தன் கணவனுடன் கோபித்துக் கொள்கிறாள். அப்போது குழந்தை அவளிடம் வருகிறது. அவள் அதனை எடுத்து முத்தம் கொடுக்கிறாள். கோப அலை தணிந்துவிடுகிறது. குழந்தையின்மீது அன்பாகிய புதிய அலை எழுகிறது. இது பழைய அலையை அடக்கி விடுகிறது. அன்பு கோபத்திற்கு எதிரானது. இவ்வாறே திருடும் எண்ணம் வரும்போது களவு செய்யாமைபற்றி எண்ண வேண்டும். பிறரிடமிருந்து பொருளைப் பெறும் எண்ணம் வரும்போது அதற்கு எதிரான ஒன்றை எண்ண வேண்டும்.
34. விதர்க்கா ஹிம்ஸாதய க்ருதகாரிதானுமோதிதா லோப க்ரோத மோஹ பூர்வகா ம்ருதுமத்யாதி மாத்ரா துக்காஜ்ஞானானந்தபலா இதி ப்ரதிபக்ஷ பாவனம்
கொலை, பொய் முதலியவை யோகத்திற்குத் தடைகள், இவற்றைச் செய்வதோ செய்விப்பதோ ஆமோதிப்பதோ கூடாது. இந்தச் செயல்களின் காரணங்கள் வெறுப்பு, கோபம், அறியாமை என்பவையாகும். இவை குறைந்தோ நடுத்தரமாகவோ பெரிய அளவிலோ இருந்தாலும் முடிவில் அளவிலா அறியாமையையும் துன்பத்தையும் விளைவிக்கும். இதுவே எதிரான எண்ணத்தை எண்ணும் முறையாகும்.
நான் ஒரு பொய் சொல்கிறேன், அல்லது பொய் சொல்லும்படி மற்றொருவனைத் தூண்டுகிறேன். அல்லது ஒருவன் சொன்ன பொய்யை ஆமோதிக்கிறேன் இவையனைத்தும் சமமான பாவச் செயல்களே. குறைந்த பொய் ஆனாலும் அது பொய்தான். நீங்கள் எங்கேயோ மலைக்குகைக்குள் புகுந்து உங்களை அடைத்துக் கொள்ளலாம், ஆனால் அங்கே நீங்கள் எண்ணும் ஒவ்வொரு தீய எண்ணமும் ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்; பன்மடங்கு ஆற்றலுடன் ஏதோவொரு துன்பத்தின் வடிவில் ஒருநாள் உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் எழுப்புகின்ற வெறுப்பும் பொறாமையும் கூட்டுவட்டியுடன் உங்களிடமே திரும்பி வந்துசேரும். அவற்றை எந்த ஆற்றலும் தடுக்க முடியாது. அவை உங்களில் எழ ஒருமுறை இடமளித்து விட்டீர்களானால் விளைவை நீங்கள் தாங்கியே தீர வேண்டும். இதை நினைவில் கொள்வது, தீய செயல்களைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும்.
35. அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதௌ வைரத்யாக
கொல்லாமையில் நிலைபெற்றவனின் முன்னிலையில் (பிறரது)பகைமை ஒழிந்துவிடும்.
ஒருவன் பிறரைக் கொல்லாமை என்ற லட்சியத்தை மேற்கொண்டால் அவன் முன்னிலையில் கொடிய இயல்புடைய மிருகங்களும் அமைதியாக இருக்கும். அந்த யோகிக்கு முன் புலியும் ஆட்டுக்குட்டியும் விளையாடிக் களிக்கும். அந்த நிலை வந்தால்தான் நீங்கள் கொல்லாமையில் நிலைபெற்றிருக்கிறீர்கள் என்பது உறுதியாகும்.
36. ஸத்ய ப்ரதிஷ்டாயாம் க்ரியா பலாச்ரயத்வம்
உண்மையில் நிலைபெற்ற யோகி செயல்புரியாமலேயே தனக்கும் பிறருக்கும் செயலின் பயனை விளைவிக்கும் ஆற்றலைப் பெறுகிறான்.
உண்மையில் இந்த ஆற்றல் உங்களிடம் நிலைபெறுமானால் கனவில்கூட நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள். மனம், வாக்கு, செயல் அனைத்திலும் நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். நீங்கள் சொல்பவை, அனைத்தும் உண்மையாகி விடும். நீ பேறு பெறுவாய் என்று ஒருவனிடம் நீங்கள் சொன்னால் அவன் பேறு பெற்றவனாவான். நோயுற்றவனை நோக்கி நீ நலம் பெறு என்று சொன்னால், உடனே அவன் நோய் நீங்கி நலம் பெறுவான்.
37. அஸ்தேய ப்ரதிஷ்டாயாம் ஸர்வரத்னோபஸ்த்தானம்
களவு செய்யாமையில் நிலைபெற்ற யோகிக்கு எல்லா செல்வமும் வந்து சேரும்
இயற்கையிலிருந்து எவ்வளவுக்கு விலகி ஓடுகிறீர்களோ அவ்வளவுக்கு அது உங்களைத் தொடரும். நீங்கள் அதைப் பொருட்படுத்தாவிட்டால் அது உங்களுக்கு அடிமையாகிவிடும்.
38. ப்ரஹ்மசர்ய ப்ரதிஷ்டாயாம் வீர்ய லாப
பிரம்மச்சரியத்தில் நிலைபெற்றவனுக்கு பிரம்மச்சரிய சக்தி உண்டாகிறது.
பிரம்மச்சரியம் உள்ளவனது மூளையின் ஆற்றல் அளப்பரியதாகிறது. அவன் மகத்தான சுயேச்சை உடையவன் ஆகிறான். பிரம்மச்சரியம் இல்லாமல் ஆன்மீக சக்தி வருவதில்லை. அது மக்களை வசப்படுத்தும் அற்புத சக்தியை அளிக்கிறது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்களே ஆன்மீகத் தலைவர்களாக இருந்தனர். பிரம்மச்சரியமே அவர்களுக்கு ஆற்றலை அளித்தது. எனவே யோகிக்கு பிரம்மச்சரியம் அவசியமானது.
39. அபரிக்ரஹஸ்தைர்யே ஜன்மகதந்தா ஸம்போத
பிறரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் ஒருவன் முற்பிறவி நினைவைப் பெறுகிறான்.
பிறரிடமிருந்து எதையும் பெறாமல் இருக்கும்போது, மற்றவனுக்குக் கடமைப்படாதவனாக இருக்கிறான். சுதந்திரமாக இருக்கிறான். அவனது மனம் தூய்மை பெறுகிறது. ஒரு பொருளைத் தானமாகப் பெற்றால், கொடுப்பவனின் பாவத்தில் ஒரு பங்கையும் அதனுடன் பெற வேண்டும். ஆதலால் தானம் பெறாவிட்டால் அவனது மனம் தூய்மை அடைகிறது. அதன் விளைவாக முதலில் முற்பிறவி நினைவைப் பெறுகிறான். அதன்பிறகே யோகி தனது லட்சியத்தில் நிலைபெறுகிறான். தான் பல தடவை பிறந்து இறந்துகொண்டிருப்பதை அவன் உணர்கிறான். எனவே இந்த முறை முக்தி பெற்றே தீர வேண்டும். இனி மேலும் பிறந்திறக்கக் கூடாது. இயற்கையின் அடிமையாக இருக்கக் கூடாது என்று நிச்சயிக்கிறான்.
40. சௌசாத் ஸ்வாங்க ஜுகுப்ஸா பரைரஸம்ஸர்க
அக மற்றும் புறத் தூய்மையில் நிலைபெற்றவனுக்குத் தன் உடல்மீது வெறுப்பும் பிறருடன் உடல் தொடர்பின்மையும் உண்டாகும்.
அகமும் புறமும் உடல் உண்மையான தூய்மை பெற்ற பிறகு, உடலைப் புறக்கணிக்க நேர்கிறது. அதை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் மறைகிறது. மிகவும் அழகிய முகம் என்று பிறர் கூறுகின்ற ஒரு முகம், அதில் அறிவு ஒளி வீசாவிட்டால், ஒரு விலங்கின் முகம் போலவே யோகிக்குத் தெரியும். ஆன்மீக ஒளி வீசுமானால், மற்றவர் மிகச் சாதாரண முகம் என்று சொல்லும் முகத்தையும் யோகி தெய்வீகமாகக் கொண்டாடுகிறான். உடலின் மீதுள்ள இந்த மோகம் மனித வாழ்க்கையில் ஒரு சாபக்கேடு எனவே தூய்மையில் நிலைபெற்றிருப்பதன் முதல் அறிகுறி, நீங்கள் உங்களை உடல் என்று எண்ணாமல் இருப்பதே. தூய்மை வரும்போதுதான் நாம் உடலுணர்வை விடமுடியும்.