Home » விவேகானந்தர் » ராஜ யோகம் பகுதி -10
ராஜ யோகம் பகுதி -10

ராஜ யோகம் பகுதி -10

2. சாதனை பாதம்

ஒருமைப்பாடு: அதன் பயிற்சி

1. தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக

தவம், படிப்பு, செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் இவை கிரியா யோகம்.

சென்ற பகுதியின் இறுதியில் நாம் கண்டசமாதிகளை அடைவது மிகவும் கடினம். அவற்றைப் படிப்படியாகத் தான் முயல வேண்டும். முதல்படி, ஆரம்பப்படி கிரியா யோகம், கிரியா என்பதற்குச் செயல் என்று பொருள், கிரியா யோகம் என்றால் யோகத்தை அடைவதற்கான செயல்.

புலன்களே குதிரைகள், மனம், கடிவாளம்; புத்தி, சாரதி, உடல், தேர், இவற்றின் தலைவனான, மன்னனான ஆன்மா தேரில் வீற்றிருக்கிறான். குதிரைகள் வலிமை மிக்கவையாக, கடிவாளத்திற்கு அடங்காதவையாக இருந்து, சாரதியான புத்திக்கு அவற்றை அடக்க முடியாமலும் போகுமானால் தேர் ஆபத்திற்கு உள்ளாகும், மாறாக, புலன்களாகிய குதிரைகளை, மனமாகிய கடிவாளத்தால், புத்தி என்ற சாரதி திறம்பட அடக்கி நடத்தினால் தேர் இலக்கை அடைகிறது.

எனவே இந்தத் தவம் என்பது என்ன? உடலையும் புலன்களையும் வழிநடத்தும்போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்து அவை இரண்டும் தாம் விரும்பும்படிச் செல்லவிடாமல் தடுத்து வைப்பது தவம் ஆகிறது.

படிப்பு இங்கே படிப்பு என்றால் என்ன? நாவல்களையோ புத்தகங்களையோ படிப்பதல்ல. ஆன்மாவின் முக்திக்கு வழிகாட்டும் சாஸ்திரங்களைக் கற்பதே தர்க்க நூல்களைக் கற்பதும் படிப்பு ஆகாது. வாதப் பிரதிவாதத்தில் ஈடுபடும் நிலையை யோகி கடந்திருக்க வேண்டும். அவன் போதிய வாதங்களைச் செய்து திருப்தியான முடிவுக்கு வந்துவிட்டான். இப்போதைய அவனது படிப்பு, தனது முடிவுகளை உறுதிப்படுத்தவே. வாதம், சித்தாந்தம் இவை இருவகையான சாஸ்திர அறிவாகும். வாதம் (தர்க்கம்) சித்தாந்தம்(முடிவு) ஒருவன் விஷயத்தை முற்றிலும் அறியாதிருக்கும்போது வாதம் என்ற முதல் பகுதியை எடுத்து விஷயத்திற்கு உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் தர்க்கம் செய்கிறான். பின்னர் இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறான். ஒரு முடிவுக்கு வந்தால் மட்டும் போதாது. இந்த முடிவை உறுதிப்படுத்த வேண்டும். நூல்களோ எண்ணற்றவை. காலமோ மிகக் குறைவு. ஆகவே சாரத்தை மட்டும் கொள்வது அறிவை வளர்க்கும் ரகசியம்,. சாரத்தை எடுத்து அதன்படி வாழ்க்கையை நடத்த முயற்சி செய்ய வேண்டும்.

பழைய இந்தியக் கதை ஒன்று உண்டு. அன்னப் பறவையின் முன் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்த பாலை வைத்தால் அது தண்ணீரைப் பிரித்துவிட்டு, பாலை மட்டும் பருகும். அதுபோல் அறிவிலும் பயனுள்ளதை எடுத்துக்கொண்டு பயனற்றதை விட்டுவிட வேண்டும்.

புத்தி சாதுரியங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தேவை. குருட்டுத்தனமாக எதையும் ஒப்புக்கொள்ளக் கூடாது. யோகி வாதம் செய்யும் நிலையைக் கடந்துவிட்டான், பாறையைப் போன்று அசைக்க முடியாத முடிவுக்கு வந்து விட்டான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் அந்த முடிவைத் தீவிரப்படுத்துவதே. யாராவது உங்களுடன் விவாதிக்க வந்தால் வாதிடாதீர்கள், மவுனமாக இருங்கள். வாதத்துக்கு விடையளிக்காமல் சென்று விடுங்கள் என்கிறான் யோகி, ஏனெனில் வாதங்கள் மனத்தில் சஞ்சலத்தை உண்டாக்கும். புத்தியைப் பயிற்றுவிப்பதே நாம் செய்ய வேண்டுவது; அதையே ஏன் காரணமின்றிக் குழப்ப வேண்டும்? புத்தி ஒரு பலவீனமான கருவி, புலன்களின் எல்லைக்கு உட்பட்ட அறிவையே அதனால் நமக்குத் தர முடியும். யோகியோ புலன்களுக்கு அப்பால் செல்ல விரும்புகிறான். ஆதலால் புத்தியால் அவனுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆகவே இதனை சர்வ நிச்சயமாகப் புரிந்திருக்கின்ற அவன் வாதம் புரிய மறுக்கிறான். மவுனமாக இருக்கிறான். ஒவ்வொரு வாதமும் மனத்தின் சமநிலையைக் குலைக்கிறது. சித்தத்தில் சஞ்சலத்தை எழுப்புகிறது. சஞ்சலம் என்பதே ஒரு குறைபாடு. வாதங்களும் ஆராய்ச்சித் தேடல்களும் வெறும் வழி மட்டுமே. அவற்றிற்கு அப்பால் உயர்ந்த பல விஷயங்கள் உள்ளன. பள்ளிச்சிறுவர்களைப்போல் சண்டையிடுவதற்கும் வாதப் போர்களுக்கும் உரியதல்ல வாழ்க்கை.

செயலின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக்கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும்.

2. ஸமாதி பாவனார்த்த க்லேச தனூகரணார்த்தச்ச

(அது) சமாதியைப் பயிற்சி செய்வதற்கும், துன்பம் தரும் தடைகளைக் குறைப்பதற்கும் ஆகும்.

சலுகை கொடுத்து, பிழைபட வளர்த்த பிள்ளைகளைப்போல், மனத்தை அது விரும்பியபடியெல்லாம் செய்யுமாறு நம்மில் பலரும் விட்டுவிடுகிறோம். ஆகவே மனத்தை வசப்படுத்தி அடக்குவதற்கு, கிரியா யோகத்தை இடைவிடாது பயில வேண்டும். மனம் அடக்கப் படாததால்தான் யோகத்திற்குத் தடைகள் ஏற்பட்டு நமக்குத் துன்பம் நேரிடுகிறது. கிரியா யோகத்தின் மூலம் மனத்தைத் தடுத்து அடக்குவதால் மட்டுமே தடைகளை நீக்க முடியும்.

3. அவித்யாஸ்மிதா ராகத்வேஷாபிநிவேசா க்லேசா

அறியாமை, நான் உணர்வு, பற்று, வெறுப்பு, வாழ்வின்மீது மோகம் இவையே துன்பம் தரும் தடைகள்.

இந்த ஐவகைத் துன்பங்களும் நம்மைக் கட்டிக் கீழே இழுக்கின்ற தளைகள் ஆகும். இவற்றுள் அறியாமை என்பதுதான் காரணம் மற்ற நான்கும் விளைவுகள். நமது துன்பங்களுக்கு ஒரே காரணம் அறியாமையே. அதைத் தவிர வேறு எது நமக்குத் துன்பத்தைத் தர முடியும்? நித்திய ஆனந்தமே ஆன்மாவின் இயல்பு, அறியாமை, பொய்க் காட்சி, மயக்கம் இதைத் தவிர எது ஆன்மாவைத் துன்பத்திற்கு உள்ளாக்க முடியும்? ஆன்மாவின் துன்பம் எல்லாம் வெறும் மயக்கமே.

4. அவித்யா ÷க்ஷத்ரமுத்தரேஷாம் ப்ரஸுப்த தனு விச்சின்னோதாராணாம்

மந்தமாகவோ, உறைந்ததாகவோ, அமுக்கப்பட்டோ அல்லது தளர்ந்ததாகவோ, எந்த நிலையில் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அறியாமையே மூலகாரணம்.

நான்-உணர்வு, பற்று, வெறுப்பு வாழ்வின்மீது மோகம் இவற்றிற்குக் காரணம் அறியாமையே. இந்த சம்ஸ்காரங்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. சில வேளைகளில் அவை மந்தநிலையில் உள்ளன குழந்தை போல் வெகுளித்தனம் என்று சொல்லப்படுவதை நீங்கள் அடிக்கடிக் கேட்கிறீர்கள். ஆனால் குழந்தையிடம் அசுர இயல்போ அல்லது தெய்வ இயல்போ புதைந்து கிடக்கிறது. அது படிப்படியாக வெளிவரும். முன்வினைகள் விட்டுச்சென்ற இந்த சம்ஸ்காரங்கள் யோகியிடம், உறைந்து போனதுபோல் அதாவது மிகவும் நுண் நிலையில் கிடக்கின்றன. யோகி அவற்றை அடக்கி, அவை எழாமல் தடுத்துவிட முடியும்.

அமுக்க நிலை என்றால் சிவவேளைகளில் சில சம்ஸ்காரங்கள், வலிமையுள்ள பிற சம்ஸ்காரங்களால் அமுக்கிவைக்கப்ட்ட நிலையில் இருக்கும். ஆனால் அமுக்கி வைத்திருந்த காரணம் நீங்கியவுடன் அவை வெளிப்படுகின்றன. இறுதியானது கிளர்ந்த நிலை. இதில் சம்ஸ்காரங்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது அவை வலிமை பெற்று நன்மையையோ தீமையையோ செய்ய முயல்கின்றன.

5. அநித்யாசுசி து:கானாத்மஸு நித்ய சுசி ஸுகாத்ம க்யாதிரவித்யா

நிலையற்றதை நிலையானதாகவும் தூய்மையற்றதைத் தூய்மையானதாகவும், துன்பத்தை இன்பமாகவும், ஆன்மா அல்லாததை ஆன்மாவாகவும் கொள்வதே அறியாமை

வேறுபட்ட சம்ஸ்காரங்கள் அனைத்திற்கும் மூல காரணம் அறியாமையே அறியாமை என்பது என்ன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். தூய ஒளிமிக்க, எப்போதும் ஆன்ந்தமான ஆன்மாவை நாம் என்று நினைக்காமல், உடம்பே நான் என்று நினைக்கிறோம். இதுவே அறியாமை. உடம்பை மனிதன் என்று நினைக்கிறோம். மனிதனாகக் காண்கிறோம். இதுதான் பெரிய மயக்கம்.

6. த்ருக் தர்சன சக்தயோரேகாத்மதைவாஸ்மிதா

காண்போனையும் காண்பதற்கான கருவியையும் ஒன்றாகக் கருதுவதே நான் உணர்வு.

தூய என்றென்றும் புனிதமான, எல்லையற்ற, நித்தியமான ஆன்மாவே உண்மையில் காண்பவன். இது மனிதனின் உண்மையான ஆன்மா, கருவிகள் என்பவை எவை? சித்தம், புத்தி, மனம், புலன்கள் இவையே, புறவுலகை ஆன்மா காண்பதற்குரிய கருவிகள் இவைதாம். ஆன்மாவைக் கருவிகளுடன் கருதுவது நான் உணர்வின் அறியாமை. நானே மனம்; நானே எண்ணம்; நான் கோபம் கொள்கிறேன். நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்றெல்லாம் சொல்கிறோம், நான் எவ்வாறு கோபம் கொள்ள முடியும்? நாம் எவ்வாறு வெறுக்க முடியும்? மாறுபாடற்ற ஆன்மாவுடன் நம்மை நாம் ஒன்றாகக் கருத வேண்டும். ஆன்மா மாறுபாடு இல்லாதது என்றால், ஒரு கணம் இன்பமாகவும் மறுகணம் துன்பமாகவும் அது எப்படி இருக்க முடியும்? அது உருவமற்றது; எல்லையற்றது; எங்கும் நிறைந்தது. எது அதனை மாறுபாடு அடையச் செய்ய முடியும்? அது எல்லா நியதிகளையும் கடந்தது. எது அதனைப் பாதிக்க முடியும்? பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அதன்மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது. ஆயினும் அறியாமையால் நாம் நம்மைச் சித்தத்துடன் ஒன்றாகக் கருதி, இன்ப துன்பங்களை அடைவதாக எண்ணுகிறோம்.

7. ஸுகானுசயீ ராக

இன்பத்தை நாடுவது பற்று. சில பொருட்களில் நாம் இன்பத்தைக் காண்கிறோம். பிரவாகத்தைப்போல் மனம் அவற்றிடம் ஓடுகிறது. இப்படி இன்ப மையத்தை நோக்கி ஓடும் மனப்பிரவாகத்தையே நாம் பற்று என்கிறோம். சில வேளைகளில் விசித்திரமான பொருட்களிலும் நாம் இன்பம் காண்கிறோம். இருந்தாலும், இன்பம் பெறும் இடத்தில் பற்று வைக்கிறோம் என்ற நியதிக்கேற்ப அவற்றிலும் பற்றுக் கொள்ளவே செய்கிறோம்.

8. து:க்கானுசயீ த்வேஷ

துன்பத்தைத் தொடர்வது வெறுப்பு.

எது துன்பம் தருகிறதோ அதிலிருந்து உடனே விலக முயல்கிறோம்.

9. ஸ்வரஸவாஹீ விது÷ஷாபிததாரூடோ பினிவேச

வாழ்க்கைமீது மோகம் என்பது இயல்பாகப் பிரவகிப்பதும், அறிவாளிகளிடமும்கூட அமைந்திருப்பதும் ஆகும்.

ஒவ்வொரு பிராணிக்கும் வாழ்வின்மீது மோகம் உண்டு. மக்கள் வாழ்க்கையை அவ்வளவு தீவிரமாக விரும்புவதால் மறுமை வாழ்க்கையும் உண்டு என்று கூறி மறுமைபற்றிய கொள்கையை நிறுவவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த வாதத்தில் அவ்வளவு உண்மை இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். இதில் ஒரு வினோதம் என்னவென்றால், இந்த வாதம் மனிதர்கள் விஷயத்தில் உண்மையாயிருக்கலாம். பிராணிகள் விஷயத்தில் சரியல்ல என்று மேலை நாட்டினர் கூறுவதுதான். இந்தியாவில் முற்பிறவி, பூர்வ சம்ஸ்காரங்கள் என்பவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களுள் இந்த மோகம் என்பது ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. நமது அறிவு எல்லாமே அனுபவத்திலிருந்தே வந்துள்ளது என்பது உண்மையானால், நாம் அனுபவிக்காததை நம்மால் நினைக்கவோ அறியவோ முடியாது என்பது நிச்சயம். ஆனால் கோழிக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் உணவைக் கொத்தித் தின்னத் தொடங்குகின்றன. கோழியினால் அடைகாக்கப்பட்டுப் பொரித்தால்கூட வாத்துக்குஞ்சுகள் நீரை நோக்கி ஓடுகின்றன. அடைகாத்த கோழி, குஞ்சுகள் நீரில் மூழ்கி இறந்துவிடுமே என்று பயப்படுகிறது. அனுபவம் மட்டுமே அறிவின் ஆதாரம் என்றால் கோழிக்குஞ்சுகள் பொரித்தவுடன் உணவைக் கொத்தவும், வாத்துக் குஞ்சுகள் இயல்பாக நீரை நோக்கி ஓடவும் எங்கிருந்து கற்றன?அவை அந்தந்த உயிர்களின் இயல்புணர்ச்சி என்றால் அந்த விடை ஒன்றுமில்லை. அது வெறும் வார்த்தை மட்டுமே; விளக்கம் ஆகாது.

இந்த இயல்புணர்ச்சி என்றால் என்ன? நம்மிடம் பல இயல்புணர்ச்சிகள் உள்ளன. நீங்கள் பெண்களுள் பலர் பியானோ வாசிப்பீர்கள் அல்லவா! நீங்கள் கற்க ஆரம்பித்தபோது, விரல்களை வெள்ளை அல்லது கறுப்புக் கட்டைகள்மீது மிகவும் கவனமாக வைக்க வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும், ஆனால் பல ஆண்டுகள் பழகிய பிறகு, இப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே விரல்கள் எந்திரகதியில் பியானோவை வாசிக்கிறது. அது இயல்புணர்ச்சி ஆகிவிட்டது. நாம் செய்யும் எல்லா செயல்களும் இவ்வாறே, பழக்கத்தின் காரணமாக இயல்புணர்ச்சியாகிவிட்டது. அனிச்சையாக அது நிகழ்கிறது. அனிச்சைச் செயல் என்று நாம் இப்போது கருதுகின்ற ஒன்றை ஆரம்பத்தில் நாம் அறிவால் ஆராய்ந்தே செய்ய வேண்டியிருந்தது. இப்போது இயல்பாகிவிட்டது. இயல்புணர்ச்சி என்பது பகுத்தறிவின் படிப்படியாகச் சுருங்கிய நிலை என்கிறான் யோகி. முதலில் செயல் பகுத்தறிவோடு கூடி இருக்கிறது. நாளடைவில் பகுத்தறிவு பின்னால் ஒடுங்கி அனிச்சை சம்ஸ்காரங்கள் ஆகிவிடுகின்றன. எனவே இந்த இயல்புணர்ச்சியை, ஒடுங்கிய பகுத்தறிவு என்பது நியாயமானதே. அனுபவமின்றிப் பகுத்தறிவு வராது. ஆதலால் எல்லா இயல்புணர்ச்சிகளுமே பழைய அனுபவங்களின் விளைவு தான். கோழிக் குஞ்சுகள் பருந்துக்குப் பயப்படுகின்றன, வாத்துக் குஞ்சுகள் நீரை நாடுகின்றன. இவை இரண்டுமே பழைய அனுபவங்களின் விளைவுதான்.

இந்த அனுபவம் ஆன்மாவுக்கு உரியதா அல்லது உடலுக்கு உரியதா என்ற கேள்வி எழுகிறது. வாத்துக்கு வந்த அனுபவம் அதன் முன்னோர் மூலம் வந்த அனுபவமா? அல்லது, அதன் சொந்த அனுபவமா? நவீன விஞ்ஞானிகள் இந்த அனுபவம் உடலுக்குரியது என்கின்றனர். ஆனால் யோகிகள், இந்த அனுபவம் மனத்திற்கு உரியது, அது உடல்மூலம் வெளிப்படுகிறது என்று கூறுகின்றனர், இதுவே மறுபிறவிக் கொள்கை.

நேரடியறிவு, பகுத்தறிவு, இயல்புணர்ச்சி என்று நாம் எப்படி அழைத்தாலும், நமது அறிவு எல்லாமே அனுபவம் என்ற ஒரு பாதை வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று கண்டோம். இப்போது இயல்புணர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே ஒடுங்கிய நிலையில் இருந்த பழைய அனுபவத்தின் விளைவே. அனுபவம் இயல்புணர்ச்சியாகிறது. இயல்புணர்ச்சி மீண்டும் பகுத்தறிவாகிறது. பிரபஞ்சம் முழுவதும் இவ்வாறே நடக்கிறது. இதுவே இந்தியாவின் மறுபிறவிக் கொள்கைக்கான முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக இருக்கிறது. பல்வேறு அச்சங்கள் மீண்டும்மீண்டும் வருவதால் வாழ்க்கைமீது மோகம் ஏற்படுகிறது. பழைய துன்பத்தின் அனுபவம் குழந்தையின் மனத்தில் இருப்பதால்தான் அதற்கு இயல்பாகவே அச்சம் உண்டாகிறது. இந்த உடம்பு அழிந்துவிடும் என்பதை அறிந்து கவலை வேண்டாம், நமக்கு நூற்றுக்கணக்கான உடல்கள் வரும், ஆன்மா இறப்பதில்லை என்று கூறுகின்ற பண்டிதர்களிடமும்கூட, அவர்கள் தங்கள் அறிவினால் மோகமும் உள்ளது. ஏன்? ஏனெனில் அது இயல்புணர்ச்சி ஆகிவிட்டது. யோகிகள் தங்கள் மனஇயல் மொழியில் அது சம்ஸ்காரமாகிவிட்டது என்கிறார்கள். நுண்ணிய தான சம்ஸ்காரங்கள் சித்தத்தில் மறைந்திருக்கின்றன மரணத்தைப் பற்றிய பழைய அனுபவம் மற்றும் நாம் இயல்புணர்ச்சி என்று அழைக்கின்ற எல்லாமே சித்தத்தில் உணர்வு மட்டத்திற்குக் கீழ் சென்ற அனுபவங்கள், அவ்வளவுதான். சித்தத்தில் அவை செயலற்று இருக்கவில்லை. அங்கே வாழ்கின்றன, செயல்படுகின்றன.

தூலமான சித்த விருத்திகளை, எண்ண அலைகளை உணர முடியும், அவற்றை எளிதாக அடக்கவும் முடியும். சூட்சுமமான இயல்புணர்ச்சிகளை எவ்வாறு அடக்குவது? நான் கோபம் கொள்ளும்போது என் மனம் முழுவதுமே கோபத்தின் ஒரு பெரிய அலையாகிறது. நான் அதை உணர்கிறேன். காண்கிறேன். கையாள்கிறேன். அதை எளிதில் என்னால் வசப்படுத்த முடியும், அதனுடன் போராட முடியும். ஆனால் அடியாழத்திற்குச் சென்று அதன் மூலகாரணத்தை அறியாமல், என்னால் முழு வெற்றி பெற முடியாது. ஒருவன் என்னிடம் கடுமையாக ஏதோ சொல்கிறான். அதை நான் உணர்கிறேன். எனக்குச் சூடேறுகிறது. அவனோ மேலும் நிந்திக்கிறான். நான் முழுச் சினம்கொண்டு என்னை மறந்து சினத்துடன் ஒன்றுகிறேன். அவனை ஏசத் தொடங்கும்போது எனக்குக் கோபம் வருகிறது என்று நினைக்கிறேன். அப்போது கோபம் வேறு நான் வேறு. கடைசியில் கோப வசப்படும் போது நானே கோபமாகி விடுகிறேன். இந்த உணர்ச்சிகளை முளையிலே, வேரிலே சூட்சும நிலையிலே, அவை நம்மை ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதை நாம் உணரும் முன்னரே அடக்கிவிட வேண்டும். மக்களுள் பெரும்பாலானோருக்கு இந்த உணர்ச்சிகளின், இந்த ஆசைகளின் சூட்சும நிலையைப்பற்றி, ஆழ்மனத்திலிருந்து அவை வெளிவரும் நிலையைப்பற்றி எதுவுமே தெரியாது. குளத்தின் அடியிலிருந்து கிளம்புகின்ற குமிழி மேல் மட்டத்திற்கு வரும்வரை பார்க்க முடிவதில்லை. ஏறக் குறைய நீர்மட்டத்தை நெருங்கும்போது கூட நாம் அதைக் காண்பதில்லை. மேலே வந்து உடைந்து ஓர் அலையை உண்டாக்கும்போது தான் அதை நாம் அறிகிறோம். அலைகள் சூட்சும நிலையில் இருக்கும்போதே அடக்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும், தூலமாவதற்கு முன் அடக்காவிட்டால் எந்த ஆசையையும் முற்றிலுமாக வெல்ல முடியாது. ஆசைகளை அடக்க வேண்டுமானால் அவற்றை வேரிலேயே கட்டுப்படுத்த வேண்டும், அப்போதுதான் அவற்றின் விதைகளையே பொசுக்க முடியும். வறுத்தெடுத்த விதை முளைக்காததுபோல் இந்த ஆசைகளும் ஒருபோதும் எழாது.

10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா ஸூக்ஷ்மா

சூட்சும சம்ஸ்காரங்களை அவற்றின் காரண நிலையில் ஒடுக்கி, வென்றுவிடலாம்.

சம்ஸ்காரங்கள் என்பவை நுண் பதிவுகள். அவையே பின்னர் தூலமாக உருவெடுக்கின்றன. இந்த சூட்சும சம்ஸ்காரங்களை எவ்வாறு அடக்குவது? காரியத்தைக் காரணத்திற்குள் ஒடுக்குவதன் மூலம்தான். சித்தம், காரியம், அஸ்மிதை அல்லது நான் உணர்வு காரணம், சித்தத்தை நான் உணர்வினுள் ஒடுக்கினால், அதனுடன் சூட்சும சம்ஸ்காரங்களும் அழிந்துவிடும். தியானத்தால் இவற்றை அழிக்க முடியாது.

11. தியானஹேயாஸ்தத்வ்ருத்தய

தியானத்தில் அவற்றின்(தூல) வடிவங்களை ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு எழும் அலைகளை அடக்க தியானம் ஒரு சிறந்த வழியாகும். தியானத்தினால், இந்த அலைகளை மனம் ஒழித்துவிடும்படிச் செய்ய முடியும். நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக தியானம் செய்து, அது ஒரு பழக்கமாகி, நீங்கள் கருதாமல் இருக்கும்போதே தியான நிலை வருமானால், கோபம், வெறுப்பு போன்றவற்றை எளிதில் அடக்கித் தடுக்க முடியும்.

12. க்லேசமூல கர்மாசயோ த்ருஷ்டாத்ருஷ்ட ஜன்ம வேதனீய

வினைத் தொகுதியின் வேர் துன்பம்தரும் தடைகளில் ஊன்றியுள்ளது. இந்தப் பிறவியிலோ அல்லது இனி எடுக்கும் பிறவியிலோ அவற்றின் பலன் உண்டாகிறது.

வினைத் தொகுதி என்பது சம்ஸ்காரங்களின் மொத்தம். நாம் என்ன வேலை செய்தாலும் மனம் ஓர் அலையாக எழுகிறது. வேலை முடிந்தவுடன் அலைபோய் விட்டது என்று எண்ணுகிறோம். அது போகவில்லை. இருக்கிறது. சூட்சும நிலையில் இருக்கிறது. நாம் அந்த வேலையை நினைக்க முயலும்போது அது மீண்டும் அலையாக எழுகிறது. எனவே அங்கே அது இருக்கிறது. இல்லாவிட்டால் ஞாபகம் என்பது இருக்காது. நல்லதாகட்டும், தீயதாகட்டும், ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் இவ்வாறு நுண்ணியதாகி ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகிறது. இன்ப துன்பம் தரும் தடைகள் என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், நாளடைவில் அவை துன்பத்தையே தரும் என்கிறான் யோகி. புலன்கள்மூலம் வரும் இன்பம் எல்லாம் முடிவில் துன்பத்தையே தரும். இன்ப நுகர்ச்சியால் மேலும் மேலும் இன்பம் அனுபவிக்க வேட்கை உண்டாகிறது. அதன் விளைவாகத் துன்பம் ஏற்படுகிறது. மனிதனின் ஆசைக்கு அளவில்லை. அவன் ஆசையைப் பெருக்கிக் கொண்டே இருக்கிறான். ஆசைகள் நிறைவேறாது என்ற ஒரு நிலை வரும்போது துன்பமே விளைவாகிறது. ஆதலால் நல்ல மற்றும் தீய சம்ஸ்காரங்கள், இரண்டுமே துன்பம் தரும் தடைகள். ஆன்மாவின் முக்கிப் பாதையில் இடையூறுகள் என்று யோகிகள் கருதுகின்றனர்.

நமது செயல்கள் அனைத்திற்கும் சூட்சும வேர்களான சம்ஸ்காரங்களின் விஷயமும் இப்படித்தான். இந்தப் பிறவியிலோ, வரும் பிறவிகளிலோ மீண்டும் பலனைத் தருவதற்கான காரணங்களே அவை. அசாதாரணமான சிலவேளைகளில் சம்ஸ்காரங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், பலன் விரைவில் கிடைத்துவிடும். மிகமிகக் கொடிய செயல்கள் அல்லது மிகமிக நல்ல செயல்கள் இந்தப் பிறவியிலேயே பலனளித்துவிடும்.

அளப்பரிய நல்ல சம்ஸ்காரங்களின் பலனை உடையவர்கள் இறக்கத் தேவையில்லை. அவர்கள் இந்தப் பிறவியிலேயே தங்கள் உடலைத் தேவ உடலாக மாற்றிக்கொள்ள முடியும் என்று யோகிகள் கூறுகின்றனர். அவர்களின் நூல்களில் இத்தகைய எத்தனையோ சான்றுகள் உள்ளன. இத்தகையோர் தங்கள் உடலின் மூலப்பொருளை மாற்றி அழைக்கின்ற ஒன்றோ வராத வண்ணம் அவர்கள் தங்கள் உடலின் மூலக்கூறுகளை மாற்றியமைக்கின்றனர். ஏன் அப்படியிருக்கக் கூடாது? உடலியலின்படி, உணவு என்பது சூரியனிடமிருந்து வரும் சக்தியைக் கிரகித்து ஏற்றுக்கொள்ளல். சூரிய சக்தி தாவரங்களில் சேமிக்கப் படுகிறது. பிராணிகள் தாவரங்களை உண்கின்றன. மனிதன் பிராணிகளை உணவாகக் கொள்கிறான். விஞ்ஞான மொழியில் சொல்வதானால், சூரியனிடமிருந்து நாம் சக்தியைப் பெற்று, நமது அங்கமாக்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் சக்தியைப் பெற ஏன் ஒரே ஒரு வழிதான் இருக்க வேண்டும்? தாவரங்கள் சக்தியை ஏற்கும் வழி வேறு; நாம் ஏற்கும் வழி வேறு; பூமி சக்தியை சேர்க்கும் விதம் நம்மிலிருந்து வேறுபட்டது. ஆனால் எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் சக்தியைக் கிரகிக்கவே செய்கின்றன. யோகிகளோ, தாங்கள் சாதாரண வழிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. தங்கள் மனவலிமையாலேயே தாங்கள் விரும்பும் அளவு சக்தியைப் பெற முடியும் என்று கூறுகின்றனர். சிலந்தி தன்னிடம் சுரக்கும் திரவத்தாலேயே வலை பின்னி அதிலேயே கட்டுண்டு, அந்த வலையின் இழைகள் வழியே தவிர மற்ற வழியில் செல்ல முடியாததாக இருக்கிறது. அதுபோல் நாமும் நமது தாதுப்பொருளாலேயே உடலில் நரம்புப் பின்னல்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நரம்புகள் வழியே தவிர, வேறு வழியாக நாம் செயல்புரிய முடியாது. அவ்வாறு நாம் நரம்புகளால் கட்டுண்டு இருக்க வேண்டியதில்லை என்கிறான் யோகி.

அதுபோல் மின்சாரத்தை உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் அதனைக் கம்பிகள் வழியாகவே அனுப்ப வேண்டியுள்ளது. இயற்கையோ பேரளவு மின்சக்தியைக் கம்பிகளின்றி அனுப்புகிறது. நாமும் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? மன மின்சாரத்தை நாம் அவ்வாறு அனுப்பலாம். நாம் மனம் என்று கூறுவதும் ஏறக்குறைய மின்சாரத்தை ஒத்ததே. நமது நரம்புப் பிரவாகத்தில் மின்சக்தி உள்ளது என்பது வெளிப்படை. ஏனெனில் அது துருவத் தன்மை காட்டுகிறது. மின்சாரத்தின் எல்லா தன்மைகளையும் உடையதாக இருக்கிறது. நாம் நமது மின்சாரத்தை இந்த நரம்புப் பிரவாகங்கள் வழியாக மட்டுமே அனுப்ப முடியும். இந்த உதவியின்றி மன மின்சாரத்தை ஏன் அனுப்பக் கூடாது? கட்டாயமாக அனுப்பலாம் என்கிறான் யோகி. அது முடியுமானால், நீங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் செயல்புரியலாம். நரம்பு மண்டலத்தின் உதவியின்றியே எங்கேயும் எந்த உடலுடனும் நீங்கள் செயல்படலாம். நரம்பு மண்டலத்தின் மூலம் ஒருவன் செயல் புரியும்போது அவன் உயிருடன் இருக்கிறான் என்றும், அவை ஓய்கின்றபோது அவன் இறந்துவிட்டதாகவும் கூறுகிறோம். நரம்பு மண்டலத்தின் உதவியின்றியே ஒருவன் செயல்பட முடியுமானால் அவனுக்கு பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் பொருளற்றுப் போய்விடுகின்றன. பிரபஞ்சத்திலுள்ள உடல்கள் எல்லாம் தன் மாத்திரகைளால் ஆனவை. அவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடு இந்தத் தன்மாத்திரகளின் அமைப்பில் உள்ள வேறுபாடே ஆகும். நீங்களே இந்தத் தன்மாத்திரைகளை அமைப்பவராக இருந்தால், உடலை எவ்வாறு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். இந்த உடலை உங்களைத் தவிர வேறு யார் உருவாக்குகிறார்கள்? யார் உணவை உண்கின்றார்? உங்களுக்காக வேறொருவர் சாப்பிட்டால் நீங்கள் நீண்ட காலம் வாழ முடியாது. உணவிலிருந்து யார் ரத்தத்தை உண்டாக்குகிறார்? நிச்சயமாக நீங்கள்தான். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி ரத்தக் குழாய் வழியாக அனுப்புவது யார்? நீங்களே! உடம்பிற்குத் தலைவர்கள் நாமே. நாம் அதில் வாழ்கிறோம். அதை இளமையாக்கி, புத்துயிர் கொடுக்கும் அறிவை இழந்து விட்டோம். நாம் எந்திரமாகிவிட்டோம், கீழ்நிலைக்கு வந்துவிட்டோம். உடலின் மூலக்கூறுகளை அமைக்கும் முறையை மறந்துவிட்டோம். எனவே அனிச்சையாக, எந்திரத்தனமாகச் நாம் தலைவர்கள், மூலக்கூறுகளை நாமே அமைக்க வேண்டும். அதற்கு நம்மால் இயலும் போது நாம் விரும்புகின்ற இளமையைப் பெற முடியும். அப்போது நமக்கு பிறப்போ, நோயோ, இறப்போ இல்லாமல் போய்விடும்.

13. ஸதி மூலமே தத்விபாகோ ஜாத்யாயுர் போகா

மூலகாரணம் இருப்பதால் அதன் பலனாக பல்வேறு பிறவிகள், ஆயுள், இன்ப துன்ப அனுபவம் இவை உண்டாகின்றன.

வேர்களாகிய, மூலகாரணங்களாகிய சம்ஸ்காரங்கள் இருப்பதால் அவை பலன்களாக வெளிப்படுகின்றன. காரணம் அழிந்து காரியமாகிறது. இந்தக் காரியம் சூட்சுமமாகி அடுத்த காரியத்திற்குக் காரணமாகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இந்த விதை அடுத்த மரத்திற்குக் காரணம் ஆகிறது. இவ்வாறு தொடர்கிறது. இந்தப் பிறவியின் செயல்பாடுகள் எல்லாம் நமது முற்பிறவி சம்ஸ்காரங்களின் பலன்கள் ஆகும். இந்தச் செயல்கள் சம்ஸ்காரங்கள் ஆகி, இனி வருகின்ற பிறவிக்குக் காரணங்கள் ஆகும். இவ்வாறு தொடர்ந்து செல்கிறது. ஆகவே காரணம் இருப்பதால் காரியம் வந்தாக வேண்டும் என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. காரணத்திற்கேற்ப ஓர் உயிர் மனிதன் ஆகும், மற்றோர் உயிர் தேவதை ஆகும். இன்னொன்று பிராணி ஆகும். மற்றொன்று அரக்கன் ஆகும். இனி, ஒரு பிறவியிலேயே கர்மத்திற்கேற்ப பலன்கள் வெவ்வேறாக இருக்கும். ஒருவன் ஐம்பது வருடங்கள் வாழ்வான். மற்றொருவன் நூறு ஆண்டுகள் வாழ்வான். இன்னொருவன் மேலும் வளராமல் இரண்டு வருடங்களில் இறந்துவிடுகிறான். வாழ்வில் நாம் காணும் இந்த எல்லா வேறுபாடுகளும் முன்வினைப் பயனாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒருவன் வாழ்க்கையில் இன்பம் அனுபவிப்பதற்காகவே பிறந்தவன் போலிருப்பான்; அவன் காட்டிற்குச் சென்று தன்னை மறைத்துக் கொண்டாலும் இன்பம் அங்கேயும் அவனைத் தொடர்கிறது. மற்றொருவன் எங்குச் சென்றாலும் துன்பம் அவனைத் தொடர்கிறது. அவனுக்கு எல்லாமே துன்பமயம்தான். எல்லாம் முன்வினைப்பயன் யோகத் தத்துவத்தின்படி, நற்செயல்கள் இன்பம் பயக்கும். தீமை செய்பவன் அதன் பலனாகிய துன்பத்தை அனுபவித்தேயாக வேண்டும்.

14. தே ஹ்லாதபரிதாபபலா புண்யாபுண்ய ஹேதுத்வாத்

இவை புண்ணியம் மற்றும் பாவங்களைக் காரணமாகப் பெற்றிருப்பதால் முறையே இன்பதுன்பத்தையும் பலன்களாகத் தருகின்றன.

15. பரிணாம தாப ஸம்ஸ்கார துக்கைர் குணவ்ருத்தி விரோதாச்ச துக்கமேவ ஸர்வம் விவேகின

அனைத்தும் துன்பத்தையே விளைவாகக் கொண்டு வருகின்றன. இன்பத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் உள்ளது, இன்ப அனுபவ சம்ஸ்காரங்களிலிருந்து எழுகின்ற புதிய ஆசைகள் உள்ளன இந்தத் துன்பங்களின் காரணமாகவும் குணங்களின் விருத்திகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதாலும் விவேகிகளுக்கு எல்லாம் துன்பம்போல தோன்றுகின்றன.

யோகிகள் கூறுகின்றனர். நல்லறிவும் விவேகமும் உள்ளவன் இன்பம் மற்றும் துன்பம் என்று அழைக்கப்படுபவற்றை எல்லாம் ஊடுருவிப் பார்க்கிறான்; அவை இரண்டும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவதையும், ஒன்று மற்றொன்றுள் கரைவதையும் அறிகிறான். மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கானல்நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை என்பதைக் காண்கிறான். கணந்தோறும் மக்கள் நம் கண்முன்னால் இறப்பதைக் காண்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் இறக்கமாட்டோம் என்று எண்ணுகிறோம். என்ன விந்தை! என்று வியக்கிறார் மாமன்னரான தர்மபுத்திரர். சுற்றிலும் மூடர்கள் இருப்பதைக் கண்டும், நாம் மட்டும் அறிவாளிகள் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறோம். சுற்றிலும் நிலையற்ற அனுபவங்களைக் கண்டும் நமது அன்பு நிலையானது என்று நினைக்கிறோம். அது எப்படி? அன்பும் சுயநலமே. கணவன், மனைவி, குழந்தை, நண்பன் என்று அனைவரின் அன்பும் சிறிது சிறிதாகத் தேய்ந்து, இறுதியில் மறைவதைக் காணலாம் எனகிறான் யோகி. இந்த வாழ்க்கையில் அனைத்தும், அன்பும்கூட மின்னல்போல் மறைகின்ற போதுதான் மனிதன் திடீரென்று விழித்துக் கொள்கிறான். இந்த உலகம் கனவு போன்றது என்று காண்கிறான். அப்போது சிறிது வைராக்கியம் அடைந்து, அப்பால் உள்ள தன் கணநேரக் காட்சி பெறுகிறான். இந்த உலகைத் துறந்தால்தான் அந்த உலகம் கிடைக்கும்; இந்த உலகைப் பற்றிக்கொள்வதால் ஒருபோதும் கிடைக்காது. புலன் இன்பங்களை விட்டொழிக்காமல் வாழ்ந்து பெருமை பெற்ற மாமனிதர் ஒருபோதும் இருந்ததில்லை. துன்பத்தின் காரணம் இயற்கையின் பல சக்திகள் ஒன்றோடொன்று போராடுவதாகும். ஒன்று மனிதனை ஒருபுறத்திலும் மற்றொன்று மறுபுறத்திலும், பிடித்து இழுத்து அவனை நிலைத்த இன்பம் பெறாதபடிச் செய்துவிடுகின்றன.

16. ஹேயம் துக்கமனாகதம்

இதுவரை வராத துன்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

நமது வினைப்பயனில் ஒரு பகுதியை ஏற்கனவே அனுபவித்து விட்டோம். அதில் மற்றொரு பகுதியை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எஞ்சிய பகுதி எதிர்காலத்தில் பயன் தருவதற்காகக் காத்திருக்கிறது. முதற்பகுதி கழிந்து போய்விட்டது. இரண்டாம் பகுதியை நாம் அனுபவித்தேயாக வேண்டும். எதிர்காலத்தில் பலன் கொடுக்கக் காத்துக் கொண்டிருப்பதை மட்டுமே நாம் வென்று அடக்க முடியும். இந்த முயற்சியில் நமது ஆற்றல்கள் அனைத்தையும் செலுத்த வேண்டும். சம்ஸ்காரங்களை அவற்றின் காரண நிலைக்குக் கொண்டு சென்று வென்றுவிடலாம் என்று பதஞ்சலி முனிவர்(2.10) கூறிய தன் கருத்து இதுவே.

17. த்ரஷ்ட்ரு த்ருச்யயோ ஸம்யோகோ ஹேய ஹேது

காண்பவனுக்கும், காணப்படும் பொருளுக்கும் ஏற்படும் சேர்க்கையே விலக்கப்பட வேண்டிய துன்பத்திற்கான காரணம்.

காண்பவன் யார்? புருஷன் அதாவது மனிதனின் ஆன்மா. காணப்படும் பொருள் எது? மனம் முதல் ஜடப்பொருள்வரையிலான இயற்கை முழுவதும், புருஷனும் மனமும் சேர்வதாலேயே எல்லா இன்பதுன்பங்களும் உண்டாகின்றன. யோகத் தத்துவப்படி புருஷன் தூயவன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். புருஷன் இயற்கையோடு சேரும்போது, இயற்கையில் பிரதிபலித்து, இன்ப துன்பங்களை அனுபவிப்பவன்போல் காணப்படுகிறான்.

18. ப்ரகாச க்ரியா ஸ்திதி சீலம் பூதேந்த்ரியாத்மகம் போகாபவர்கார்த்தம் த்ருச்யம்

காணப்படும் பொருள் பூதங்களாலும் இந்திரியங்களாலும் ஆக்கப்பட்டது. அது ஒளியையும் செயலையும் செயலற்ற தன்மையையும் இயல்பாகக் கொண்டது. (காண்பவனுக்கு) அனுபவமும் முக்தியும் கிடைப்பதற்காக அது உள்ளது.

காணப்படும் பொருள், அதாவது இயற்கை, பூதங்களாலும் புலன்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூதங்கள் என்றால் தூல மற்றும் சூட்சும பூதங்கள். புலன்கள் என்றால் ஐம்புலன்கள், மனம் முதலியவை ஆகும். ஒளி, சத்வம், செயல், ரஜஸ்; செயலற்ற நிலை, தமஸ் இந்த முக்குணங்களும் இயற்கையின் இயல்பு. இயற்கையின் பயன் என்ன? புருஷன் அனுபவம் பெறுவதே. புருஷன் தனது மகிமையை தெய்வத்தன்மையை மறந்ததுபோல் உள்ளான். இந்திரனைப் பற்றிய ஒரு கதை உண்டு.

ஒரு காலத்தில் தேவர்களின் அரசனான இந்திரன் பன்றியாகி சேற்றில் உழன்று கொண்டிருந்தான். பெண் பன்றியுடனும் குட்டிகளுடனும் இன்பமாக அவன் காலம் கழித்து வந்தான். சில தேவர்கள் அவனது பரிதாப நிலையைக் கண்டு அவனிடம் வந்து இந்திரனே! நீ தேவர்களுக்கெல்லாம் தலைவன் தேவர்கள் உன் ஆணைக்கு உட்பட்டவர்கள். நீ ஏன் இப்படி இங்கு உழல்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு இந்திரன், நீங்கள் எனக்காகக் கவலைப்படத் தேவையில்லை. நான் இங்கு இன்பமாகத்தான் இருக்கிறேன். இந்த என் மனைவியும் குட்டிகளும் இருக்கும்போது, எனக்குச் சொர்க்கத்தைப்பற்றிக் கவலை இல்லை என்று கூறிவிட்டான். தேவர்கள் திகைத்து நின்றனர். பிறகு பன்றிகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தனர்,. அவ்வாறே கொல்லவும் செய்தனர். பன்றிகள் இறந்தபோது இந்திரன் அரற்றி அழுதான். இறுதியாக தேவர்கள் அவனது பன்றி உடலையும் கிழித்தனர். வெளியில் வந்த இந்திரன் உண்மையை உணர்ந்தான். பயங்கரக் கனவாயிருந்த தன் பன்றி வாழ்க்கையை நினைத்துச் சிரித்தான். தேவர்களின் அரசனான அவன், ஒரு பன்றியாக, பன்றி வாழ்வுக்கு நிகர் வேறொரு வாழ்வும் இல்லையென்று எண்ணியிருந்தான்! அதுமட்டுமா, பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் பன்றிகளாக வேண்டும் என்றும் விரும்பியது அவனது உள்ளம்!

புருஷன் தன்னைப் பிரகிருதியுடன் இணைத்துக் கொள்ளும்போது, தான் தூயவன், எல்லையில்லாதவன் என்பதை மறந்து விடுகிறான். புருஷன் அன்பு செலுத்துகிறான் என்பதில்லை, அவனே அன்பு. அவன் இருக்கிறான் என்பதல்ல அவனே இருப்பு. அவன் அறிவதில்லை. அவனே அறிவு. ஆன்மா அன்பு செலுத்துகிறது. இருக்கிறது, அறிகிறது என்றெல்லாம் கூறுவது தவறு. அன்பு, இருப்பு, அறிவு என்பவை புருஷனின் குணங்கள் அல்ல, புருஷனின் சாரமே அவை. அவை ஒரு பொருளின்மீது பிரதிபலிக்கும் போது, அவற்றை அந்தப் பொருளின் குணங்கள் என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் அவை குணங்கள் அல்ல; புருஷனின் பரமாத்மாவின், எல்லையற்ற பொருளின், பிறப்பு இறப்பு அற்றதன், தன் மகிமையிலேயே நிலைபெற்றுள்ளதன் சாரமே ஆகும். அது கீழ்நிலையை அடைந்தது போல் தோன்றுகிறது. அந்த நிலையில் அதனிடம் சென்று, நீ பன்றி இல்லை என்று சொன்னால் அது உறுமிக்கொண்டு, கடிக்க வருகிறது.

துன்பமும் அழுகையும் அரற்றலுமே சூழ்ந்த இந்தக் கனவுலகில், இந்த மாயையில் நாம் எல்லோர் நிலைமையும் அதுதான், சில பொன் பந்துகள் உருட்டப்படுகின்றன. அவற்றிற்காக அடித்துக்கொண்டு உலகம் அவற்றின் பின்னால் ஓடுகிறது. நீங்கள் ஒருபோதும் நியதிகளால் கட்டுப் பட்டிருக்கவில்லை. இயற்கை உங்களுக்கு ஒருபோதும் ஒரு தளையாக இருக்கவில்லை. யோகி சொல்வது இது தான். பொறுமையாக இதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆன்மா பிரகிருதியோடு சேர்வதாலும், மனத்தையும் உலகத்தையும் தன்னுடன் ஒன்றாகக் கருதுவதாலும் துன்பத்தில் ஆழ்ந்திருப்பதாகப் புருஷன் நினைப்பதைக் காட்டுகிறான் யோகி. பின்னர் அனுபவத்தின் மூலமே இந்தத் தளையிலிருந்து விடுபட முடியும் என்பதையும் விவரிக்கிறான். இந்த அனுபவத்தை எல்லாம் பெற்று, அவற்றை விரைவில் அனுபவித்து முடித்துவிட வேண்டும். நாமே இந்த வலையில் மாட்டிக் கொண்டோம். நாம்தான் வெளியேற வேண்டும். இந்தப் பொறியில் நாமே சிக்கிக் கொண்டோம். இதிலிருந்து விடுதலை பெறவும் நாமே வழிவகுக்க வேண்டும். ஆதலால் கணவன், மனைவி, நண்பர் என்றுள்ள சிறுசிறு அன்பின் அனுபவங்களை எல்லாம் பெற்றுவிடுங்கள். இந்த அனுபவங்களின்போது நீங்கள் உண்மையில் யார் என்பதை மறவாதிருந்தால் விரைவில் இந்த வலையிலிருந்து விடுபடுவீர்கள். இவ்வுலக வாழ்க்கை கணநேரத்திற்கே, இதன் வழியாகவே நாம் போக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்ப துன்ப அனுபவமே நமக்கு குரு. ஆனாலும் அது அனுபவம் மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். படிப்படியாகப் பொருட்கள் அனைத்துமே சிறியதாகி. புருஷன் பெரியதாகி, இந்தப் பிரபஞ்சமே கடலில் ஒரு துளிபோல் குறுகி, பின்பு சூன்யத்தில் கரைந்து மறைகின்ற நிலைக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. இந்த எல்லா அனுபவங்கள் வழியாகவும் செல்ல வேண்டும். ஆனால் ஒருபோதும் குறிக்கோளை மறக்காமல் இருக்க வேண்டும்.

19. விசேஷாவிசேஷ லிங்கமாத்ரா லிங்கானி குண பர்வாணி

வரையறுக்கப்பட்டவை வரையறுக்கப்படாதவை, அடையாளம் மட்டும் உடையவை அற்றவை என்பவை குணங்களின் நிலைகள் ஆகின்றன.

யோக நெறி முற்றிலும் சாங்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை ஏற்கனவே கூறியுள்ளேன். சாங்கியர்களின் பிரபஞ்சத் தத்துவத்தை இங்கு மீண்டும் கூறுகிறேன். பிரபஞ்சத்திற்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் பிரகிருதியே என்று சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இயற்கையில் சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூவகை அடிப்படைப் பொருட்கள் உள்ளன. இருளான, அறியாமை மிக்க, தூலமான அனைத்தும் தாமஸப் பொருட்கள், ரஜஸ் என்பது செயலோடு கூடியது. சத்வப் பொருள் அமைதியும் ஒளியும் பெற்றது. படைப்புக்குமுன் உள்ள பிரகிருதியின் நிலை அவ்யக்தம், அதாவது தோன்றா நிலை, விளக்கப்படாத வரையறுக்கப்படாத நிலை எனகிறார்கள் சாங்கியர்கள். அதில் நாமரூப வேறுபாடு கிடையாது. அந்தநிலையில் மூவகைப் பொருட்களும் சமச்சீர் நிலையில் உள்ளன. பின்னர் இந்தச் சமநிலை கலைகிறது. இந்தக் குணங்கள் வெவ்வேறு வகையில் ஒன்றுசேரத் தொடங்குகின்றன. அதன் விளைவாகப் பிரபஞ்சம் உண்டாகிறது. ஒவ்வொரு மனிதரிடமும் இந்த மூன்று பொருட்களும் உள்ளன. சத்வம் ஓங்கியிருக்கும்போது அறிவு உண்டாகிறது. ரஜஸ் ஓங்கியிருக்கும்போது மனிதன் செயலில் ஈடுபடுகிறான், தமஸ் ஓங்கியிருக்கும்போது அறியாமை இருளும் சோம்பலும் செயலற்ற நிலையும் உண்டாகின்றன.

சாங்கியக் கொள்கைப்படி இந்த மூன்று அடிப்படைப் பொருட்களால் அமைந்ததான பிரகிருதியின் மிகவுயர்ந்த வெளிப்பாடே மஹத் அல்லது புத்தி. அது பிரபஞ்ச புத்தி, ஒவ்வொரு மனிதனின் புத்தியும் அதில் ஒரு பகுதியாகும். சாங்கிய மன இயலின்படி, மனத்திற்கும் புத்திக்கும் நுண்ணிய வேறுபாடு உள்ளது. எண்ணங்களைச் சேர்த்து புத்தியின் முன் வைப்பதுமட்டுமே மனத்தின் வேலை, மஹத்தின் பகுதியாகிய புத்தியே அதை நிச்சயிக்கிறது. மஹத்திலிருந்து அகங்காரமும், அகங்காரத்திலிருந்து சூட்சுமப் பொருட்களும் வருகின்றன. சூட்சுமப் பொருட்கள் இணைந்து, தூலப் பொருளான பிரபஞ்சம் வெளியே தோன்றுகிறது. புத்தியிலிருந்து தொடங்கி கல் வரை உள்ள எல்லாமே ஒரே பொருளிலிருந்து தோன்றியவை; வேறுபாடுகள் எல்லாம் சூட்சும மற்றும் தூல நிலைகளில் மட்டுமே என்று சாங்கியத் தத்துவம் கூறுகிறது. சூட்சுமப் பொருள் காரணமாகவும், தூலப் பொருள் காரியமாகவும் இருக்கும். சாங்கியத் தத்துவப்படி, பிரகிருதிக்கு அப்பால் புருஷன் இருக்கிறான். அவன் ஜடப்பொருளால் ஆனவன் அல்ல. புத்தி, மனம், தன் மாத்திரைகள் அல்லது தூல ஜடப் பொருட்கள் எனவும் புருஷனுடன் ஒப்பிட முடியாது. அவன் இதுபோன்ற எதுவும் அல்ல. அவன் முற்றிலும் தனியானவன், இயல்பிலேயே வேறுபட்டவன். அவன் சேர்க்கையால் ஆனவன் அல்ல, எனவே அழிவற்றவனாகத்தான் இருக்க வேண்டும். சேர்க்கையால் வராதது அழிய முடியாது புருஷர்கள் அல்லது ஜீவான்மாக்களின் எண்ணிக்கை எல்லையற்றது.

இனி, குணங்களின் நிலைகள் வரையறுக்கப்பட்டவை, வரையறுக்கப்படாதவை, அடையாளம் மட்டும் உடையவை. அடையாளம் அற்றவை என்று சூத்திரம் கூறுவதைப் புரிந்துகொள்வோம். புலன்களால் அறியக் கூடிய தூல பூதங்கள் வரையறுக்கப்பட்டவை சாதாரண மக்களால் புலன்களால் அறியப்படாத சூட்சும பூதங்களான தன்மாத்திரைகள் வரையறுக்கப்படாதவை ஆனால் யோகப் பயிற்சியில் முன்னேறும்போது, அனுபவ சக்தி மிகவும் சூட்சுமமாவதால் தன்மாத்திரைகளையும் நீங்கள் உண்மையிலேயே காண முடியும் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார். உதாரணமாக, ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஒருவகையான ஒளி வீசுவதாகக் கூறப்படுகிறது. உயிரினம் ஒவ்வொன்றும் இந்த ஒளியைச் சிந்துகின்றன. யோகியால் இதைக் காண முடியும் என்கிறார் பதஞ்சலி. நாம் அதைக் காண்பதில்லை. பூக்கள் தொடர்ந்து சூட்சுமத் துகள்களை வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன். அவற்றின் காரணமாகத்தான் நாம் அவற்றின் வாசனையை நுகர முடிகிறது. அதுபோன்று நாம் அனைவரும் தன் மாத்திரைகளை வெளியில் அனுப்புகிறோம். நமது அன்றாட வாழ்வில் நல்ல மற்றும் தீய எண்ணங்களை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் எங்கு சென்றாலும் அங்கு இந்தத் தன்மாத்திரைகள் நிறைந்துள்ளன. அதனால்தான், காரணம் தெரியாவிட்டாலும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மனித மனத்தில் தோன்றுகிறது. மனிதன் கடவுளை வழிபட ஏன் கோயிலைக் கட்ட வேண்டும்? எங்கு வேண்டுமானாலும் அவரை ஏன் வழிபடக் கூடாது? காரணம் தெரியாவிட்டாலும், பலர் வழிபடுகின்ற இடத்தில் நல்ல தன்மாத்திரைகள் நிறைந்துள்ளதை மனிதன் அறிகிறான். தினமும் கோயிலுக்குச் செல்லசெல்ல மனிதன் மேலும் புனிதனாகிறான். அந்த இடத்தின் புனிதமும் அதிகரிக்கிறது. அதிக சத்வ குணம் இல்லாதவனும் கோயிலுக்குச் சென்றால், அந்த இடமே அவன்மீது ஆதிக்கம் செலுத்தி, அவனிடம் சத்வ குணத்தை எழுப்பும், கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களின் முக்கியத்துவத்திற்கு இதுவே காரணம். ஆனால் அங்குள்ள புனிதம் அங்குச் செல்வபவர்களின் புனிதத்தைப் பொறுத்தே அமையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உட்பொருளை மறந்து, மனிதன் குதிரைக்கு முன் வண்டியை நிறுத்துகிறான். இதுதான் பிரச்சினை மனிதனே இந்த இடங்களைப் புனிதமாக்கினான், பின்னர் அந்தக் காரியமே காரணமாகிறது. அதாவது அந்த இடமே மனிதனைப் புனிதப்படுத்துவதாகி விடுகிறது. தீயவர்கள் மட்டுமே அங்குச் செல்வதனால் அந்த இடமும் மற்ற இடங்களைப்போல் கெட்டுவிடும் கோயிலை உருவாக்குவது மனிதனே தவிர மாளிகைகள் அல்ல. ஆனால் இதைத் தான் நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். அதனால்தான் அதிக சத்வத்தை உடைய ரிஷகளும் முனிவர்களும் அதை வெளியே அனுப்பி, இரவும் பகலும் தாங்கள் வாழும் சூழ்நிலையில் பேராதிக்கம் செலுத்துகின்றனர். தனது தூய்மை பிறருக்குப் புலப்படும் வண்ணம் ஒருவன் தூயவனாக முடியும்; அவனை அணுகுகின்ற அனைவரும் தூய்மை பெறுகிறார்கள்.

இனி, அடையாளம் மட்டும் உடையது என்பது புத்தி. இயற்கையின் முதல் வெளிப்பாடு இதுவே. இதிலிருந்தே மற்றவை எல்லாம் வெளிப்பட்டன. கடைசியாக வருவது அடையாளம் அற்றது இந்த விஷயத்தில் நவீன விஞ்ஞானத்திற்கும் மதங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதுபோல் காணப்படுகிறது. பிரபஞ்சம் புத்தியிலிருந்து வெளிப்பட்டதாகவே எல்லா மதங்களும் கூறுகின்றன. இறைவன் நம்மைப்போல் ஒருவரா இல்லையா என்பன போன்ற கருத்துக்களை எல்லாம் விலக்கிவிட்டு, மனஇயல் நோக்கில் மட்டும் கடவுள் கொள்கையைப் பார்த்தோமானால் முதலில் படைக்கப்பட்டது புத்தி. நாம் தூலப் பொருட்கள் என்று கூறுகின்ற அனைத்தும் அதிலிருந்தே வந்தன. ஆனால் நவீனச் தத்துவவாதிகள், புத்தி கடைசியில் வந்தது என்கின்றனர். ஜடப் பொருட்களே படிப்படியாக உயிருள்ள பிராணிகளாகப் பரிணமித்தன, பிராணிகளிலிருந்து மனிதன் தோன்றினான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புத்தியிலிருந்து எல்லாம் வந்தது என்று கூறுவதற்குப் பதிலாக, எல்லாவற்றிற்கும் இறுதியில் புத்தி தோன்றியது என்று கூறுகிறார்கள். மதம் மற்றும் விஞ்ஞானம் இரண்டு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவைபோல் தோன்றினாலும் இரண்டும் உண்மையானவை. உதாரணமாக அ-ஆ-அ-ஆ என்ற முடிவற்ற தொடரை எடுத்துக் கொள்வோம். இதில் அ முந்தியதா, ஆ முந்தியதா? தொடரை அ-ஆ என்று ஆரம்பித்தால் அ முந்தியது. ஆ-அ என்று ஆரம்பித்தால் ஆ முந்தியது. அந்த விடை நாம் நோக்கும் முறையைப் பொறுத்தது. புத்தி வேறு பட்டு தூலப் பொருளாகிறது. பின்பு தூலப் பொருள் புத்தியில் கரைகின்றது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சாங்கியர்களும் பிற மதவாதிகளும் புத்தியில் ஆரம்பிக்கின்றனர். எனவே தொடரில் முதலில் புத்தியும் பின்னர் ஜடப்பொருளும் வருகிறது. விஞ்ஞானிகள் ஜடப்பொருளில் ஆரம்பிக்கின்றனர். இங்கு முதலில் ஜடப் பொருளும் பின்னர் புத்தியும் வருகிறது. இரு சாராரும் குறிப்பிடுவது ஒரு தொடரையே. இந்தியத் தத்துவமோ ஜடப் பொருள், புத்தி ஆகிய இரண்டுக்கும் அப்பால் சென்று புருஷன் அல்லது ஆன்மாவைக் காட்டுகிறது. ஆன்மா புத்திக்கு அப்பாற்பட்டது. ஆன்மாவிடமிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளியே புத்தி.

20. த்ரஷ்டா த்ருசிமாத்ர சுத்தோபி ப்ரத்யயானுபச்ய

காண்பவன் அறிவு வடிவினன். அவன் தூயவனாக இருந்தாலும், புத்தியின் தன்மைக்கு ஏற்பவே அதன் வழியாகக் காண்கிறான்.

இதுவும் சாங்கியத் தத்துவமே. இதே கொள்கையின் படி தாழ்ந்த பொருட்கள் முதல் புத்திவரை அனைத்தும் பிரகிருதியே, பிரகிருதிக்கு அப்பால், குணங்கள் அற்ற புருஷர்கள் உள்ளனர் என்று கண்டோம். ஆனால் ஆன்மா துன்பமாகவோ இன்பமாகவோ இருப்பதுபோல் தோன்றுகிறதே. அது எப்படி? பிரதிபலிப்பதால், தூய படிகத்திற்கு அருகில் சிவப்பு மலர் ஒன்றை வைத்தால் படிகம் சிவப்பாகத் தோன்றுகிறது அதுபோல் ஆன்மாவின் இன்ப துன்பங்களும் பிரதிபலிப்பே, ஆன்மாவிற்கு இவை எதுவும் இல்லை. அது பிரகிருதியிலிருந்து வேறுபட்டது. பிரகிருதி என்பது வேறு, ஆன்மா என்பது வேறு, இவை என்றென்றைக்குமாக வேறுபட்டவை, புத்தி ஒரு சேர்க்கைப் பொருள், அது வளரவும் தேயவும் செய்கிறது. உடம்பைப் போல் வளர்ந்து சுருங்கி மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது ஏறக்குறைய உடம்பைப் போன்றதே என்று சாங்கியர்கள் கூறுகின்றனர். உடலுக்கு விரல்நகம் எப்படியோ, அப்படியே புத்திக்கு உடல், நகம் உடலின் ஒரு பகுதிதான், ஆனால் அதை நூறு தடவை வெட்டி எறிந்தாலும் உடல் நிலைத்திருக்கிறது. அதுபோல் உடலை எத்தனை முறை களைந்தாலும் புத்தி காலங்காலமாக நிலை பெற்றிருக்கும். ஆனாலும் புத்தி நித்தியப் பொருளாகாது. ஏனெனில் அது வளர்வதும் தேய்வதுமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாறுகின்ற எதுவும் நித்தியமாக முடியாது. புத்தி என்பது நிச்சயமாக உருவாக்கப்பட்ட ஒன்றே. அதற்கு அப்பால் வேறொன்று இருக்க வேண்டும் என்பதை இந்த உண்மையே காட்டுகிறது. அது சுதந்திரமானதாக இருக்க முடியாது. ஜடப் பொருளுடன் தொடர்புடைய எதுவும் இயற்கையில்தான் இருந்தாக வேண்டும். எனவே அது என்றென்றைக்குமாகக் கட்டுப்பட்டதே. யார் சுதந்திரர்? அவர் கட்டாயமாக, காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். சுதந்திரம் அல்லது முக்தி பற்றிய எண்ணம் ஒரு மயக்கம் என்று நீங்கள் கூறினால் தளையைப் பற்றிய எண்ணமும் மயக்கமே என்பேன் நான். தளை, முக்தி பற்றிய நமது எண்ணமாகிய இரண்டு உண்மைகளுமே நம் அறிவினுள் வருகின்றன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. ஒரு சுவரை ஊடுருவி நாம் போக விரும்பினால், தலை சுவரில் மோதுகிறது. சுவரினால் தடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதேவேளையில் நமக்கு சுயேச்சை சக்தி ஒன்று இருப்பதை காண்கிறோம். அதை விரும்பிய இடத்தில் செலுத்தலாம் என்றும் எண்ணுகிறோம். இந்த முரணான எண்ணங்கள் ஒவ்வொரு படியிலும் நம்மிடம் வருகின்றன. நாம் சுதந்திரர்கள் என்று நாம் நம்ப வேண்டும், ஆனால் நாம் கட்டுண்டு இருப்பதை ஒவ்வொரு நிமிடமும் நாம் காண்கிறோம். இவற்றுள் ஒரு கருத்து மயக்கம் என்றால் மற்றதும் மயக்கமே; ஒன்று உண்மையென்றால் மற்றதும் உண்மை. ஏனெனில் இரண்டுமே அனுபவம் என்ற ஒரே ஆதாரத்தில் நிற்கின்றன. இரண்டு எண்ணங்களும் உண்மையே என்று யோகி கூறுகிறான். புத்தியைப் பொறுத்தவரையில் நாம் கட்டுப்பட்டவர்கள். ஆன்மாவைக் கருத்தில் கொண்டால் நாம் சுதந்திரர்கள். காரணகாரிய நியதிக்கு அப்பாற்பட்டதான ஆன்மா அல்லது புருஷன் என்பதுதான் மனிதனின் உண்மை இயல்பு. அதன் சுதந்திர இயல்பு ஜடப்பொருளின் பல்வேறு அடுக்குகளின் ஊடே ஊடுருவி, புத்தி, மனம் என்றெல்லாம் பல்வேறு உருவங்களை எடுக்கிறது. மற்றவற்றின் வழியாக ஒளிர்கிறது. புத்திக்குச் சுய ஒளி கிடையாது.

ஒவ்வொரு பொறிக்கும் மூளையில் ஒரு தனி மையம் உள்ளது. எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு மையம் என்று இல்லை. ஒவ்வொரு பொறியும் தனித்தன்மையானவை. அப்படியிருந்தால் எல்லா அனுபவங்களும் எவ்வாறு சமரசமடையும்? தங்கள் ஒருமையை அவை எங்கிருந்து பெறும்? மூளையில் என்று கூற வேண்டுமானால், கண் காது முதலிய பொறிகள் அனைத்திற்கும் அங்கு ஒரே மையம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மையங்கள் இருப்பது நமக்குத் தெரியும். மனிதன் ஒரே நேரத்தில் பார்க்கவும் கேட்கவும் முடியும். எனவே புத்திக்குப் பின்னால் ஓர் ஒருமை இருக்க வேண்டும். புத்தி மூளையுடன் தொடர்புள்ளது. புத்திக்குப் பின்னால் ஒன்றேயான புருஷன் உள்ளான். அவனில்தான் வெவ்வேறு உணர்ச்சிகளும் அனுபவங்களும் இணைந்து ஒன்றாகின்றன. வெவ்வேறு அனுபவங்களும் குவிந்து ஒருமை அடைவது ஆன்மாவாகிய மையத்தில்தான். ஆன்மா சுதந்திரமானது. அதனுடைய சுதந்திரமே ஒவ்வொரு கணமும் நாம் சுதந்திரர்கள் என்ற எண்ணத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் தவறாக, அந்தச் சுதந்திர எண்ணத்தைப் புத்தி அல்லது மனத்துடன் ஒவ்வொரு கணமும் இணைத்துக் கொண்டிருக்கிறோம் நாம். அந்தச் சுதந்திரம் புத்தியிலிருந்து வந்ததாகக் கருத முயற்சிக்கிறீர்கள். மறு கணமே புத்தி சுதந்திரமற்றது என்பதைக் காண்கிறீர்கள். உடம்பிலிருந்து வந்ததாகக் கருதத் தலைப்படுகிறீர்கள். நீங்கள் தவறிவிட்டீர்கள் என்பதை இயற்கை மறுகணமே உங்களுக்குக் காட்டிவிடுகிறது. இதனால்தான் முக்தி மற்றும் தளை பற்றிய எண்ணங்கள் ஒரே நேரத்தில் நம்மிடம் தோன்றுகின்றன. எது முக்தி நிலையில் உள்ளது, எது கட்டுப்பட்டுள்ளது என்று இரண்டையும் யோகி ஆராய்கிறான். அவனது அறியாமை அகல்கிறது. புருஷன் சுதந்திரமானவன், அறிவின் சாரம்; புத்தியின் வழியாகப் பிரகாசிக்கும்போது, அவனே அறிவாக ஒளிர்கிறான். அந்த நிலையில் அவன் கட்டுப்பட்டவன் என்பதை அறிகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top