அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும்.
ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.
என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு துன்புறுத்தியது; சோர்ந்து ஒரு வீட்டின் திண்ணை மீது உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்த ஒருவர், இவர் பீர்பால் அல்லவா ! ஏன் இப்படியாகி விட்டார் என எண்ணி, அவருக்கு ஆகாரம் கொடுத்து ஆறுதல் கூறி, அவ்வூர் ஜமீந்தாரிடம் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்.
ஜமீந்தார் படிப்பு வாசனையே அறியாதவர். ஆனாலும், பரம்பரையாக வந்த ஜமீந்தார் ! மிகவும் கஞ்சன்.
தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பீர்பாலை நியமிக்கலாம் எனக் கருதினார்.
‘என்னிடம் வேலையாட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், எம் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக உம்மை வைத்துக் கொள்கிறேன்’ என்றார் ஜமீந்தார்.
‘எவ்வளவு ஊதியம் கொடுப்பிர்கள்?’ என்று கேட்டார் பீர்பால்.
‘என் வீட்டில் சாப்பாடு போட்டு உமக்கு மாதம் பத்து ரூபாய் தருகிறேன். நீர் பெரிய கல்விமான் என்று கூறினார் என் நண்பர். ஆனாலும், இதற்கு அதிகமாக என்னால் தர இயலாது’ என கண்டிப்பாகச் சொன்னார் ஜமீந்தார்.
பீர்பாலுக்கு கோபம் அதிகரித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.’அவன் யார்?’ என்று கேட்டார் பீர்பால்.
‘என்னுடைய குதிரை வண்டியை ஓட்டுபவன்’ என்றார்.
‘அவனுக்கு என்ன ஊதியம்?’ என்று கேட்டார் பீர்பால்.
‘மாதம் பதினைந்து ரூபாய் கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறேன்’ என்றார் ஜமீந்தார்.
பீர்பால் கோபமுற்றார். ஜமீந்தாரை நோக்கி, ‘உங்கள் மகன் பத்து ஆண்டுகள் படித்து என்ன செய்யப் போகிறான்? என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும்? ஆகையால், அவனுக்குக் குதிரை வண்டி ஓட்டுவதற்குக் கற்றக் கொடுத்தால், மாதம் பதினைந்து ரூபாய் ஊதியம் கிடைக்குமே, அதை முதலில் செய்யுங்கள்’ என்று கூறி எழுந்தார பீர்பால்.
தன்னுடைய கஞ்சத்தனத்துக்குச் சரியான சூடு கொடுத்தார் பீர்பால் என வெட்கப்பட்டார் ஜமீந்தார். ஆனால், என்னுடைய சுபாவத்தை நான் மாற்றிக் கொள்ள முடியுமா என எண்ணிக் கொண்டு மெளனமாக இருந்தார்.