பிராணன்: பலர் நினைப்பதுபோல், பிராணாயாமம் என்பது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் பிராணாயாமத்திற்கும் தொடர்பு இருந்தாலும் அது மிகக் குறைவே. உண்மையான பிராணாயாமத்தை நாம் சென்றடைவதற்கான பல பயிற்சிகளுள் சுவாசமும் ஒன்று, அவ்வளவுதான். பிராணாயாமம் என்றால் பிராணனைக் கட்டுப்படுத்துதல். இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி, பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருளாகவும், திடப் பொருளாகவும், ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே. அதை உணர முடியாது. சாதாரணமாக எந்த விதத்திலும் நாம் உணர முடியாத அளவிற்கு அது நுண்ணியதாக உள்ளது. அது தூலமாகிய உருவம் பெறும்போதுதான் அதை நாம் காண முடியும். படைப்பின் துவக்கத்தில் இந்த ஆகாசம் மட்டுமே இருந்தது. ஒரு கல்பம் முடியும் போது திடப்பொருட்கள், திரவங்கள், வாயுக்கள் எல்லாமே கரைந்து மீண்டும் ஆகாசமாகிவிடுகின்றன. மறுபடியும் ஆகாசத்திலிருந்து அடுத்த படைப்பு தோன்றுகிறது.
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்தான். பிரபஞ்சத்திற்கு எல்லையற்ற எங்கும் நிறைந்த மூலப்பொருளாக ஆகாசம் இருப்பது போல், பிராண சக்தி, எல்லையற்ற எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக உள்ளது. கல்பத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லா பொருட்களும் ஆகாசமாகின்றன; பிரபஞ்சத்திலுள்ள எல்லா சக்திகளும் பிராணனில் மீண்டும் ஒடுங்குகின்றன. அடுத்த கல்பத்தில் அந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவீயிர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஒட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே. பிரபஞ்சத்திலுள்ள மன சக்திகள், பௌதீக சக்திகள், அனைத்தின் ஒட்டுமொத்தமும் அதன் மூலநிலைக்கு மீண்டும் செல்லும்போது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. இருப்பு, இல்லாமை, இரண்டுமற்று இருளை இருள் மூடியிருந்தபோது என்ன இருந்தது? அந்த ஆகாசம் அசைவின்றி இருந்தது. அப்பொழுது பிராணனின் பௌதீக இயக்கம் நின்றிருந்தது; ஆனால் பிராணன் இருக்கவே செய்தது. பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திகள் எல்லாம் கல்பத்தின் இறுதியில் அமைதியடைந்து ஒடுங்கிவிடும். அடுத்த கல்பம் தொடங்கும்போது அவை எழுந்து ஆகாசத்தில் மோதுகின்றன; ஆகாசம் இந்தப் பல்வேறு வடிவங்களாகப் பரிணமிக்கிறது. ஆகாசம் மாறும்போது பிராணனும் பல்வேறு சக்திகளாக வெளிப்படுகிறது. இந்தப் பிராணனை அறிவதும் அதைக் கட்டுப்படுத்துவதும்தான் பிராணாயாமம் என்பதன் உண்மையான பொருளாகும்.
எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்துவிடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்திவிட்டால் உலகில் எந்தச் சக்திதான் அவனுடையது ஆகாது? அவன் சூரியனையும் நட்சத்திரக் கூட்டங்களையும் அவர்களின் இடத்திலிருந்து பெயர்த்துவிட முடியும். அணுவிலிருந்து மிகப் பெரிய சூரியர்கள் வரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவனால் அடக்கியாள முடியும். ஏனெனில் அவன் பிராணனைக் கட்டுப்படுத்துகிறான். இதுவே பிராணாயாமத்தின் முடிவும் குறிக்கோளும் ஆகும். யோகி நிறைநிலை எய்தும்போது அவனது ஆணைக்கு உட்படாத எதுவும் இயற்கையில் இருக்காது. தேவர்களாகட்டும், ஆவிகள் ஆகட்டும், அவன் அழைத்தால் வந்துவிடுவர். இயற்கையின் சக்திகள் அனைத்தும் அடிமைகள் போல் அவன் ஆணைக்குக் கீழ்ப்படியும். இத்தகைய ஆற்றல்களை யோகியிடம் காண்கின்ற சாதாரண மனிதன் அவற்றை அற்புதங்கள் என்பான்.
இந்து மனத்திற்கு விசேஷப் பண்பு ஒன்று உள்ளது முடிந்த அளவு கடைசிப் பொதுமையை முதலில் காண்பது, விளக்கங்களைப் பின்னால் விவரிப்பது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ, அது என்ன? என்ற கேள்வி வேதங்களில் எழுப்பப்படுகிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ அதை நிர்ணயிப்பதற்காக மட்டுமே எல்லா நூல்களும் எல்லா தத்துவங்களும் ஏற்பட்டன. இந்தப் பிரபஞ்சத்தைச் சிறிது சிறிதாக ஒருவன் அறிய விரும்பினால், அவன் ஒவ்வொரு மணல் துகள்களையும் அறிய வேண்டும். எல்லையற்ற காலம் கிடைத்தாலும் அவனால் எல்லாவற்றையும் அறிய இயலாது. அப்படியானால் அறிவு எவ்வாறு உண்டாகும்? விசேஷ அறிவின் மூலம் எப்படிஎல்லா அறிவையும் பெறமுடியும்? இதற்கு யோகி, ஒவ்வொரு விசேஷப் பண்பின் பின்னாலும் ஒரு பொதுமை உள்ளது என்கிறான். எல்லா விசேஷக் கருத்துக்களின் பின்னாலும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதைப் பற்றிக்கொள்ளுங்கள், அனைத்தையும் கிரகித்தவர் ஆவீர்கள். வேதங்களில் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றேயான, தனியான இருப்பு என்று பொதுமைப்பட்டுள்ளது. அந்த இருப்பை அறிந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் அறிந்தவன் ஆவான். அதுபோல் பிரபஞ்சத்திலுள்ள ஆற்றல்கள் யாவும் பிராணன் என்று பொதுமைப்பட்டுள்ளது. பிராணனைஅறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள மனம் மற்றும் பௌதீக சக்திகள் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். பிராணனை வசப்படுத்துபவன் தனது மனத்தையும் மற்ற மனங்களையும் அடக்கி ஆளும் திறன் பெறுகிறான். அதேபோன்று பிராணனை வசப்படுத்துபவன் தனது உடலையும் வேறு எல்லா உடல்களையும் அடக்கி ஆள்கிறான். ஏனெனில் பிராணன் என்பது சக்திகள் அனைத்தின் அனைத்தின் பொது வெளிப்பாடாகும்.
பிராணனை எப்படி வசப்படுத்துவது என்பதே பிராணாயாமத்தின் ஒரே நோக்கம். எல்லா பயிற்சிகளும் சாதனைளும் அதற்காகவே. ஒவ்வொருவனும் தான் இருக்கும் இடத்திலிருந்தே தொடங்க வேண்டும்; தனக்கு மிக அருகில் உள்ளவற்றை வசப்படுத்துவது எப்படி என்பதை அறிய வேண்டும். புறவுலகில் உள்ளவற்றுள் எதை விடவும் நமக்கு மிக அருகில் உள்ளது நமது உடல். மனமும் பிற அனைத்தையும்விட வெகு அருகில் உள்ளது. இந்த மனத்தையும் உடலையும் செயல்படுத்தும் பிராணன், உலகில் உள்ள எல்லா பிராணன்களையும்விட நமக்கு மிக அருகில் உள்ளது. பிராணனாகிய எல்லையற்ற கடலின் அலைகளில் மிக அருகில் இருப்பது நமது மனம் மற்றும் பௌதீக சக்தி வடிவிலுள்ள சிறு அலையே. இந்தச் சிறிய அலையை அடக்கி ஆள்வதில் வெற்றி பெற்றால்தான், பிராணன் முழுவதையும் அடக்கி ஆள முயலலாம். இதனைச் செய்து முடித்த யோகி நிறைநிலையை அடைகிறான்; இதன்பின் அவன் வேறு எந்தச் சக்தியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவன் ஏறக்குறைய எல்லாம் வல்லவனாகவும் ஏறக்குறைய எல்லாம் அறிந்தவனாகவும் ஆகிறான்.
பிராணனன வசப்படுத்த முயன்ற மதப் பிரிவினரை நாம் எல்லா நாடுகளிலும் காணலாம். இந்த நாட்டிலும் கூட மன வைத்தியர்கள், நம்பிக்கை வைத்தியர்கள், ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள், கிருஸ்தவ விஞ்ஞானிகள், மனவசியக்காரர்கள் முதலியவர்கள் உள்ளனர். இந்தப் பிரிவுகளை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ தெரியாலோ இந்தப் பிராணனை வசப்படுத்துவதுதான் அவர்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பதைக் காணலாம். அவர்களுடைய கொள்கைகளின் சாரம் அதுவே. அந்த ஒரே சக்தியையே அவர்களும் கையாள்கின்றனர்.அதை அறியாமல் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். எதேச்சையாக அவர்களிடம் ஒருசக்தி கிடைத்தது, அதன் இயல்பை அறியாமலே, அது என்னவென்று தெரியாமலே பயன்படுத்தவும் செய்கிறார்கள். பிராணனிலிருந்து இதே சக்தியைத் தான் யோகியும் பயன்படுத்துகிறான். பிராணனின் மிக நுண்ணிய, மிகவுயர்ந்த செயல்பாடு எண்ணம். ஆனால் எண்ணமே எல்லாம் ஆகிவிடாது. செயல்பாடுகளில் மிகவும் கீழ்த் தளத்திலுள்ளதும் உணர்வுமனத்தை எட்டாததுமான எண்ணம் உள்ளது. இது இயல்புணர்ச்சி என்று அழைக்கப்படுக்கிறது. ஒரு கொசு கடித்தால் நம்மை அறியாமலே கை தானாகவே சென்று அதை அடிக்கிறது. இது எண்ணத்தின் ஒருவகையான வெளிப்பாடு. எதிர்ச்செயல்களாக உடலில் நிகழ்பவை எல்லாமே எண்ணத்தின் இந்தத் தளத்தால் சேர்ந்தவைதாம். இனி, உணர்வுத் தளத்தைச் சேர்ந்த எண்ணங்கள் உண்டு, நான் ஆராய்கிறேன் நான் தீர்மானிக்கிறேன், நான் நினைக்கிறேன், சில விஷயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறேன்; ஆனால் அதுவே எல்லாம் அல்ல. சிந்தனை சக்தி எல்லைக்கு உட்பட்டது. ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மட்டுமே அது செல்ல முடியும். அதற்குமேல் போக முடிவதில்லை. அது இயங்க முடிந்த வட்டம் மிகமிகச் சிறியதுதான். இருந்தாலும் அதனுள் எத்தனையோ எண்ணங்கள் முட்டி மோதுகின்றன. ஆனால் சிலவேளைகளில் வால் நட்சத்திரங்கள் வருவது போன்று சில விஷயங்கள் இந்த வட்டத்திற்குள் வருகின்றன. அவை அந்த வட்டத்தின் எல்லைக்கு வெளியிலிருந்தே வருகின்றன என்பது நிச்சயம். நமது பகுத்தறிவுக்கோ அந்த எல்லையைக் கடந்து அப்பால் போகவும் முடியாது. இவ்வாறு வந்து நுழைகின்ற விஷயங்களுக்கான காரணங்கள் அந்த எல்லைக்கு வெளியிலேயே உள்ளன.
உணர்வு நிலைக்கு மேலான நிலைக்குச் செல்லவும் மனத்தால் முடியும், அது சமாதி நிலை முழு ஒருமைப்பாடாகிய, உணர்வு கடந்த இந்தச் சமாதி நிலையை மனம் அடையும்போது, அது பகுத்தறிவு எல்லையைத் தாண்டிச் செல்கிறது; இயல்புணர்ச்சியாலோ பகுத்தறிவாலோ அறிய முடியாத பல விஷயங்களை அது நேருக்குநேராக அறிகிறது. உடலிலுள்ள பல நுண்ணிய, சக்திகளின் செயல்பாடுகளையும் அதாவது பிராணனின் பல்வேறு வெளிப்பாடுகளையும் பயிற்சியின் மூலம் பண்படுத்தினால், அது மனத்தை உந்தி, மனம் உயர்நிலைகளுக்குச் செல்லவும், உணர்வு கடந்த நிலையை அடையவும் உதவி செய்யவும். அங்கிருந்துகொண்டு மனம் செயல்படும்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஸத் அல்லது இருப்பின் ஒவ்வொரு தளத்திலும் இடையீடின்றித் தொடர்ச்சியான ஒரு பொருள் இருக்கிறது. பௌதீக நிலையில் இந்தப் பிரபஞ்சம் ஒன்றுதான்; உங்களுக்கும் சூரியனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடு காண்பது வெறும் பிரமை, மயக்கம் என்பான் விஞ்ஞானி, இந்த மேஜைக்கும் எனக்கும் உண்மையில் எந்த வேறு பாடும் இல்லை. ஜடப் பொருள் தொகுதியில் ஒரு புள்ளிமேஜை , மற்றொரு புள்ளி நான். எல்லையற்ற ஜடப்பொருள் கடலில் ஒவ்வோர் உருவமும் ஒவ்வொரு சுழி போல் உள்ளன. இனி, இவற்றில் எந்தச் சுழியும் நிலையானது இல்லை. ஓடி வருகின்ற ஆற்றில் பல்லாயிரக்கணக்கான சுழிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உள்ள நீர் ஒவ்வொரு கணமும் வேறாக உள்ளது. சுழியில் கணநேரம் நீர் சுழன்றுவிட்டு வெளியே செல்கிறது. உடனே புதிய நீர் அங்கு வருகிறது. அதுபோல் பிரபஞ்சம் முழுவதுமே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் ஒரே ஜடப்பொருள் தொகுதிதான்; இருக்கின்ற எல்லா உருவங்களும் அதில் நீர்ச்சுழிகள் போன்றவை. மனித உடம்பு என்ற ஒருசுழியை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜடப்பொருள் தொகுதி இதில் சிறிதுகாலம் இருக்கிறது. பின்னர் மாறுதல் அடைந்து வெளியே சென்று, மற்றொரு சழியில் புகுகிறது; அத பிராணி உடலாக இருக்கலாம்.
சில வருடங்களுக்குப் பின் அது உலோகக் கட்டியான சுழிக்குள் புகக்கூடும். மாறுதல் தொடர்ந்து நடக்கிறது. ஓர் உடல்கூட மாறுதலற்று அப்படியே இருப்பதில்லை. எனது உடல், உனது உடல் என்ற வேறுபாடெல்லாம் பேச்சளவில் தானே தவிர உண்மையில் இல்லை. ஒரு பெரிய ஜடப்பொருள் தொகுதியில் ஒரு புள்ளி சூரியன், மற்றொன்று சந்திரன், ஒரு புள்ளி பூமி, மற்றொன்று மனிதன், ஒன்று தாவரம், மற்றொன்று உலோகம். ஒன்றுகூட அப்படியே இருப்பதில்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஜடப் பொருள் சேர்வதும் பிரிவதும் இடையீடின்றி நடந்து கொண்டிருக்கிறது. மனமும் அப்படித்தான். ஜடப்பொருளாக வெளிப்பட்டிருப்பது ஆகாசமே. பிராணனின் செயல்பாடு மிகமிக நுண்ணியதாக நுண் அதிர்வு நிலையில் இருக்கும். போது, இந்த ஆகாசமே மணமாகிறது. அங்கேயும் அது, பிரிக்க முடியாத ஒரு தொகுதியாகவே இருக்கும். அந்த நுண் அதிர்வுகளினால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு உணர முடியும். நாம் புலனுலக நிலையில் இருக்கும்போதே சிலவேளைகளில் சில மருந்துகள் நம்மை அந்த நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தியுடையவை. ஸர் ஹம்பரி டேவியின் பரிசோதனை உங்களுக்கு நினைவிருக்கலாம். சொற்பொழிவின்போது அவர் சிரிப்பு வாயுவினால் தாக்குண்டு அசைவற்று உறைந்தவர் போலாகிவிட்டார். அதிலிருந்து விழித்தபோது, பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்களால் ஆனவை என்றார். குறிப்பிட்ட அந்த நேரத்தில் தூல அதிர்வுகள் அடங்கி, அவர் எண்ணங்கள் என்று குறிப்பிட்ட நுண் அதிர்வுகள் மட்டுமே அவரது அனுபவத்திற்கு எட்டியதுபோல் ஆகிவிட்டது.
அவர் தம்மைச் சுற்றி நுண் அதிர்வுகளை மட்டுமே கண்டார். எல்லாமே எண்ணங்களாகி விட்டன. பிரபஞ்சமே எண்ணக் கடலாகக் காட்சி தந்தது. அவரும் மற்றவர்களும் எல்லாருமே சிறுசிறு எண்ணச் சுழிகளாக அவருக்குத் தெரிந்தன. இவ்வாறு எண்ணப் பிரபஞ்சத்தில்கூட நாம் ஒருமையைக் காண்கிறோம். இதையும் கடந்தால் ஆன்மாவை அடைகிறோம். அந்த ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். தூல மற்றும் சூட்சும நிலையிலுள்ள ஜடப்பொருளின் அதிர்வுகளுக்கு அப்பால், இயக்கங்களுக்கு அப்பால் இருப்பது ஒன்றே. இயக்கத்தின் வெளிப்பட்ட நிலையிலும் ஒருமையே உள்ளது. இந்த உண்மைகளை இனிமேலும் நாம் மறுக்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளின் கூட்டுத் தொகை எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறதென்று தற்கால இயற்பியலும் நிரூபித்துள்ளது. இந்த மொத்த சக்தியும் இரண்டு நிலைகளில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அமைதியான, செயல்படாத ஒடுக்க நிலையில் இருந்து, பின்னர், பலவித சக்திகளாக வெளிப்படுகிறது. மறுபடியும் செயலற்ற நிலைக்குச் செல்கிறது. மீண்டும் வெளிப்படுகிறது. இப்படி வெளிப்படுவதும் ஒடுங்குவதும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கிறது. முன்பு கூறியதுபோல், இந்தப் பிராணனை அடக்கியாள்வதே பிராணாயாமம்.