இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.சமுதாயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும், எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தொய்மாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம் பலாத் காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக்கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால் அப்படிபட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கபேவதில்லை……..
உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து பேய்விடும்?
எனது அருமைச் சகோதரா? ஒரு பழைய விளக்கை எடத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.
நமது தாய்நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானதாகும். நாட்டுக்கு நாடு எடுத்து ஒப்பிட்டுபார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருப்பதைப் போன்று பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்…..
கிரீஸ் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரிகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக்கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரிகம் இருந்து வந்திருக்கிறது. ஏன் , அதற்கும் முன்பேகூட வரலாற்றில் குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத , சரித்திரமே புக முடியாத, இருணட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன.
மற்ற ஆரிய நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு, இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அவளுடைய கலை கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும் . இந்த ஒன்றுதான் உலக நாடுகளின் முன்னணியில் தனக்கு உரிய உயர்ந்த இடத்தை அவள் திரும்பப் பெறுவதற்குத் தேவையாகும்….துறவும் தொண்டுமே இந்தியாவின் இலட்சியங்கள். இந்தப் பாதையிலே மேலும் அவனை ஈடுபடுத்துங்கள். மற்றவை தாமாக வந்து சேரும்.
அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே ! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக்கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால், இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுøடைய தவறுகளே காரணம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைகுறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்ய போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு, நீங்கள்ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா? நமது இதயத்தை மனமுவந்து அந்த பணிக்கு நாம் தருவோமாக அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக.