அபிலீன் பரடொக்ஸ் ? (Abilene Paradox !!): ஜோர்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jerry B. Harvey என்கிற மேலாண்மைத் துறை பேராசியர் தனது கட்டுரையில் அபிலீன் பரடொக்ஸ் பற்றி…
“வெயில் நிறைந்த பிற்பகல் வேளையில் டெக்சாஸ் மாகாணத்தின் Coleman பகுதியில் ஒரு குடும்பத்தினர் டோமினோ விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது மாமனார் இரவு உணவுக்கு (53 மைல்கள் தொலைவில் உள்ள) அபிலீனுக்குச்(Abilene) செல்லலாம் என்று கருதுகிறார். அவரது மகளும் இது நல்ல திட்டமாகத் தெரிகிறது என்கிறார். மருமகனுக்கு அபிலீன் பயணம் தொலைவாகவும் வெப்பமாகவும் இருக்கும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் தனது விருப்பம் குழுவினரினதிலிருந்து மாறுபட்டு நிற்கக்கூடும் என்று அஞ்சி, “நல்லது. உன் தாயாரும் விரும்புவார் என நம்புகிறேன்” என்று பதில் கூறுகிறார். உடன் மாமியாரும் “கண்டிப்பாக. நானும் அபிலீனுக்குச் சென்று நிறைய நாட்களாகிறது” என்கிறார்.
பயணம் வெப்பம் நிறைந்ததாகவும் நெடுந்தொலைவாகவும், பாதை புழுதியோடும் அமைந்து விடுகிறது. உணவகத்தில் உணவும் சரியில்லை. அனைவரும் களைப்புடன் வீடு திரும்புகின்றனர்.
ஒருவர் போலியாக “பயணம் நன்றாக இருந்தது. இல்லையா?” எனக் கேட்கிறார். மாமியாரோ உண்மையில் தான் வீட்டிலிருக்கவே விரும்பியதாகவும் மற்ற மூவரும் அவ்வளவு ஆர்வமாக இருந்ததாலேயே உடன்பட்டதாகவும் கூறுகிறார். மருமகனோ தனக்கு அதில் விருப்பமே இல்லை என்றும் மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்கவே வர உடன்பட்டதாகவும் கூறுகிறார். மனைவியோ “உங்கள் மகிழ்ச்சிக்காகத்தான் வந்தேன். அந்த வெப்பத்தில் வருவதற்கு எப்படி மனம் விரும்பும்?” என்கிறார். மாமனார் தான் உண்மையில் மற்றவர்கள் சலிப்புற்றிருக்கிறார்கள் என்றெண்ணியே முதற்கண் அதைப் பரிந்துரைத்ததாகக் கூறுகிறார்.
அனைவரும் எவ்வாறு ஒருவருமே விரும்பாத ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம் என்றெண்ணி குழம்பி நின்றனர். ஒவ்வொருவரும் வசதியாக அமர்ந்திருக்கவே விரும்பினர். இருந்தும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கையில் அவரவர் விருப்பத்தை வெளியிடவில்லை.”
ஒரு குழுவினர் சேர்ந்து எடுக்கின்ற முடிவு ,அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களினதும் தனிப்பட்ட விருப்பிற்கு எதிராக அமையும்.
இது கூடுதலாக குழுக்களிடையேயான நிலவும் தகவல் தொடர்பாடல் குறைபாட்டால் ஏற்படுகிறது.
இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது நமது வாழ்க்கையும்.