Home » பொது » COIMBATORE
COIMBATORE

COIMBATORE

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே “பெல்’ (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்…?.
வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, “குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்’, மக்கள் வாழத்தகுதியே இல்லை….அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே…எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த “டெக்ஸ் சிட்டி’, சமீபகாலமாய் “ஹை-டெக் சிட்டி’யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்…
அரசு அமைத்து சோபிக்காமல் போன “டைடல் பார்க்’ தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் “பீனிக்ஸ்’ பறவையாய் மீண்டெழுந்து, இன்று “ஒற்றுமையின் ஊராக’ பெயர் பெற்றிருக்கிறது கோவை.குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது “சிறுதுளி’; மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது “ஓசை’; ரயில் சேவைக்காக போராடுகிறது “ராக்’.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், அத்துப்படியான ஆங்கிலம், இதமான காலநிலை, சுவையான சிறுவாணி, அதிரடியில்லாத அரசியல்… இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான நாள் இன்று…கோயம்புத்தூர் தினம்.
எல்லோரும் சொல்வோம் இறுமாப்பாய்…
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top