”என் புள்ள செல்போன், கம்ப்யூட்டரே கதியா கிடக்குறான். ஆனா, அதுல என்ன பண்ணுறான்னு மட்டும் எங்களுக்கு எதுவுமே தெரியல… என்று புலம்பும் பெற்றோர், இன்றைக்கு அதிகம் ஆகிவிட்டார்கள்..’’ என்று சொல்லும் சென்னை, லயோலா கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் நெஸ்டர் ஜெயகுமார், பெற்றோர்களுக்கு டிப்ஸ்களை அள்ளி வழங்கினார். அவை…
குழந்தைகளை தனியறையில் அமர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதிக்காமல், ஹாலிலோ அல்லது உங்களது பார்வையில் படுகிற இடத்திலோ அனுமதியுங்கள்.
குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் தேவையான, பயன்படக்கூடிய சாஃப்ட்வேரை மட்டுமே கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வையுங்கள். முடிந்தவரை கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது ஒருசில வலைதளத்துக்குள் செல்ல முடியாதபடி ரெஸ்ட்ரிக்ட் செய்துவையுங்கள். கணினியைப் பற்றி நீங்கள் தெரியாதவர்களாக இருப்பின், தெரிந்தவர்களின் உதவியோடு இதைச் செய்யுங்கள்.
குறைந்த நேரம் மட்டுமே கணிப்பொறியில் அமரவிடுங்கள். குழந்தைகள் ‘அடிக்ட்’ எனும் அடிமை நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால்… கவனமாக விடுபடச் செய்யுங்கள்.
சமூக வலைதளங்கள், சாட்டிங் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். குழந்தைகளின் பெயர், புகைப்படம், பள்ளி உள்ளிட்ட எந்த விவரங்களையும் இணையத்தில் வெளியிட அனுமதிக்காதீர்கள். அதன் விளைவுகளை சொல்லிப் புரியவையுங்கள்.
குழந்தைகள் கம்ப்யூட்டரை பயன்படுத்திய பிறகு, அவர்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை ‘ஹிஸ்ட்ரி’ ஆப்ஷனுக்குள் சென்று கண்காணியுங்கள்.
குழந்தைகளுக்கு நீங்களே இ-மெயில் ஐ.டி உருவாக்கி, அதன் பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது. அதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை சரிவர சொல்லிக் கொடுங்கள். இணையப் பயன்பாட்டின்போது குழந்தை தவறே செய்திருந்தாலும், கண்டிப்போடு புரிய வையுங்கள்.
இணையத்தில் பயனுள்ளவற்றை குழந்தைகள் செய்யும்போது ஊக்குவித்து, அதைச் சார்ந்த பல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். கணிப்பொறி சார்ந்த நல்ல புத்தகங்களை வாங்கி கொடுத்து கற்றுக்கொள்ள ஊக்குவியுங்கள்.
சம்பந்தமில்லாத ஏடாகூட ‘பேஜ்’ ஓபன் ஆவது போன்று இணையத்தில் எதிர்பாராமல் ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்தால், அதை உங்களிடம் தெரிவிக்கும்படியான புரிதலை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.