Home » பொது » ஆசைகளை சீர்படுத்துங்கள்

ஆசைகளை சீர்படுத்துங்கள்

ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.

* உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.

* தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

* உண்மையில் எதிரி ஒருவன் நமக்கு இருக்கிறான் என்றால் அது நம் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே. ஒருமுறை நம் மனதிற்குள் தீய எண்ணத்தை அனுமதித்தால் அதை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

* நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது. ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.

 

*ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம். இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும். ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

* முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம். இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.

* இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும். இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம். பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top