வேகமாக நடக்கும்பொழுதும், படி ஏறும்பொழுதும், ஓடும்பொழுதும் சுவாசத்தின் சிரமத்தை உணருகிறோம். 3 நாழிகைக்கு ஒரு முறை என ஒவ்வொரு நாசித்துவாரம் வழியாக சுவாசம் செல்வதாக சரநூல்கள் குறிப்பிடுகின்றன. சுவாசம் செல்லும் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் சுவாசகுழலில் அழுத்தம் உண்டாகி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படும்பொழுது மூக்கடைப்பு, தும்மல், தலைவலி என பல தொல்லைகள் தோன்றுகிறது. காலையில் எழுந்ததும் வரிசையாக 10 முதல் 15 அடுக்குத்தும்மல்கள் உண்டாகும். அது மட்டுமின்றி முகம் கழுவியதும், குளித்ததும், அலுவலகத்தில் நுழைந்ததும் என அடுக்கடுக்காய் தும்மல் தோன்றுவதை பீனிசம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
சைனசைட்டிஸ் என்று சொல்லப்படுகிற சதைப்பீனிச நோயின் முதல் அறிகுறியே இந்த தும்மல்தான். படுத்தால் மூக்கு அடைப்பதுடன், மூச்சுத்திணறல் உண்டாகி தலைவலி, தும்மல் தோன்றும். சிலருக்கு வியர்வைஅதிகமாகி மூக்கடைத்து, தும்மல் உண்டாகும். மூக்கடைப்பு உள்ள பகுதிகளில் நீர்கோர்த்து, கண்களில் வலியும், காதடைப்பும், மூச்சுத்திணறலும் ஏற்படும். நாட்பட்ட சதை பீனிச நோயில் மூக்கடைப்புடன் அடிக்கடி தலைவலியும், மூக்கின் உள்பகுதியில் ஏதோ குறுகுறுவென்று ஓடுவது போன்ற உணர்ச்சி உண்டாகும். சிலர் இந்த தொல்லை நீங்க மூக்கை நன்கு உள்ளங்கையால் தேய்த்துக்கொள்வர். நாட்பட்ட சைனசில் கடும் தும்மல் உண்டாகி தும்முவதன் காரணமாக கழுத்து மற்றும் தோள்பட்டையில் பிடிப்பும், வலியும் உண்டாகும். நாட்பட்ட மூக்கடைப்பின் தீவிர நிலையில் ஆஸ்துமா தோன்றும் என்பதால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்துகொள்ள வேண்டும்.
மூக்கின் இரண்டுபக்கத்திலும் உட்புறமாக பக்கக்குழிகளிலிருந்து மூக்கின் உட்பகுதியில் திறக்கும் சதைப்பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் சதைவளர்ச்சி பெரும்பாலான மூக்கடைப்புக்கு காரணமாக அமைகிறது. இதனால் மூக்கில் தூசி மற்றும் நுண்கிருமிகள் தங்கி தும்மலை தோற்றுவிக்கிறது. இந்த மூக்கடைப்பானது கண்பார்வை குறைபாடு, காதுகேட்கும் திறன் குறைபாடு போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது. மூக்கடைப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதை தவிர்ப்பதுடன், குளிர்பானங்கள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தலைமுழுகுதல் கூடாது. நறுமணம் மற்றும் ஒவ்வாத நாற்றம் உள்ள பகுதிகளில் அலைவதையும் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி தோன்றும் மூக்குச்சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, மூச்சை சுலபமாக்கும் அற்புத மூலிகை ஜீவந்தி. லெப்டாடீனியா ரெட்டிகுலேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபீடேசியே குடும்பத்தைச் சார்ந்த ஜீவந்தி செடியில் டிரைகன்டேன், சிடைல் ஆல்கஹால், பீட்டா சைட்டோஸ்டீரால், பீட்டா அமிரின் அசிடேட், லுபனால், டைகுளூக்கோசைடு மற்றும் லெப்டிடின் கிளைக்கோசைடுகள் அடங்கியுள்ளன.
இவை மூக்கு சதை வளர்ச்சியை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. ஜீவந்தி மூலிகையின் வேரை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராமளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து தினமும் இரவில் சாப்பிட, சுவாசப்பாதையில் தங்கியுள்ள நுண்கிருமிகள் நீங்கும். இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் சத்பிந்து தைலத்தை இரண்டு அல்லது மூன்ற சொட்டுகள் மூக்கில் விட மூக்கடைப்பு, தும்மல் நீங்குவதுடன் மூக்குச்சதையும் கரையும்.