Home » படித்ததில் பிடித்தது » இரு வேறு கருவேலமரங்கள்!!!
இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்:-

தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழல் நல மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையிலான தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது. வேளாண்மைக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும், நமது மண் வளத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து வளர்ந்து மண்டியிருக்கும் வேலிக்காத்தான் எனப்படும், முள்மரங்களை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும்.

இந்த நேரத்தில் சீமைக் கருவேல மரம் என்றழைக்கப்படுகிற வேலிக்காத்தான் முள் மரங்களைப் பற்றியும், கருவேல மரம் என்றழைக்கப்படுகிற நமது நாட்டுக்கருவேல மரங்களைப் பற்றியுமான சரியான புரிதலை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மண்ணுக்கே உரிய மரமாக நம்மோடு வாழ்ந்தும் வளர்ந்தும் வருபவை கருவேல மரங்கள் என்றழைக்கப்படுகிற நாட்டுக் கருவேல முள் மரங்கள். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை வேலிக்காத்தான் என்று பெயர் பெற்ற சீமைக் கருவேல முள் மரங்கள்.

நம்முடைய முள் மரமான கருவேல முள் மரத்தைப் போலவே ஒரு முள் மரமாக இருந்ததாலும், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாலும் அந்த முள் மரத்துக்குச் சீமைக்கருவேல மரம் என்று நமது மக்கள் பெயர் சூட்டினர். சீமைக் கருவை, வேலிக் கருவை என்ற பெயர்களிலும் இம்மரம் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் நமது மண்ணுக்குரிய கருவேல மரத்திற்கு இருக்கும் பல்வேறு வகையான சிறப்பியல்புகளில் ஒன்றுகூட இந்தச் சீமைக்கருவேல மரத்திற்குக் கிடையாது.

நமது கருவேல மரங்கள் உயர்ந்து வளரக் கூடியவை என்பதோடு மழை நீர் பூமிக்குள் இறங்குவதைத் தடுக்காத ஆணிவேரைக் கொண்டவை. இம்மரங்கள் வைரம் பாய்ந்து கருமை நிறத்தில் மிக உறுதியாக இருப்பவை.

கிராமப் புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான ஏர்க் கலப்பை, கத்தி, கோடரி போன்றவற்றுக்கான காம்புகள், மாட்டு வண்டிகள் போன்றவற்றைச் செய்வதற்கும், வீடு கட்டுவதற்குத் தேவையான சன்னல், வாயிற்படி, பலகைகள் உள்ளிட்ட மரப் பொருள்களைச் செய்வதற்கும் உகந்தவையாக இம்மரங்கள் இன்றளவும் பயன்பட்டு வருகின்றன. இம்மரத்தை தண்ணீரில் கொஞ்சகாலம் ஊறப்போட்டு அதில் பொருள்களைச் செய்தால் நூற்றாண்டுக் கணக்கில் அவை உறுதியாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் இம்மரம் செல்லரித்து உளுத்துப் போய் உடைவதில்லை என்பதும் இதன் தனித் தன்மையாகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று நமது முன்னோர்கள் குறிப்பிட்டது இந்த வேலமரத்தின் பிஞ்சுக் குச்சிகளைத்தான். இம்மரத்தில் இருந்து கசிந்து கட்டியாகத் திரண்டிருக்கும் பிசின் கிராமப்புறப் பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகத் தாள்களை ஒட்டி வைக்கும் பசையாக பயன்படுவதுண்டு. இதன் காய்களும் தழைகளும் தாவர உண்ணிகளுக்கு – குறிப்பாக ஆடுகளுக்கு – மிகச்சிறந்த உணவுகளாகும். இம்மரத்தின் பயன்பாடுகள் அளவிடற்கரியன.

சீமை கருவேலமரம்:-

அனைத்து வகையிலும் நாட்டு கருவேலமரத்திற்கு முற்றிலும் எதிரானது, சூழல் நலத்திற்கும், வேளாண்மைக்கும், நிலப்பரப்புக்கும், மனிதர்கள் பறவைகள் உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களுக்கும் பெருங்கேடுகளை விளைவிக்கக் கூடியது வேலிக்காத்தான் முள் மரமாகும்.

விறகு, வேலி அடுப்புக்கரி எனும் மூன்று பயன்பாடுகளை முன்வைத்து இம்மரம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது. அற்பமான பயன்பாடுகளின் பொருட்டு அதிபயங்கரமானவற்றைக் கூட ஏற்றுக்கொண்டு பழக்கப்பட்ட நமது மக்கள் வேலிக்காத்தான் மரத்தையும் அவ்வகையில் ஏற்றுக்கொண்டு இப்போது அவற்றின் கொடிய பாதிப்புகளுக்கு இரையாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் வேலிக்காத்தான் முள் குத்தி பாதிக்கப்பட்டவர்களை இப்போதும் காணலாம். எத்தகைய வறண்ட பூமியிலும் வேர்ப்பிடித்து 12 மீட்டர் உயரம் வரை வளர்ந்து நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது இந்த மரம். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இதன் வேர் 175 அடி வரை பூமியில் இறங்கி நீரைத் தேடிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரிய அளவிலான கொத்தவரங்காய் வடிவில் சுருண்டு பருத்துச் சுருள் வடிவில் வளைந்திருக்கும் இதன் காய்கள் பச்சை நிறத்திலும், முதிர்ந்து காய்ந்து மஞ்சள் நிறத்தில் விதைகளாகவும் மாறும். இந்த விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல் பத்து ஆண்டுக்காலம் வரை உயிர்ப்புடன் இருந்து பின்னர் புதைகிற இடத்தில் முளைக்கும் வீரியம் கொண்டவைகளாகும்.

இம்மரங்கள் விளைந்திருக்கும் மண்பரப்பில் மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பயன்தருகிற வேறு எந்தவகையான தாவரங்களும் முளைத்து வளராது. வேரூன்றி வளர்ந்துவிட்ட பிறகு இம்மரங்களைப் பெரும்பொருள் செலவில் இயந்திரங்களின் துணைக்கொண்டுதான் அகற்ற முடியும். அப்படியே அகற்றினாலும் இம்மரம் இருந்த மண் மீண்டும் இயல்புநிலை பெற்று நல்ல வேளாண்மைக்குப் பக்குவப்படுவதற்கு ஆண்டுக் கணக்கில் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். அவ்வகையில் நமது மண்ணுக்குப் பெருங்கேடுகளை விளைவிக்கின்றன இம்மரங்கள்.

இம்மரங்களின் இலைகள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி பசுமையாக வளரக்கூடியவை. ஆனால் பயிர்களுக்கான அடியுரமாக இடுவது கால்நடைகளுக்குத் தீவனமாகத் தருவது உள்ளிட்ட எதற்கும் பயன்படாதவை. அவ்வகையில் இம்மரங்கள் காற்றின் நலனுக்கும் தட்ப வெப்பநிலைக்கும் கேடு விளைவிக்கின்றன.

இம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. பறவைகளுக்குத் தேவையான பழங்களோ, குளிர்ச்சியோ, விரிந்த கிளைகளோ இம்மரங்களில் இருப்பதில்லை என்பதுடன் கூர்மை மிக்க அடர்த்தியான முட்களின் காரணமாக எந்தப் பறவையும் இம்மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதில்லை. மேலும் இம்மரங்கள் அடர்ந்து பரந்து வளர்ந்து வருவதன் வாயிலாக பறவைகளின் வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டு வருகின்றன.

நீர் நிலைகளிலும் இம்மரங்கள் வளரும் என்பதால் நீர்ப் பறவைகள் இதன் முட்கிளைகளில் மாட்டிக்கொண்டு இறந்து விடுகின்றன. நமது நகர்ப்புறங்கள் கட்டடக் காடுகளாகவும் கிராமப்புறங்கள் வேலிக்காத்தான் காடுகளாகவும் மாற்றப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் பறவைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது.

இம்மரங்களின் சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செலுத்தாமல் பூமிக்கு மேலேயே தேங்கவைத்துவிடுகின்றன. எனவே இம்மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் இருப்பதில்லை. மேலும் குளங்கள், கிணறுகள், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் இம்மரங்களின் இலை உதிர்வதால் அந்த நீர் நிலைகள் மஞ்சள் நிறமடைந்து விஷத்தன்மை பெறுகின்றன. எனவே மீன்கள், தவளைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அத்தகைய நீர் நிலைகளில் வாழ்வதில்லை. தங்களுக்கான உணவு வகைகள் ஏதுமற்ற அத்தகைய நீர் நிலைகளில் பாம்புகளும் வாழ்வதில்லை.

வேளாண்மை, குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் அத்தகைய நச்சு நீர் பயன்படாத நிலையில் காலப்போக்கில் அத்தகைய நீர்நிலைகள் அச்சமூட்டுபவையாக மாறி, கைவிடப்பட்டு, தூர்ந்து, சிதைந்து, பயனற்றுப் போகின்றன. அவ்வகையில் இம்மரங்கள் நமது நீர் ஆதாரத்திற்குப் பெருங்கேடுகளை விளைவிக்கின்றன.

சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் வேலிக்காத்தான் கைப்பற்றிய நிலப்பரப்பானது அம்மரத்துக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது என்பது உலக அளவில் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும்.

பருவமழை பொய்த்தல், ஆற்று நீர்ப்பாசனம் தடைப்படல், வேளாண் தொழிலுக்கு நேர்ந்திருக்கும் பல்வேறு வகையான நெருக்கடிகள் போன்றவற்றின் காரணமாக வேளாண்மை செய்யப்படாமல் இருக்கும் பெருவாரியான விளைநிலங்களை இப்போது இந்த வேலிக்காத்தான் மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டன.

பல்வேறு காரணங்களால் ஆற்று நீர்வரத்துத் தடைபட்டு அவற்றின் மணலும் அள்ளப்பட்டுவிட்டதால் நமது பெரும்பான்மையான ஆறுகளில் அவற்றின் நீர்ப்பாதை நெடுகிலும் இப்போது வேலிக்காத்தான் மரங்களே அடர்ந்து மண்டி வளர்ந்துள்ளன. அவற்றிடமிருந்து ஆறுகளை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் அத்தகைய ஆறுகளில் நீரைக் கொண்டு வருவதும், சவால் மிகுந்த பணிகள்தான்.

இந்நிலையில் ஆங்காங்கே வேலிக்காத்தான் மரங்களைக் களையயடுக்கும் பணிகளைத் தொடங்கும்போது, நமது மண்ணுக்கே உரிய நாட்டுக் கருவேல மரங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் விதமாக, நமது கருவேல மரத்திற்கும் சீமைக்கருவேல மரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை மக்களுக்கு விளக்கிக் கூறியாக வேண்டிய தேவையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இவ்விருமரங்களையும் பொதுவான பார்வையில் முள் மரங்களாக மட்டுமே பார்த்து அப்புறப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

நமது நாட்டுக் கருவேல மரங்கள் வாழவும், வளரவும் வேண்டியவை. சீமைக் கருவேல மரங்கள் அகற்றவும் அழிக்கவும் வேண்டியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top