எறும்பின் தன்னம்பிக்கை!
==============================
தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள். இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள்.
இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.
கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.
தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.
துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.