ஒவ்வொரு எண்ணெய்க்கும் அது சார்ந்தே பெயர் இருக்கும். எள்ளில் பெற்ற எண்ணெய்க்கு மட்டுமே நல்ல எண்ணெய் எனப் பெயர் வைத்தனர். பசு நெய் பயன்படுத்திய காலத்தில் எள் நெய் என்றவர்கள் நாளடைவில் எண்ணெய் என்றனர். அப்படிப் பார்த்தால், எண்ணெய் என்றாலே அது எள்ளில் பெற்ற நல்லெண்ணெய் தான்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. இதேபோல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும்.
நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும்.
எண்ணெய்க்கும், தமிழருக்குமான பந்தம் ஆழமானது. எள்ளும், பனையும் நம் தமிழகத்தின் தொன்மைக் காட்டுப்பயிர்கள். எனவேதான் அன்று பனைக் கருப்பட்டியுடன் எள் சேர்த்து ஆட்டியெடுத்த எண்ணெய் உணவாகவும், உடல் காக்கும் மருந்தாகவும் பயன்பட்டது.
கிறிஸ்துவிற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர் உணவில் இந்த எள்நெய் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
வைத்தியருக்கு கொடுப்பதை வாணியருக்கு கொடு என்ற பழமொழி இன்றும் இருக்கிறது. உணவாக, மருந்தாக, தலைக்கு வைக்க உடலில் தேய்க்க என நல்லெண்ணெய் மனித ஆரோக்கியத்தின் அடையாளம் என்றே சொல்லலாம்.
கொலஸ்ட்ரால் அளவு குறைக்கும் லினோலிக் அமிலம் இதில் இருப்பதால் இதய நோய் வராது. ஜீரணிக்கும் திறன்மிக்கது. பலதரப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. மாடுகள் சுற்றிவர செக்குகளில் ஆட்டியெடுத்த இந்த எள் எண்ணெய் கால மாற்றத்தில் பவர்கனி, லோட்டரி மிஷின், எக்ஸ்பிளர் என இயந்திரச் செக்குகளில் இப்போது ஆட்டியெடுக்கப்படுகிறது. முன்பு 10 கிலோ எள்ளுக்கு அரை கிலோ கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து ஆட்டி நல்லெண்ணெய் தயாரானது.
நம் பண்பாட்டு அடையாளமாக, மருந்தே உணவாக உள்ள நல்லெண்ணெய் வாங்குவோர் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து வாங்குவது அவசியம்.
எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை :-
சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
நன்மைகள்
தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.
கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.
தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும்.
Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி தீரும்.
பொடுகு தொல்லை தீரும்.
பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.
பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.
உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணர முடியும்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!