Home » சிறுகதைகள் » இரண்டும் நல்முத்துக்கள்!!!
இரண்டும்  நல்முத்துக்கள்!!!

இரண்டும் நல்முத்துக்கள்!!!

மரியாதை ராமன் கதைகள்! 

கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார்.

ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார்.

கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

ஆனால் கேசவனோ “நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கணவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?” என்று கேட்டுவிட்டான்.

தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை ராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார்.

“அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்” என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை ராமன்.

மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை ராமன்.

கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன.

“என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்” என்றான் மரியாதை ராமன்.

கேசவன் மரியாதை ராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான்.

உடனே கேழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். ‘அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்’ என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.

கேசவனுக்கோ பயம் வந்து விட்டது. ‘இப்போது நாம் 98 முத்துக்களை மட்டும் அவசரமாக கோர்த்து எடுத்துப் போய்க் கொடுத்தால் 2 முத்துக்களை நாம் திருடிக் கொண்டோமென்று நீதிபதி கடுமையான தண்டனை விதிப்பாரே! இந்தத் தண்டனையில் இருந்து தப்புவது எப்படி?’ என்று நினைத்த கேசவனுக்கு கந்தனிடம் மோசடி செய்த 2 முத்துக்களின் நினைவு வந்தது.

உடனே அந்த இரண்டு முத்துக்களையும் எடுத்துச் சரத்தில் கோர்த்து 100 முத்துக்கள் கொண்ட மாலையாக ஆக்கி விட்டான் கேசவன்.

மறுநாள் கேசவன் முத்துமாலையைக் கொண்டு போய் மரியாதை ராமனிடம் கொடுத்ததும் முதல் வேலையாக மரியாதைராமன் முத்துக்களை எண்ணத் துவங்கினான்.

கேசவனோ நல்லவேளையாக 2 முத்துக்கள் நம்மிடமிருந்தது. இல்லையேல் இப்போது தண்டனை கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

முத்துக்களை எண்ணி முடித்த மரியாதை ராமன் காவலர்களைப் பார்த்து ” இவனைக் கைது செய்யுங்கள்” என்றான்.

காவலர்கள் மரியாதை ராமனின் ஆணைப்படி கேசவைக் கைது செய்தார்கள்.

கேசவனோ ‘நான் என்ன தவறு செய்தேன், ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்’ என்றான்.

“நான் உன்னிடம் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அப்படியிருக்க இந்த மாலையில் மேற்கொண்டு 2 முத்துக்கள் எப்படி வந்தன என்ற விவரத்தை நீ சொலாவிட்டால் உனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றான் மரியாதை ராமன்.

தண்டனைக்குப் பயந்த கேசவன் கந்தனிடம் மோசடி செய்து 2 முத்துக்களை அபகரித்து வைத்திருந்ததை சொல்லிவிட்டான்.

அவன் வாயாலேயே உண்மையைத் வரவழைத்த மரியாதைராமன் கந்தனுக்கு அவனது 2 முத்துக்களைக் கொடுத்து விட்டு, கேசவனுக்கு ஏமாற்றிய குற்றத்திற்காக தண்டனையும் கொடுத்தான்.

மரியாதைராமனின் சமயோஜிதமான யோசனையால் உண்மை வெளிவந்ததை எண்ணி மக்கள் ராமனை மிகவும் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top