திருநீறு!!!

திருநீறு!!!

திருநீற்று இயல்

1) சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு

2) திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

3 ) எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.

4 )திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

5) திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

6) திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?
நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ’ என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

7). திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.

8). திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?
கூடாது.

9). திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?
தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும் திருநீறு அணிய வேண்டும்.

10) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

11). கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?
முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

12). திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.

13). திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

14). முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?
தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

15). முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

16). மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

17). மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

18) முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

19) சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

20). அவைகளுண்டான வகை எப்படி?
பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

21). அதனை அணிவதானால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொத்த விபூதியை பசுவின்சாணத்தினால் விளைக்கவேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

22). கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.

23). அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?
காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

24). உபகற்ப விபூதியாவது யாது?
இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

25). விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

26). எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?
புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top