Home » படித்ததில் பிடித்தது » காக புஜண்டர்!!!
காக புஜண்டர்!!!

காக புஜண்டர்!!!

பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார்.

அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள்.

தியானச் செய்யுள்:

காலச்சக்கரம் மேல்
ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top