அறுபது வயதினருக்கு ஏற்படும் பல உடல் கோளாறுகள் இப்போது, இருபது வயதினருக்கு கூட வருகிறது. காரணம், உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் தான். பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் புட் பழக்கம் தான் இதற்கு காரணம்.
இந்த வகையில், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த “கிட்னி ஸ்டோன்’பிரச்னை, இருபது வயதினருக்கு சகஜமாக வருகிறது. ஒபிசிட்டி, அதிக உப்பு, காரமுள்ள உணவு வகைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
கிட்னி ஸ்டோன் என்பது, ஆண்களுக்கு தான் வரும்; பெண் களுக்கு மிக அரிது; ஆனால், சமீப காலத்தில், 20 -30 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
வருவது ஏன்
கிட்னியில் கற்கள் சேர்ந்து தொந்தரவு செய்ய காரணம் பல இருந்தாலும், அது ஏற்படுவதற்கு காரணம், சிறுநீர் போகும் போது, அதில் உள்ள துகள்கள், திடமாகி கற்களாக மாறுகிறது. இதில் 75 சதவீத கற்கள், கால்சியம் மற்றும் ஆக் சலேட் தொடர்பான கற்கள் தான். உப்பு சார்ந்த உணவுகளால் சிறுநீரில் உள்ள உப்புச்சத்துக்கள், கற் களாகின்றன. அதுபோல உணவுகளில் உள்ள கழிவுகளில் ஆக்சலேட் என்ற கழிவு பிரிகிறது. அதுவும் கால்சியத்துடன் சேர்ந்து கற்களை உருவாக்குகிறது. இரண்டும் சிறுநீருடன் வெளியேறாமல் திடமாகி விடுகின்றன. இது தவிர, கால்சியம் பாஸ் பேட் கற்களும் சேர்கின்றன. சில சமயம், சிறுநீரில் உள்ள அமிலச்சத்து, திடமாகி கற்களாகின்றன. இப்படி பலவகையில் கற்கள் ஏற்படுகின்றன.
ஆரம்பம் எப்படி
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணம், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் என்று முன்பு சொல்வதுண்டு. உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. அது வறண்டுபோகக்கூடாது. அதனால், நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர்.
தண்ணீராகவோ, பழ ரசமாகவோ , திரவ உணவாகவோ உடலுக்குள் போக வேண்டும். அப் போது தான் இப்படிப்பட்ட சிறுநீரக கற்கள் சேராது. உப்பு சார்ந்த பிஸ்கட், உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்த பிரச்னை எளிதில் ஏற்படும்.அதனால், உணவிலும் உப்பைக் குறைப்பது மிக நல்லது. இதுபோல, அதிக சர்க்கரையும் ருசிக்கக்கூடாது.
என்ன சாப்பிடலாம்
கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும், ஜூஸ் களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. உடல் வற்றிப் போகக் கூடாது என்பதற்கு இந்த இரண்டும் முக்கியம். ஆனால், இளம் வயதினருக்கு இரண்டுமே எதிரிகள்.
டப்பாவிலும், பாட்டிலிலும் அடைக்கப்பட்ட கோலா ஜூஸ்கள் தான் பிடித்தமானது; அதுபோல, பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவதில் தான் அதிக அக்கறை டீன் ஏஜினருக்கு.அதை மாற்றி, காய்கறி மற்றும் புரூட் சாலட்களை சாப்பிடலாம்; தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், தோலிலும் பளபளப்பு அதிகரிக்கும்.
கால்சியம் குறைக்கலாமா
கிட்னி ஸ்டோனில் கால்சியம் கற்கள் தானே இருக்கிறது; அதனால், கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்; பால் போன்ற பொருட்களை விட்டுவிடலாம் என்று சிலர் தவறான யோசனை சொல்வர். அது தவறு. கால்சியம் கற்கள் என்பதால், அது தொடர் பான உணவுகளை கைவிட்டுவிட்டால் வேறு வகையில் பாதிப்பு வரும். கால்சியம் மாத்திரைகளை விழுங்குவோர் மட்டும், அதை தவிர்க்கலாம். இதற்கு டாக்டரின் யோசனை கேட்க வேண்டும்.
சிகிச்சை என்ன
சிறுநீரக கற்கள் என்பது சிலருக்கு சிறிய அளவில் இருக்கும். அவற்றை சில பயிற்சிகள், மருந் தால் சரி செய்து விட முடியும். சிலருக்கு பெரிதாக இருக்கும். அதை அகற்ற அறுவை சிகிச் சை தான் ஒரே வழி. இப் போது இந்த வகை கோளாறுகளை சரி செய்ய நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன. ஒலியை கிளப்பிக்கூட கற்களை கரையச்செய்யும் “லித் தோட்ரிப்சி’ முறையும் உள்ளது. லேசர் கருவி மூலமும் கற்களை கரைக்கலாம். ஆனால், இவற்றால், சிறுநீரக திசுக்கள் பாதிக்கப்படாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். சிலருக்கு “கோல்ப்’ பந்து அளவுக்கு கூட சிறுநீரக கல் இருக்கலாம். அதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.
ஒபிசிட்டி உள்ளவர்கள்…
சிறுநீரக கற்கள் யாருக்கு வரும் என்றெல்லாம் சரியாக சொல்ல முடியாது; இருபது வயதை தாண்டியவர்களுக்கும் வருவதால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். குண்டாக (ஒபிசிட்டி) இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியாக சிறுநீர் போகாமல் இருந்தால், டாக்டரிடம் காட்டலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இதெல் லாம் வராமல் பார்த்துக்கொள்ள உணவு முறையில் இளம் வயதினர் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது.