Home » பொது » புதிய அரசு!!!
புதிய அரசு!!!

புதிய அரசு!!!

சிங்கப்பூரில் 21.10.1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு “ஆசாத் ஹிந்த்“ என்று பெயரிட்டார். 38கோடி இந்தியர்களின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஒரு மாத காலத்துள் ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய அரசினை அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது.

ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அந்தப் புதிய அரசுக்கு வழங்கியது. போஸ் அந்தமானுக்கு “ஷாகித்“ என்றும் நிகோபாருக்கு “ஸ்வராஜ்“ என்றும் பெயர்சூட்டினார். 29.12.1943ஆம் நாள் இந்தியதேசியக் கொடியினை ஏற்றினார். பர்மா காட்டில் முகாம் அமைத்தார். டில்லிநோக்கித் தன் படைகளை நகர்த்தத் திட்டமிட்டார். தன் புதிய அரசுக்குரிய பணம், தபால்தலை போன்றவற்றை வடிவமைத்து அச்சிட்டார். நிர்வாகத்திற்காகப் பல துறைகளை வகுத்தார். பொறுப்புகளைப் பலருக்கும் பகிர்ந்தளித்தார். எல்லாம் ரெடி. நாடுதான் இல்லை. நாட்டைக் கைப்பற்ற டில்லி நோக்கி படை புறப்பட்டது.

ஐ.என்.ஏ. வின் தாக்குதல்     

04.02.1944ஆம் நாள் இந்திய – பார்மிய எல்லையான சிட்டகாங் என்ற இடத்தில் ஐ.என்.ஏ. தன் முதல் தாக்குதலைத் தொடங்கியது. வெற்றிபெற்றது. பின் இம்பால் நோக்கி நகர்ந்தது.

22.04.1944ஆம் நாள் அங்குத் தாக்குதலைத் தொடங்கியது. பிரிட்டிஷ் புதிய முறையில் போரிடத் தொடங்கியதால் ஒரு மாதமாகப் போராடியும் பலனில்லை. இயற்கை எதிரியாக இருந்தது. தளவாடப் பொருட்கள் குறைந்தன. ஆதலால் ஐ.என்.ஏ. படை தளர்ந்தது. 2,20,000 பேரில் 1,30,000 பேரே மிஞ்சினர். ஆனாலும் போஸ் போரை நிறுத்தவில்லை.

தப்பித்தல் 

பர்மாவில் இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. இந்திய தேசிய ராணுவம் ஒரு முழுப்பயிற்சி பெற்ற ராணுவமாகவோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்க்கும் அளவுக்கு ஆயுத பலம் வாய்ந்ததாகவோ உருவெடுக்க முடியவில்லை. இந்தியாவை நோக்கி படைதிரண்டு வந்தவர்களில் பத்து சதவீதம் பேரே உயிர் பிழைத்து இந்தியாவிற்குள் வர முடிந்தது. ஆனால் சாதி, மதப் பிரிவினைகளைத் தாண்டி தேசியவாத வேகத்தில் மக்களை இணைப்பதில் இந்திய தேசிய ராணுவம் வெற்றி பெற்றது.

போஸைத் தப்பிச்சென்றுவிடுமாறு ஐ.என்.ஏ. வீரர்கள் கேட்டுக்கொண்டனர். வேறு வழியின்றி போஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், ஜான்சி படைப்பிரிவினை மட்டும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அவர்களுக்குத் தக்கப் பாதுகாப்பும் நிதியும் வழங்கியபின்பே தாம் வேறு நாட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்துக்கொண்டார்.

அவர்களை அழைத்துக்கொண்டு பாங்காக் வந்தார். அவர்களுக்கு நிதியளித்து விடைகொடுத்தார். பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் அமெரிக்காவினால் அணுஆயுத தாக்குதலுக்கு உட்பட்டு ஜப்பான் சரணடைந்தது. ஆதலால் நம்பிக்கை இழந்த போஸ் மனம் தளர்ந்துவிட்டார்.

அங்கிருந்து தன் நண்பர்கள்  மூவருடன் 17.08.1945ஆம் நாள் ஒரு குண்டு வீசும் விமானம் மூலம் பாங்காக் சென்றார். அங்கிருந்து சாய்கோன் சென்றார். பின் வேறு ஒரு விமானத்தின் மூலம் தன்னுடைய ஒரு நண்பருடன் (ஹபிபூர் ரகுமான்) 18.08.1945ஆம் நாள் ஹாங்காங் சென்றார்.

போரின் முடிவில் 1945ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவக் கமாண்டர்கள் மூவர் (பிரேம் குமார் செகல் என்கிற இந்து, ஷா நவாஸ் கான்  என்கிற இஸ்லாமியர், குருபக் சிங் தில்லன் என்கிற சீக்கியர்) பிரிட்டிஷ் ராணுவத்தால் ராஜதுரோகக் குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுதமேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட இந்த மூவரையும் விடுவிக்க முன்வந்த வழக்கறிஞர்களில் ஜவஹர்லால் நேருவும் இருந்தார். இந்த விசாரணை நடக்க நடக்க, நாடே கொந்தளிக்கத் தொடங்கியது.

1946ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி பம்பாய்க் கடற்கரையை ரோந்து வரத்தொடங்கின. இந்திய ராணுவம் முதன்முறையாகப் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டெழுவது கண்ட பிரிட்டிஷ் தலைமைக் கமாண்டர் ஆஷின்லெக் அவசர அவசரமாக இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று கமாண்டர்களையும் விடுதலை செய்தார்.

ஷா நவாஸ் கான் ஹிந்தி மொழி நடிகர் ஷாருக்கானின் வளர்ப்புத் தாத்தா ஆவார். அதாவது ஷாருக்கானின் தாயார் லத்தீப் பாத்திமாவை, ஷா நவாஸ் கான் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்து வளர்த்தவர் ஆவார். உறவு வகையில், இஸ்லாமுக்கும், ஷா நவாஸ்கான் தாத்தா முறை. இதனால் இஸ்லாமும், ஷாருக் கானும் கூடத் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

ஷா நவாஸ் கான் சுத்தமான இந்தியராக விளங்கியவர். நேதாஜியின் படையில் முக்கிய தளபதியாகச் செயல்பட்ட அவர் முன்பு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் படையில் இருந்தார். 1942ஆம் ஆண்டு சிங்கப்பூரை ஜப்பான் படைகள் நாசப்படுத்தியபோது பிடிக்கப்பட்டார் ஷா நவாஸ் கான். பின்னர் அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து மேஜர் ஜெனரலாக உயர்ந்தார். அப்போதைய பர்மாவில் அவர் போரில் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நான்கு முறை எம்.பியாக இருந்தார்.

இரண்டு முறை இறந்தார்     

18.08.1945ஆம் நாள் ஹாங்காங் செல்லும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி போஸ் இறந்துவிட்டார் என்றன உலகநாடுகள். இது அவரது முதல் இறப்பு.

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் பைசியாபாத்தில் ஒரு சிறு ஆசிரமம் அமைத்து பகவான்ஜி என்ற பெயரில் அவர் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சில நாடுகளுக்கும் சென்றுவந்தார். அவரைச் சீனாவில் தாம் பார்த்ததாக முத்துராமலிங்கத் தேவர் குறிப்பிட்டுள்ளார். தமது நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் அவர் சில உதவிகளைக் கேட்டு வாங்கி வாழ்ந்துவந்தார்.

பகவான்ஜி பார்ப்பதற்குப் போஸ் போலவே இருந்தார். போஸ் போலவே பேசினார். அந்த வயதில் அவரது உயரமும் தோற்றமும் ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்களும் அந்த துறவி வீட்டில் கிடைக்கப்பெற்றன. பல் இடுக்கும் ஒத்திருந்தது. வயிற்றின் கீழே இருந்த தழும்பும் ஒத்திருந்தது. டீ. லால் என்ற ஆராய்ச்சியாளர் இருவருடைய எழுத்தும் நடையும் ஒத்துள்ளன என்றார். பகவான்ஜி ஒரு வங்காளி. பிரிட்டிஷாரைகிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் தங்க வாட்ச் அணிந்திருந்தார். (18.08.1945ஆம் நாள் போஸ் மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ கிடைக்கப்பெறவில்லை) நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவரது தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராகச் செயல்பட்ட டாக்டர். பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகியோர் இந்தத் துறவியின் சீடர்களாக இருந்தனர். கும்நாமி பாபா என்று அறியப்பட்ட அந்தத் துறவி மர்மயோகியாகவே வாழ்ந்தார். திரைக்குப் பின்னிருந்தே மற்றவர்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்டாமல் வாழ்ந்தார். 1985ஆம் ஆண்டு பகவான்ஜி இறந்தார். இது அவரது இரண்டாவது இறப்பு.

அவர் மறைந்த பொழுது அவரே போஸ் என்று செய்திகள் பரவின. உத்திரப்பிரதேச நீதிமன்றம் அவருடைய உடைமைகளை சீல் வைத்து பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு ஆணையிட்டது. 22.12.2001ஆம் நாள் முகர்ஜி கமிஷன் பார்வையிடுவதற்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top