Home » படித்ததில் பிடித்தது » மரம்!!! மரத்தின் பயன்கள்!!!
மரம்!!! மரத்தின் பயன்கள்!!!

மரம்!!! மரத்தின் பயன்கள்!!!

மரத்தின் பயன்கள்
பறவைகளின் பயணியர் விடுதிகள். பாதசாரிகளுக்கு இருக்க இடம் கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள். சூரிய நெருப்பு சுடுகிற பாதங்களுக்கு நிழல் கொடுக்கும் வெண்கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை.
பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது?
உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம், மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது, நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது, காற்றை சுத்தப்படுத்துகிறது, நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை.
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:
1. மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.
2. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.
3. மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.
4. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
5. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.
6. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
7. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.
8. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் (Mangrove swamps) வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
9. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.
10. மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
 வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்…இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.
ஆனால் யாரும் செய்யவில்லை. என்ன செய்வது?
இது இருந்து விட்டு போகட்டும். உங்களால் முடிந்தால், உங்கள் வீட்டில் சிறிய அளவு இடம் இருந்தால் போதும்.
ஒரு தென்னங்கன்றை நடவு செய்யுங்கள். அது உங்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வாரி வழங்கும். இளநீர், தேங்காய், வீட்டு மொட்டை மாடியில் கூரையால் ஆன குளு குளு அறை, வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், தலைக்கு தடவ எண்ணெய், தேங்காய் துருவல், வீட்டில் செடிகள் வளர்க்க கொடிப்பந்தல் அமைக்க கம்புகள் இப்படி தென்னையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பறிக்கப்படும் தேங்காய்கள், இட்லிக்கு சட்னியாவதும், ஆப்பத்துக்கு பாலாகும் போதும், ஏப்ரல் மாத வெயிலில் இளநீர் ஆவதுமாக தென்னையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இளநீருக்கு மனிதரின் முதுமையை குறைக்கும் ஆற்றல் பலமாக இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
  தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், பயன்படுகிறது. மரத்தின் தண்டு எரிபொருளாகவும், வீட்டுக்கான உத்திரம் போடவும், தூணாகவும் இருக்கிறது. கிராமங்களை கடந்து செல்லும் நீரோடைகள், கால்வாய்களை கடக்க தென்னை மரத்தின் தண்டு இருப்பதை பல இடங்களில் பார்க்க முடியும். தென்னை ஓலை தான் இன்றைய டிஜிட்டல் காலத்திலும் நகர வீடுகளின் குளிர்ச்சியான கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க முதல் தேர்வாக இருக்கின்றன.
மரத்தின் பாளையை, அதாவது பூமடலை நீரில் ஊற வைத்து ஊசியினால் சீராக நீளமாக கிழித்து எடுத்து அதனை வேலி கட்டவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள்.
தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது. உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி குளித்தால் தான் பூரணமாக குளித்த சுகம் கிடைக்கும்.
தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெயாக பயன்படுகிறது. தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top