காசியில் அன்னபூரணி தேவியின் கோயிலையும், அன்னை வீற்றிருக்கும் அழகையும் இப்பதிவில் காண்போம்.
காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரைத் தரிசிப்பது முக்கியமானது. அதன் பின்பு சற்று தூரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அழகிய சித்திர வேலைப்பாடுடன் கூடிய நுழை வாயில் வலது புறத்தில் பாதாள லிங்கம். அதன் முன்பு சிறிய கிணறு. மராட்டியர் கால கட்டட அமைப்பு. நடுவில் சந்நிதிக்கு முன்பு அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தைப் பன்னிரெண்டு கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன.
தென்கிழக்கு நோக்கிய வாயிலில் கருவறை தரிசனம் செய்யலாம். மற்ற இரண்டு வாயில்களும் முறையை “தர்மத்துவாரம்” என்றும் “பிட்சத்துவாரம்” என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த இரு வாயில்களும் மூடப்பட்டிருக்கின்றன. அதன் முன்பு பக்தர்கள் அன்னச் செல்வத்தையும், அருட்கடாட்சத்தையும் அன்னையிடம் வேண்டி நிற்கின்றனர். கருவறை முழுவதும் சலவைக்கல் பரப்பப்பட்டு வண்ணப் பூவேலைப்பாட்டுடன் மிக அழகுடன் காட்சி அளிக்கின்றது.
தீபாவளிப் பண்டிகை நாட்களில் மட்டுமே அன்னையின் முழு திருவுருவத்தையும் நின்ற கோலத்தில் நாம் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் சிலாரூப தரிசனம் இல்லை. திருமுக தரிசனம் மட்டுமே. ஸ்வர்ணகவசம் சாத்தப்பட்ட திருமுக தரிசனம்தான் காண முடியும். மற்ற பகுதிகள் புடவையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
கருவறை முழுவதும் பலவிதமான லட்டு வகைகள், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், உலர் பழவகைகள் முதலியன தட்டுகளில் அழகாக வைக்கப்படுகின்றன. அன்னை ஸ்வர்ணக் கவசத்துடன் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமானுக்கு பிட்சையிடும் காட்சியை நாம் தரிசிக்கலாம். அன்னையின் பாதக் கமலத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கர மேரு உள்ளது.
கருவறைக்கு அருகில் உள்ள மாடியில் தங்க அன்னபூரணியின் விக்ரஹம் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டும் அன்ன பூரணியின் தங்க விக்ரஹமும், பெரிய விக்ரஹமும் வைக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் தரிசிக்க முடியாது. பசிப்பிண் போக்கும் மருத்துவராக அகிலாண்ட நாயகி சுவர்ண பீடத்தில் தங்கக் கொலு வீற்றிருக்கிறாள். சுத்தப் பொன் விக்ரஹமாதலால் ஒளியில் கண்கள் கூசுகின்றன. திருவுரும் முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மிக்க அழகுடன் காட்சியளிக்கின்றாள்.
இடது திருக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்க அகப்பையும் கொண்டு, நவரத்னக் கிரீடம் அணிந்து, அதன் மேல் தங்கக் குடையும், சொர்ணப் புடவையும் உடுத்தி, மார்பிலும் கழுத்திலும் நவரத்னங்கள் மின்ன, பத்மாசனத்தில் அமர்ந்து அன்னை அருள் பாலிக்கின்றாள்.
அவளருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்க விக்ரஹங்களாக அமர்ந்திருக்கின்றார்கள். அன்ன பூரணி மக்களின் பசியை நீக்குகிறாள் என்பதை ஆமோதிக்கும் வகையில் இரு தாயார்களும் வலக்கரத்தைத் தூக்கி நம்மை ஆசீர்வதித்து, கட்டியம் கூறுவது போல் அமர்ந்திருக்கின்றனர்.
ஓர் ஆள் உயரத்தில் வெள்ளி விக்ரஹமாக பிக்ஷாடனரும் திருவோடு தாங்கி அன்னபூரணியிடம் அன்னம் பெறுகிறார். நாகாபரணத்தை அணிந்து, இடுப்பில் புலித் தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய திருக்காட்சியைக் கண்டவர் மனம் உருகும். ஓர் அற்புதமான காட்சி. தீபாவளி சமயம் மூன்று நாட்களுக்கு இத்திருக்காட்சியை மக்கள் தரிசிக்கலாம்.
அன்னபூரணி கோயில் தீபாவளி அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. அன்னம்மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. பலகாரங்களும் இனிப்பு வகைகளும் சிறிய சிறிய குன்றுகள் போல் குவித்து வைக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, தானிய வகைகள், உப்பு, புளி போன்ற சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும், பாத்திரங்களிலும், தட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படும். காய்கறி வகைகளும் பல விதமாகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன.
இதையடுத்து இரு கட்டில்கள், வெல்வெட் திண்டுகள், மெத்தை போன்றவை இறைவன் – இறைவி துயில் கொள்ள அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இனிப்பு வகைகளை, பலவித தின்பண்டங்கள், உலர் பழவகைகளும் காணப்படுகின்றன. இது ஓர் அற்புதமான காட்சியாக விளங்குகிறது. பக்தர்கள் யாவருக்கும் பசியாறும் வண்ணம் அன்னமும், இனிப்பு வகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. பக்தர்கள் அன்ன பூரணிக்குக்காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களை வாரி வழங்குகின்றனர். ஆகவே, ஆதிசங்கரர் அன்னபூரணியை “நித்தியான்ன தானேஸ்வரி” என்று மிக அழகாக வர்ணித்துப் பாடியுள்ளார்.
தீபாவளி சமயத்தில் லட்டுகளினால் செய்த தேரில் அன்னபூரணி அமர்ந்து, பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லலாம். பவனி முடிந்ததும் அந்த லட்டுகளே பிரசாதமாக மக்களுக்குத் தரப்படுகிறது. தீபாவளி தினங்களில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அன்ன பூரணியைத் தரிசிக்க முடிகிறது.