Home » சிறுகதைகள் » விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!
விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!

விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!

சுவாமி விவேகானந்தருக்கு அப்போது இருபத்தி எட்டு வயது. அவர், ராஜஸ்தான் அபு மலையில் பாழடைந்த ஒரு குகையில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தார். அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு நாள் அவர் மாலையில் உலவச் சென்றார். அங்கு அவரை அரசாங்க வழக்கறிஞரான முஸ்லிம் ஒருவர் சந்தித்தார். அவரை விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம் பெரிதும் ஈர்த்தது. எனவே வழக்கறிஞர் தாமாகவே விவேகானந்தரிடம் சென்று பேசினார். அவ்விதம் பேசியபோது அவர், இவர் ஒரு சாதாரண துறவியல்ல; அறிவிலும் ஆன்மிகத்திலும் மிகவும் உயர்ந்தவர் என்று சில நிமிடங்களில் புரிந்துகொண்டார். அதன்பிறகு முஸ்லிம் வழக்கறிஞர், அடிக்கடி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடினார். ஒரு நாள் அவர் விவேகானந்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

அதற்கு விவேகானந்தர், இப்போது மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. எனவே மழை பெய்தால் குகைக்குள் தண்ணீர் வந்து தேங்கிவிடும். நீங்கள் விரும்பினால் இந்தக் குகைக்குக் கதவுகள் செய்து கொடுங்கள் என்றார். அதைக் கேட்ட வழக்கறிஞர், சுவாமிஜி, நீங்கள் எனக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்தக் குகைக்குக் கதவுகள் போட்டாலும்கூட இந்த இடம் மிகவும் வசதியற்றது. நீங்கள் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ஆதலால் என்னுடைய பணிவான ஒரு வேண்டுகோளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்: எனக்குப் பெரிய ஒரு பங்களா இருக்கிறது. அங்கே நான் ஒருவன்தான் தனியாக வாழ்ந்து வருகிறேன். உங்களுக்குச் சம்மதம் என்றால், நீங்கள் அந்த பங்களாவில் வந்து தங்கலாம் என்று கூறினார். விவேகானந்தர் வழக்கறிஞரின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

மேலும் வழக்கறிஞர், ஆனால் சுவாமிஜி! நான் ஒரு முஸ்லிம். எனவே உங்கள் உணவிற்கு நான் தனியாக ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் தெரிவித்துக்கொண்டார். விவேகானந்தர், வழக்கறிஞர் உணவு பற்றி கூறியதைப் பொருட்படுத்தவில்லை. அவர் வழக்கறிஞருடன் அவரது பங்களாவிற்குச் சென்றார். அங்கு விவேகானந்தருக்குப் பலர் அறிமுகமானார்கள். அவர்களில் ஜக்மோகன் என்பவரும் ஒருவர். அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த கேத்ரி மன்னரின் தனிச் செயலாளராக இருந்தார். ஜக்மோகன் வந்தபோது, விவேகானந்தர் வெறும் கௌபீனம் மட்டும் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் விவேகானந்தரைப் பார்த்ததும் ஜக்மோகன், ஓ! இவர் பத்தோடு ஒன்று பதினொன்று என்ற வகையைச் சேர்ந்த ஒரு சாதாரண துறவி! போக்கிரி, திருட்டுக் கூட்டம், ஏமாற்றுக் கும்பல் போன்றவற்றைச் சேர்ந்த ஒருவர்! என்று தமக்குள் நினைத்துக்கொண்டார். விவேகானந்தர் தூக்கம் கலைந்து கண் விழித்தார். உடனே ஜக்மோகன் முதல் கேள்வியாக அவரிடம், சுவாமிஜி! நீங்கள் ஓர் இந்துத் துறவி. அப்படியிருக்கும்போது முஸ்லிம் ஒருவருடன் தங்கியிருக்கிறீர்களே! அது எப்படி? உங்கள் உணவை அவர் அடிக்கடி தொட நேரிடுமே! என்று வினவினார்.

இந்தக் கேள்வி விவேகானந்தருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் நெருப்புச்சுடர்கள் தெறித்துக்கிளம்புவதுபோல் பேசினார்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் நான் கடந்தவன். நான் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன்கூட அமர்ந்து உணவு உட்கொள்ளலாம். அதற்காக எனக்கு இறைவனிடம் பயமில்லை; ஏனென்றால் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடமும் பயமில்லை; ஏனென்றால் அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்குத்தான் பயப்படுகிறேன், இந்தச் சமுதாயத்திற்குத்தான் பயப்படுகிறேன். உங்களுக்கு இறைவனைப் பற்றியும் தெரியாது, சாஸ்திரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. நான் எங்கும் இறைவனைப் பார்க்கிறேன்; மிகவும் சாதாரண ஓர் உயிரிடம்கூட இறைவனே நிறைந்திருப்பதைப் பார்க்கிறேன்.

எனக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது! இப்படி விவேகானந்தர் கூறியதைக் கேட்டு ஜக்மோகன் அதிர்ந்து போனார். அவருக்கு விவேகானந்தரிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. அவர், நமது கேத்ரி மன்னர் இந்தத் துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் அவர் விவேகானந்தரிடம், உங்களை எங்கள் கேத்ரி அரசர் அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். விவேகானந்தர், நாளைய மறுநாள் வருகிறேன் என்று வாக்களித்தார். அதன்படி விவேகானந்தர் 1891 ஜூன் 4-ஆம் தேதி கேத்ரி மன்னரைச் சென்று சந்தித்தார். கேத்ரி மன்னர் அஜீத்சிங், விவேகானந்தரை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டார். அதனால் அவர் விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராகவும் ஆனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top