Home » விவேகானந்தர் » விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13

அப்போது எதிரே ஒருவன் வந்தான். சுவாமிஜி! உங்கள் ஆடை என்னாயிற்று. ஒரு கோவணமாவது அணிந்து கொள்ளக்கூடாதா? சரி.. சரி… இதோ! இதை அணிந்து கொள்ளுங்கள்! என ஒரு காவி நிற வேட்டியைத் தந்தான். கோவணமே இல்லாமல் இருந்த விவேகானந்தருக்கு இப்போது வேட்டியே கிடைத்துவிட்டது. வனத்தில் இருந்து மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே திரும்பினார். என்ன ஆச்சரியம்! காணாமல் போன அவரது கோவணம் அங்கேயே காய்ந்து கொண்டிருந்தது. தனக்கு வேட்டி அளித்தவரை எங்கே என சுவாமிஜி தேடினார். அவரைக் காணவில்லை. கடவுள் அவ்வளவு எளிதில் கண்ணுக்குத் தெரிவாரா என்ன! இந்த சம்பவத்துக்குப் பிறகு, சுவாமிஜி உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தாரிகாட் என்ற ஊருக்குப் புறப்பட்டார். ரயிலில் இவர் பயணம் செய்யும் போது, நண்பர்கள், தெரிந்தவர்கள், இவரைப் பின்பற்றுவோர் யாராவது டிக்கட் எடுத்துக் கொடுப்பார்கள். செலவுக்கு பணம் கொடுத்தால் சுவாமி வாங்கமாட்டார்.

இறைவன் யார் மூலமாவது உணவு கொடுத்தால் சாப்பிடுவார். இல்லாவிட்டால் பட்டினி கிடப்பார். அதுவும் இறைவன் திருவிளையாடலே என்றெண்ணி மகிழ்ச்சியடைவார். எதற்கும் அஞ்சாதவர், கேவலம்…இந்த பசிப்பிணி கண்டா அஞ்சுவார். ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே ஒரு வியாபாரி அமர்ந்திருந்தார். விவேகானந்தருக்கு கடும் தாகம். ஸ்டேஷன்களில் ரயில் நிற்கும்போது, காசு கொடுத்தால் தண்ணீர் கொடுப்பார்கள் அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள். சுவாமிஜியிடம் காசு இல்லை. அந்த வியாபாரி தண்ணீர் வாங்கி குடித்தார். சுவாமிஜி கையில் காசில்லாமல் இருந்தது அவருக்கு புரிந்துவிட்டது. ஐயா சாமி! உமக்கு எதற்கு இவ்வளவு சின்ன வயசில் சன்னியாசம்? உழைக்க பிரியமில்லையோ உமக்கு? இந்த நாட்டுக்கு பாரமாக இருக்கிறீரே! என்றார். சுவாமிஜி அவரிடம் எதுவும் பேசவில்லை. இதற்குள் தாரிகாட் வந்துவிட்டது. சுவாமிஜியும் வியாபாரியும் அதே ஊரில் இறங்கினர். பயணிகள் அமர்வதற்கு அங்கே நிழற்குடை இருந்தது. களைப்பில் இருந்த விவேகானந்தர் நிழற்குடை நோக்கிச் சென்றார்.

அங்கிருந்த ஒரு ஊழியன், யோவ் சாமி! காசு கொடுத்தா தான் இங்கே தங்க அனுமதிப்பேன். இல்லாட்டி ஓடிப்போயிரும், என்றான். சுவாமிஜி அவனிடம் ஏதும் பேசவில்லை. அமைதியாக கொளுத்தும் வெயிலடித்த வெட்ட வெளியில் அமர்ந்தார். அந்த வியாபாரி இப்போது சுவாமிஜியைப் பார்த்து கைகொட்டி சிரித்தார். அவன் முன்னால் பூரி. சப்பாத்தி, குருமா இருந்தது. அதை சாப்பிட்டபடியே, பார்த்தீரா! என் உழைப்பால் நான் சுகமாக நிழலில் அமர்ந்து சாப்பிடுகிறேன். நீர் பேசும் ஆன்மிகம், உம்மை கொளுத்தும் வெயிலில் அமர வைத்துவிட்டது, என்றார் கிண்டலாக. இதுமாதிரி சந்தர்ப்பங்களில் பொதுவாக என்ன நடக்கும்? பசி எடுத்தவன் எரிச்சல் தாளாமல், தன்னைக் கேலி செய்தவனை நையப்புடைத்திருப்பான். உணர்ச்சி அதிகமானால், கொலையே கூட நடந்துவிடும். ஆனால், சுவாமிஜி, அவனது பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவயதில் சேஷ்டைகளின் கதாநாயகரான அவர், ஆன்மிக சாதனைகள் தந்த பக்குவத்தால் அமைதியாய் இருந்தார்.

அப்போது, ஒருவன் சுவாமிஜியை நோக்கி ஓடிவந்தான். அவனது கையில் ஒரு பொட்டலம். இடதுகையில் மண்கூஜா இருந்தது. பாபாஜி! நீங்க இங்கே தான் இருக்கிறீர்களா? இந்தாங்க! இதில் நிறைய பட்சணம் இருக்கு! கூஜாவில் தண்ணீர் கொண்டாந்து இருக்கேன், சாப்பிடுங்க, என்றவன், பொட்டலத்தைப் பிரித்து அவர் முன்னால் வைத்தான். அதில் புத்தம் புதிதாக சமைக்கப்பட்ட உணவு வகை சூடாக இருந்தது. கூஜாவில் இருந்து அவனே தண்ணீரும் ஊற்றி வைத்தான். சுவாமிஜியை தொட்டு வணங்கினான். பாபாஜி! என்னால் முடிந்ததை அவசர அவசரமாய் செய்து கொண்டு வந்திருக்கேன். பெரிய மனசு பண்ணி சாப்பிடணும், என்றான். சுவாமிஜி அவனை ஆச்சரியமாய் பார்த்தார். தம்பி! நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு எனக்கு இதையெல்லாம் தர்றே! நீ தேடி வந்த ஆள் நாளில்லை. எனக்கு இந்த ஊரில் யாரையும் தெரியாது. நான் இங்கு வருவதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் இல்லையே, என்றார் விவேகானந்தர். சுவாமி! உங்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நீங்க களைப்பா இருக்கீங்க! முதலில் சாப்பிடுங்க! அப்புறமா மற்றதைப் பேசுவோம், என்றான். சுவாமிஜி இன்னும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கவே, சுவாமி! நடந்ததைச் சொல்றேன். நான் இந்த ஊரில் பட்சணம் செய்து விற்று பிழைக்கிறேன்.

ஸ்ரீராமபிரான் தான் என் குலதெய்வம். அவர் நேற்று என் கனவில் வந்தார். உங்கள் உருவத்தைக் காட்டி, இவன் என் பக்தன். பட்டினியால் களைப்படைந்திருக்கிறான். நாளை இங்கே இந்த இடத்தில் இருப்பான். இவனுக்கு புதிதாக சமைத்த உணவு கொண்டு கொடு, என்றார். நான் ஏதோ கனவு தானே என்று அதைப் பெரிதாக எண்ணவில்லை. மீண்டும் உறங்கிவிட்டேன். திரும்பவும் அந்த ராகவன் என் கனவில் வந்தார். நான் சொன்னது நினைவிருக்கிறதல்லவா! நாளை மறக்காமல் சென்றுவிடு, என்றார். நான் திகிலடைந்து எழுந்தேன். அவர் சொன்னபடியே, அவர் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்திற்கு, சொன்னபடியே வந்தேன். அவர் கனவில் காட்டியது உங்கள் உருவத்தைத் தான். சாப்பிடுங்கள் மகராஜ்! என்றார். சுவாமிஜிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஸ்ரீராமா! உன் கருணையே கருணை! இந்த சாதாரணமானவனின் மீது நீ இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாயா? நான் பட்டினி கிடப்பது உனக்கு பொறுக்கவில்லையா?என்றார். இதை ரயிலில் வந்த வியாபாரியும், இடம் கொடுக்க மறுத்த ஊழியரும் கவனித்துக் கொண்டிருந்தனர். வேகமாக வந்து சுவாமிஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பின்னர் சுவாமிஜி அங்கிருந்து ஹரித்துவாருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் ஹத்ராஸ் என்ற ஊர் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top