Home » விவேகானந்தர் » விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8

நரேந்திரனுடன், பேசிக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே திடீரென பரவசநிலைக்கு போய் விட்டார் ராமகிருஷ்ணர். அவர் எந்தநேரத்தில் இப்படிப்பட்ட நிலையை அடைவார் என யாராலும் கணிக்க முடியாது. அந்த நாராயணனே கதாதரனாக (ராமகிருஷ்ணரின் முந்தையப் பெயர்) அவதரித்துள்ளார் என்பது ராமகிருஷ்ணருக்கும், அவரது சீடர்களுக்கும் தெரியும். அவர் இப்படிப்பட்ட நிலையை அடையும் போது அவரது சீடர்கள் அவரைத் தெய்வப்பிறவியாக எண்ணுவர். மற்றவர்களின் பார்வையில் அவர் பித்தராகப் படுவார். நரேந்திரன் அவரை அப்படியே உற்றுப்பார்த்தார். இப்போது ராமகிருஷ்ணரின் கை மெதுவாக நரேந்திரரைத் தொட்டது. அவ்வளவு தான்! இதற்கு முன் கால் கட்டைவிரலால் தன்னை அழுத்தியபோது ஏற்பட்ட அந்த உணர்வு மீண்டும் ஆட்கொண்டது. ஆனால், முதல்முறை அலறியது போல இம்முறை அவர் அலறவில்லை. தாங்கமுடியாத ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டாலும் கூட, நரேந்திரர் அப்படியே தன்னை மறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மனதில் எழுந்த எண்ண அலைகள் எப்படியோ இருந்தன. அவர் சிவபெருமானின் அவதாரமாக தனக்குத்தானே தெரிந்தார். அவரது முற்பிறப்பு அவரது மனக்கண் முன் வந்தது. அப்போது ராமகிருஷ்ணர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார்.

நரேந்திரா! உன் பூர்வ ஜென்ம கதையைச் சொல்?என்றதும், நரேந்திரன் பேச ஆரம்பித்தார். அடுத்த கேள்விகள், நீ எவ்வளவு காலம் இந்த பூமியில் வாழ்வாய்?, நீ இந்த உலகில் என்னென்ன ஆன்மிகப்பணிகள் செய்யப் போகிறாய்?… இப்படியே கேள்விகள் தொடர்ந்தன. இதற்கு நரேந்திரன் ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பரவசநிலையை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு என்ன நடந்தது என்பெதல்லாம் மறந்து விட்டது. எப்படியோ, இறைவனைப் பார்க்க முடியும் என்ற தன் கருத்தை மக்களிடம் பரப்ப ஒரு நல்ல சீடன் அமைந்துவிட்டான் என்பதில் ராமகிருஷ்ணருக்கு பரமதிருப்தி. சில சமயங்களில் விவேகானந்தர் தொடர்ந்து வராமல் போய்விடுவார். அப்போதெல்லாம் தன்னைத் தேடி வருகிறவர்களிடம், நரேந்திரனை எங்கு பார்த்தாலும் வரச்சொல்லுங்கள், என்பார் ராமகிருஷ்ணர். பொதுவாக சிஷ்யர்கள் தான் குருவைத்தேடி செல்வார்கள். இங்கே சிஷ்யனைத் தேடி குரு அலைந்து கொண்டிருந்தார். அதுதான் விவேகானந்தர் என்ற மாபெரும் மனிதனின் தனிச்சிறப்பு. நரேந்திரன் சிவ அம்சம் என்பதைப் புரிந்துகொண்ட ராமகிருஷ்ணர், யாராவது அவரை திட்டினால் கடுமையாகக் கோபப்படுவார்.

ஒருமுறை ஒரு பக்தர் ராமகிருஷ்ணரிடம், நரேந்திரர் தீயவர்களுடன் சேர்ந்து வெளியே சுற்றுகிறார். அவரை தீயபழக்கங்கள் ஆட்கொண்டுள்ளன, என்று புகார் சொன்னார். ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. நீ சிவநிந்தனை செய்கிறாய். நரேன் ஒருபோதும் தவறு செய்யமாட்டான் என்று அந்த காளியே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இனிமேல் இப்படி பேசினால், என் முகத்திலேயே விழிக்காதே, என திட்டி அனுப்பிவிட்டார். விவேகானந்தர் மீது ராமகிருஷ்ணர் அந்தளவு பற்றுக்கொண்டிருந்தார். ஒருமுறை ராமகிருஷ்ணரின் ஜெயந்திநாள் (ஜென்மநட்சத்திர நாள்) வந்தது. அவரிடம் ஆசி பெற பல சீடர்களும், பக்தர்களும் வந்தனர். விவேகானந்தர் மட்டும் வரவில்லை. அவரைக்காணாமல் மற்ற சீடர்களிடம், நரேன் வந்து விட்டானா? என கேட்டபடியே இருந்தார் ராமகிருஷ்ணர். அன்று மதியம் தான் வந்தார் ராமகிருஷ்ணர். அவரைப் பார்த்தவுடனேயே அவர் மீது சாய்ந்து விட்டார். அப்படியே சமாதிநிலைக்கு போய்விட்டார்.

ஒருமுறை அவரைக்காணாமல் அவர் கல்கத்தாவுக்கே போய்விட்டார். விவேகானந்தர் பிரம்மசமாஜத்தில் இருப்பதாக அறிந்து, அங்கேயே போய்விட்டார். அங்கே ஆன்மிகக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. விவேகானந்தரும் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சமாதிநிலையடைந்த ராமகிருஷ்ணர் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார். இது பிரம்மசமாஜ உறுப்பினர்கள் பலருக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் தான் இந்தச் சூழ் நிலையை சமாளித்து, அவரை தட்சிணேஸ்வரத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார். இப்படி சீடன்மீது, ராமகிருஷ்ணர் அதீத அன்பு செலுத்தினார். ராமகிருஷ்ணர் இப்படி சீடனின் நினைவாகவே இருந்ததால், அவர் கடவுளை நினைக்காமலே போய்விடுவாரோ என விமர்சித்தவர்களும் உண்டு. பிரதாப சந்திர ஹாஸ்தா என்ற பக்தர் இதை ராம கிருஷ்ணரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். ராமகிருஷ்ணருக்கு இந்தக் கேள்வி சிந்தனையை எழுப்பியது. இதை காளிதேவியிடமே கேட்டுவிட்டார் ராமகிருஷ்ணர். அவள் அவரிடம், மகனே! நான் எல்லா உயிர்களின் உள்ளத்திலும் ஒளிவீசுகிறேன் என்றாலும், தூய்மையான நரேன் போன்றவர்களின் உள்ளத்தில் மேலும் பிரகாசமாக ஒளி வீசுகிறேன், என்றாள். அதன்பின் நரேந்திரன் மீதான ராமகிருஷ்ணரின் மதிப்பு இன்னும் பல மடங்கானது.

இங்கே விவேகானந்தர் இவ்வாறு ஆன்மிகக்கோட்டை எழுப்பிக்கொண்டிருந்த வேளையில் தான், விஸ்வநாததத்தர் மறைந்தார். புவனேஸ்வரி தாயார் அழுது புலம்பினார். நரேந்திரனுக்கு இப்போது தான் தன்னிலை திரும்பியது. குடும்ப வரவு செலவை திருப்பிப்பார்த்தார். ஒன்றுமே மிஞ்ச வில்லை. கடன் அதிகமாக இருந்தது. கடன் கொடுத்தவர்கள் புவனேஸ்வரி அம்மையாரை நெருக்கினார்கள். ஆன்மிகம் என்பது ஒருபுறம் இருந்தாலும், விவேகானந்தர் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தார். பி.ஏ., முடித்து சட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் வறுமையின் கோரப்பிடியில் அவர்கள் சிக்கினர். இருப்பதையெல்லாம் விற்று, மகனைப் படிக்க வைத்தார் புவனேஸ்வரி. ஆனால், அவர் வாரி வழங்கியதில் வசதியான உறவுக்காரர்கள் கூட அவரது வறுமையை எள்ளி நகையாடினர். இன்னும் சில உறவினர்கள், அவர்கள் குடியிருந்த வீட்டில் தங்களுக்கும் பாத்தியதை உண்டு எனவும், எனவே வீட்டை விற்று தங்கள் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியேறி விட வேண்டுமெனவும் கூறினர். புவனேஸ்வரி அதிர்ச்சியில் இருந்தார். விவே கானந்தர் தன் தாயைத் தேற்றினார். வீடு சம்பந்தமான வழக்கு கோர்ட்டுக்கு போனது. விவேகானந்தர் கோர்ட் படியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top