Home » விவேகானந்தர் » விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 4
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 4

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 4

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை தள்ளிப்பார்த்தனர். உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரிந்தது. எல்லா உறவினர்களும் வந்து விட்டனர். அவர்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிப் பார்த்தனர். பதில் ஏதும் இல்லை. பயம் ஆட்டிப் படைத்தது. வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஒரு மூலையில் நரேந்திரனும், அவனது தோழனும் நிஷ்டையில் இருப்பதை பார்த்தனர். தாய் புவனேஸ்வரி மகனை அன்புடன் அணைத்துக் கொண்டாள். இப்படியாக ராமன் மீது இளம் வயதிலேயே அபார பக்தி வைத்திருந்தார் விவேகானந்தர்.ஆனால், இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருமுறைஇல்லறவாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரோ சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது நரேந்திரன் கேட்டுவிட்டான். அவனது சிறிய மூளை வேறுவிதமாக சிந்தித்தது.

திருமண வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்றால் நாம் வணங்கும் ராமரே இதே தவறை அல்லவா செய்திருக்கிறார். அப்படியானால் ராமர் தவறு செய்திருக்கிறார். தவறு செய்த ராமன் எப்படி கடவுளாக முடியும். இனிமேல், இந்த ராமனை வணங்க மாட்டேன் என கூறிவிட்டு, சீதாராமர் பொம்மையை தூக்கி வீசினான். பொம்மை நொறுங்கி விட்டது. அம்மாவிடம் ஓடிச் சென்றான். கதறி அழுதான். எனது ராமன் தவறு செய்துவிட்டான். அவன் இல்லறத்தில் இறங்கியது தவறு. அதன் காரணமாக அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான். எனவே, ராமனை வணங்க மாட்டேன். எனக்கு வேறு ஏதாவது வழி சொல் என்றான். புவனேஸ்வரி அவனைத்தேற்றினாள். இதற்காக கவலைப்படாதே! உனக்கு கல்யாணம் செய்த சுவாமிகளை பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாத சுவாமியின் பொம்மையை தருகிறேன். காசியில் இருக்கும் கைலாசநாதர் தவயோகத்தில் இருப்பவர். அவரது சிலையை உனக்கு தருகிறேன். அந்த துறவி பொம்மையை வைத்து விளையாடு. அந்த பொம்மைக்கு பூஜை செய், எனச் சொல்லி விஸ்வநாதரின் தவக்கோல பொம்மையைக் கொடுத்தாள்.

இந்த பொம்மைதான் நரேன் என்ற சிறுவன், விவேகானந்தர் என்ற மாபெரும் சக்தியாக உருவெடுக்க காரணமாயிற்று.கைலாசநாதரின் துறவிக்கோலத்தை நரேன் பெரிதும் ரசித்தான். அவரைப் போலவே தாமும் ஒரு துறவியாக வேண்டும் என நினைத்தான். அந்த பொம்மையின் முன்னால் அமர்ந்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். தன் நண்பர்களை தியான விளையாட்டுக்கு வருகிறாயா? எனச் சொல்லி அழைப்பார். பல நண்பர்கள் வருவார்கள். ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்த போது, ஒரு நல்ல பாம்பு அந்த வழியாக வந்தது. அது சீறும் சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் ஓடிவிட்டனர். நரேந்திரனையும் எழுப்பினர். ஆனால், நரேந்திரன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அவனை யாராலும் எழுப்ப முடியவில்லை. நல்ல பாம்பு அவனருகே வந்தது. படமெடுத்து அவன் முன்னால் நின்றது. என்ன நினைத்ததோ தெரியவில்லை. மீண்டும் ஊர்ந்து சென்றுவிட்டது. இப்படி எதற்கும் கலங்காமல் இளம் வயதிலேயே விவேகானந்தரின் தியான வாழ்க்கை அமைந்தது. 1870ல் ஈஸ்வரசந்திர வித்யாசாகர பள்ளியில் நரேன் சேர்ந்தான். மிகவும் துடிப்பாக இருப்பான்.

கோலி விளையாட அவனுக்கு மிகவும் பிடிக்கும். மல்யுத்தம் அதைவிட பிடித்த விளையாட்டு. வகுப்பு இடைவேளையில் மைதானத்தில்தான் அவனைப் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே அவனது மனதில் இருந்தது. அதற்கு அச்சாரமாக கல்கத்தாவில் ஒரு கேஸ் தொழிற்சாலையையும், சோடா கம்பெனியையும் வைத்தான். பள்ளியில் படித்துக் கொண்டே இந்த தொழிலையும் அவன் கவனித்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பள்ளியில் ஆங்கில வகுப்பு துவங்கினர். அந்நிய மொழி என்பதால் நரேந்திரனுக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அதையும் கருத்தூன்றி படித்தான். பிற்காலத்தில் சிகாகோ நகரில் அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்த இந்த மொழி அவனுக்கு கை கொடுத்தது.பிறருக்கு ஒரு துன்பம் வந்தால் நரேந்திரனுக்கு பொறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் சக மாணவனை அடித்து விட்டார் என்பதற்காக விவேகானந்தர் ஒரு பெரும் போராட்டமே நடத்தி விட்டார்.

ஒருநாள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆசிரியர் ஒரு மாணவனை கடுமையாக அடித்து விட்டார். அதைப் பார்த்து விவேகானந்தரின் நாடி நரம்புகள் துடித்தன. அவர் ஆசிரியரை கேலி செய்யும் வகையில் சத்தம் போட்டு சிரித்தார். உடனே, ஆசிரியரின் கோபம் விவேகானந்தர் மீது திரும்பியது. நீ உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னையும் அடித்து நொறுக்குவேன் என ஆசிரியர் எச்சரித்தார். விவேகானந்தர், அதை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஆசிரியருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. விவேகானந்தரின் காதைப் பிடித்து திருகினார். விவேகானந்தர், சற்றும் கண்டு கொள்ளவில்லை. காதில் இருந்து ரத்தம் வடிந்தது. அப்போதுதான், நிலைமையை புரிந்து கொண்ட விவேகானந்தர் ஆத்தரமும், அழுகையும் பொங்க, இனிமேலும் என் காதை திருகினால் நான் சும்மா விட மாட்டேன். என்னை அடிக்க நீங்கள் யார்? ஜாக்கிரதையாக இருங்கள். இனிமேல் என் அருகில் நீங்கள் வரக்கூடாது, என சப்தம் போட்டான். அந்த சமயத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே வந்தார். அவரிடம் நடந்ததை தைரியமாக சொன்னார். இனிமேல் பள்ளிக்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஆனாலும், தலைமையாசிரியர் அவரை சமாதானம் செய்து வகுப்பில் இருக்க வைத்தார். அவரது விசாரணையில் ஆசிரியரின் பக்கம் நியாயம் இல்லை என்பது தெரியவந்தது. ஆசிரியரை அவர் கண்டித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top