புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல…வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் கூட எரிச்சலடைந்து விடுவார்கள். உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால், உடனே கிளம்பி விடுவார்கள். அவர்களை பாடாய்படுத்தி விடுவான். சில சமயங்களில் அவனது சப்தம் பக்கத்து வீடுகளையே கலக்கி விடும். அதுபோன்ற சமயங்களில் புவனேஸ்வரி ஒரு பானை தண்ணீரை எடுத்து வந்து நரேனின் தலையில் கொட்டி விடுவார். அதற்கும் அவன் அடங்கமாட்டான். அவனை சகோதரிகள் இருவரும் பிடித்துக் கொள்ள, புவனேஸ்வரி அவனது காதில் நம சிவாய, நமசிவாய என ஓதுவார். அந்த மாய மந்திரம் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்தும்.
அப்படியே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான். மறுநாள் மீண்டும் சேஷ்டை ஆரம்பித்து விடும், ஒரு சமயத்தில் அவனது சகோதரிகளிடம் வம்புச்சண்டை இழுத்தான் நரேன். அவர்கள் அவனை விரட்டினர். பிடிபடாமல் தப்பி ஓடினான். ஓரிடத்தில் கழிவுநீர் ஓடை குறுக்கிட்டது. நரேனால் தப்ப முடியாத நிலை. சகோதரிகளிடம் சிக்கிக் கொள்வோமே என்ன செய்யலாம் என கடுகளவு நேரம் தான் சிந்தித்தான். அவனது குட்டி கால்களைக் கொண்டு, அந்த ஓடையை தாண்டுவது என்பது இயலாத காரியம். உடனே சாக்கடைக்குள் குதித்து விட்டான். உள்ளேயே நின்று கொண்டான். அந்தப் பெண்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தக் குட்டிப்பயலைப் பிடிப்பதற்காக அவர் களும் சாக்கடைக்குள் இறங்க முடியுமா என்ன!
சிறுவயதிலேயே உனக்கு எவ்வளவு தைரியம்? என்றுகத்தினர் சகோதரிகள்.தப்பிக்க வேண்டும் என நினைத்து விட்டால் கடலுக்குள் கூட குதிப்பேன், என்றான் நரேன்.நிஜம் தான்…பிற்காலத்தில் வாழ்க்கைக் கடலில் இருந்து தப்பித்து ஆன்மிக ஞானம் பெற அவர் தென்குமரிக் கடலில் குதித்தும் விட்டாரே!தாய் புவனேஸ்வரிக்கு இந்த தகவல் சென்றது. அவள் கண்ணீர் வடித்தாள். சிவபெருமானே! நான் உன்னிடம் கேட்டது பிள்ளை வரம். ஆனால், நீ உன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி என் வயிற்றில் பிறக்கச் செய்து விட்டாயே! என்று சொல்வாள்.தாயும், சகோதரிகளுமாய் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இவனை அடக்க நாம் மூவர் மட்டும் போதாது. இன்னு இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று. அதன்படியே ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியானால், விவேகானந்தர் சின்னவயதில் சேஷ்டைகள் மட்டும தான் செய்திருக்கிறாரா? அந்த வீரக்குழந்தையிடம் நல்ல குணங்கள் எதுவுமே இல்லையா? என்று சிந்திக்கலாம். எந்தளவுக்கு நரேன் சேஷ்டை செய்வானோ, அதே அளவுக்கு நல்ல குணங்களையும் கொண்டிருந்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான். அதன் மதிப்பைப் பற்றி அவன் கவனிப்பதில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களுக்கு தன்னிடமுள்ள விளையாட்டு பொருட்களை வாரி வழங்கி விடுவான். சாதுவான மிருகங்கள் என்றால், அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்களைத் தடவிக் கொடுப்பான். அவை மா என கத்தும்போது, அவற்றின் தேவையை அறிந்து புல், வைக்கோல் போடுவான். தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். வீட்டுக்கு வரும் புறாக்களுக்கு இரை போடுவான். வீட்டில் வளர்த்த மயில் ஒன்றின் மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். அதை தன் நட்பு போலவே கருதினான். மேலும் வீட்டில் இருந்த குரங்கு, ஆடு, வெள்ளை பெருச்சாளி ஆகியவற்றுக்கு இலை, காய்கறிகள், உணவு கொடுத்து மகிழ்வான். தர்மசிந்தனை அவனிடம் அதிகம். துறவிகள் யாரையாவது கண்டுவிட்டால், அவர்களுக்கு உணவோ, உடையோ எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவான். ஒருமுறை வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பட்டு சால்வையை ஒரு துறவிக்கு கொடுத்து விட்டான். இதையறிந்த தாய், இவனை இப்படியே விட்டால், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் தானம் செய்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விடுவான் போல் இருக்கிறதே! என நினைத்தார்.
ஒருமுறை நான்கைந்து துறவிகள் வீட்டுப் பக்கமாக வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை நரேனிடம் சொன்னார்கள்.நரேன் அவற்றை எடுக்கப் போன சமயம் புவனேஸ்வரி கவனித்து விட்டார். அவனை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டாள். நரேன் விடாக்கண்டன் ஆயிற்றே! அந்தத் துறவிகளை தன்னை அடைத்து வைத்த அறை ஜன்னல் பக்கமாக வந்தான். அந்த அறையில் இருந்த சில ஆடைகளை ஜன்னல் வழியாக துறவிகளை நோக்கி வீசி எறிந்தான். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒன்றும் கொடுக்க வழியில்லை. சற்றே யோசித்த நரேன், தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து அவரிடம் கொடுத்து விட்டான். வயதும் கூடியது. பத்து வயதைக் கடந்து விட்டான். சேஷ்டை, தானம் என்ற மாறுபட்ட குணங்களின் வடிவமாகத் திகழ்ந்த நரேன், பாடம் படிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையாகி விடுவான். அம்மா கதை சொன்னால் போதும். உம் கொட்டிக்கொண்டு கவனமாகக் கேட்பான்.அம்மாவுக்கு ராமாயணமும், மகாபாரதமும் அத்துப்படி. ராமனின் கதையை உருக்கத்துடன் அவள் சொல்வதைக் கேட்பான் நரேன். சீதாதேவி பட்டபாடுகளை அவள் விவரித்த போது, நரேன் நெஞ்சம் நெகிழ்ந்து போவான்.அம்மா! அவளுக்கு ஏற்பட்ட சிரமம் யாருக்கும் வரக்கூடாது, என்பான். ராமபிரான் சீதையைப் பிரிந்து தவித்தது அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவரது வில்வித்தை அவனுக்குள் வீரத்தை ஊட்டியது.சீதாராமன் மீது ஏற்பட்ட பக்தியில், அவர்களது மண்சிலையை கடைக்கு போய் வாங்கி வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு மந்திரங்கள் தெரியும். அவன் ராமன் சிலைக்கு பூஜை செய்வான்.ஒருநாள் இருவரும் ராமன் சிலையுடன், இருவரும் மாயமாகி விட்டனர். அவனது நண்பன் வீட்டாரும், நரேனுடன் விளையாடப் போன தங்கள் மகனைக் காணவில்லையே என வந்து விட்டனர். வீட்டில், உறவினர்கள் வீடுகளில் தேடியலைந்தனர். எங்குமே அவர்கள் இல்லை. புவனேஸ்வரியும், சகோதரிகளும் தவித்தனர்.