இந்தியாவை விட்டு வெளியேறி உலக நாடுகளின் துணையுடன் இந்திய சுதந்திரத்தினைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு 13.06.1940ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். புதிய முறையில் இந்திய சுதந்திரத்தைப் பெற முயற்சிப்பதாகக் கூறினார். காந்தி வாழ்த்தினார்.
இந்நிலையில் கல்கத்தாவில் ஹால்வில் என்பவருடைய நினைவகத்தை அகற்றும் போராட்டத்தில் போஸின் புதிய கட்சி ஈடுபட்டது. அந்த விவகாரத்தில் போஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தாம் உண்ணாநோம்பு இருக்கப்போவதாக பிரிட்டிஷ் உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது.
தன்னைப் பற்றி பிரிட்டிஷ் அரசின் உளவுப் பரிவு சேகரித்து வைத்துள்ள ஆணவங்களைத் தன் நண்பர் சத்ய ரஞ்சன் பக்க்ஷியின் உதவியுடன் படித்துப் பார்த்தார்.
பின்னர் இந்தியாவை விட்டு ரகசியமாகத் தன் குடும்பத்தாருக்கும் தெரியாமல் வெளியேறத் திட்டமிட்டார். 17.01.1941ஆம் நாள் வெளியேறினார். முகம்மது ஜியாவுதீன் என்ற பெயரில் இந்தியாவைத் தாண்டினார்.
பின் இத்தாலி சென்றார். அவர் அங்கு சென்ற பின்னரே இந்தியர்களுக்கு அவர் இந்தியாவை விட்டு வெளியேறிய விஷயம் தெரியவந்தது. அங்கிருந்து ஓர்லாண்டோ மசோட்டா என்ற பெயரில் ரஷ்யா சென்றார்.
பின்னர் ஜெர்மனி சென்றார். தான் எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. காரணம் இரண்டாம் உலகப்போர் காரணமாக பல நாடுகள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையில் இருந்தன. அவற்றுள் போஸ் நம்பியிருந்த நான்கு நாடுகளும் ஒன்றையொன்று எதிர்த்தன. இந்நிலையில் யாரை நட்புக்கொண்டாலும் மற்ற மூவரையும் பகைத்துக்கொள்ளும் நிலை இருந்தது. போஸ் ஜெர்மனிக்குள் சுற்றிக்கொண்டிருந்தார்.
அந்நிய மண்ணில் சுதந்திரத் திருநாள்
1941இல் பெர்லினில் “சுதந்திர இந்திய மையம்“ ஒன்றைத் தொடக்கிவைத்தார். “ஆசாத் ஹிந்த்“ என்ற வானொலி சேவையை 1942ஆம் ஆண்டு தொடங்கினார். “ஆதாத் ஹிந்த்“ என்ற பெயரில் ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷாரைகிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் அப்பத்திரிகையை வெளியிட்டார். தேசியக்கொடியினை வடிவமைத்தார். தேசியப் பாடலாக ரவீந்தரநாத் தாகூர் இயற்றிய “ஜனகணமன“ பாடலை அறிவித்தார். “ஜெய்ஹிந்த்“ என்ற கோஷத்தைப் பிரபலப்படுத்தினார்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்கியது. உடனே, போஸ் ஜப்பானின் உதவியைக் கோரி அங்குப் புறப்படத் தயாரானார். இறுதியாக முசோலினியையும் ஹிட்லரையும் சந்தித்தார். பலனில்லை. இந்திய விடுதலைக்காகப் பிறநாடுகளின் உதவியை எதிர்பார்த்தார். ஜெர்மனியும் இத்தாலியும் கையைவிரித்துவிட்ட நிலையில் ஜப்பான் மட்டுமே உதவிக்கரம் நீட்டியது. ஆதலால், போஸ் ஜப்பான் நோக்கிப் புறப்படத் தயாரானார்.
தன் மனைவி, மகளை ஐரோப்பாவிலேயே விட்டுவிட்டு, ஜப்பான் நோக்கி ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் 09.02.1943ஆம் நாள் ஒரு கடினமான பயணத்தை மேற்கொண்டார்.
ஐ.என்.ஏ. செயல்பட்டது
பயணத்தின் இடையே தான் ஒரு பெரும் புரட்சிப்படையை உருவாக்கிப் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடத் திட்டம் தீட்டினார். ஜான்சி ராணி ரெஜிமென்ட் தொடங்குவது பற்றியும் திட்டமிட்டார். 13.05.1943ஆம் நாள் ஐப்பான் வந்தடைந்தார்.
அங்கு முன்பே மோகன்சிங் மற்றும் ஃப்யுஜிவாரா ஆகியோர் இணைந்து பிரிட்டிஷ்க்கு எதிராப் போராட ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அது செயல்படாமல் இருந்தது. அதனைப் போஸ் செயல்படவைத்தார். அப்படைக்கு ஆள்சேர்த்தார். ராஷ் பிகாரி போஸ் என்பவரை ஐ.என்.ஏ.வின் தலைவராக்கினார்.
ஐ.என்.ஏ. வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு, அவர்கள் முன் “நான் உங்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச்செல்வேன்“ என்று உறுதியளித்தார். கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஐ.என்.ஏ. வுக்கு நிதியும் ஆள்பலமும் சேர்த்தார்.
பர்மிய நாட்டின் தலைவர் பா-மாவ் போஸின் ஆற்றல் வாய்ந்த பேச்சு பற்றி, “போஸ் ஆழமாகப் பேசத் தொடங்கினால் இன்னொரு சக மனிதரிடம் பேசுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்; மாறாக, நம்மை விடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றாய்வாளர் பீட்டர் ஃபே, போஸ், “போகுமிடத்திலெல்லாம் அவர் பேச்சைக்கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்குச் சமர்ப்பித்தார்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தென்கோடியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் முனைப்பில் பல்லாயிரக்கணக்கான தீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர சிங்கப்பூர் சென்றனர். ஐ.என்.ஏ. படையினருக்கு உலகின் பல நாடுகளிலும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. “ஜான்சி ராணி“ என்ற பெண்கள் படையும் 12 – 18 வயதிற்குட்பட்ட பாலர் படையும் உருவானது. பெண்கள் படை தளபதியாக டாக்டர். லக்ஷ்மி செஹ்கல் சுவாமிநாதன் என்ற தமிழ்ப் பெண் தலைமை தாங்கினார்.