Home » பொது » கட்சியும் பதவியும்!!!
கட்சியும் பதவியும்!!!

கட்சியும் பதவியும்!!!

கட்சியும் பதவியும்

காந்தியின் போராட்டங்களில் சி.ஆர். தாஸ்க்கு நம்பிக்கையில்லை. சட்டசபைத்தேர்தலில் இந்தியர்கள் பங்கேற்கவேண்டும் என்று அவர் காந்திக்குக் கோரிக்கைவிடுத்தார். காந்தி அதனை ஏற்கவில்லை. காந்தி கோஷ்டி – தாஸ் கோஷ்டி என்ற இரு பிரிவாக இந்தியர்கள் பிரிந்தனர். நேரு இரண்டு கோஷ்டிக்கும் நடுவில் நின்றார்.

தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியினைத் தொடங்கினார். ஃபார்வர்ட் என்ற பிரிட்டிஷாரைகில நாளிதழினைத் தொடங்கினார். அப் பத்திரிகையின் ஆசிரியராகப் போஸை நியமித்தார். இச்சூழலில் மத்திய சட்டசபை மற்றும் மாகாண அசெம்ப்ளிக்கான தேர்தல் வந்தது. அதில் இரண்டிலும் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. கல்கத்தா கார்ப்பரேஷன் மேயராக 27 வயதான போஸ் நியமிக்கப்பட்டார்.

இத்தருணத்தில் போஸின் மனநிலை பற்றி மருதன் தன்னுடைய “சுபாஷ் மர்மங்களின் பரம பிதா“ என்ற நூலில், “போஸ்க்கு இது முதல் முக்கியப் பதவி. “இதோ இந்தியா! உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!“ என்று அவரது உள்ளங்கையைப் பிரித்து அதில் ஒரு தேசத்தை வைத்து அழுத்தி மூடியதைப் போல் அவர் சிலிர்த்துக் கொண்டார். ஒரு குழந்தையைப் போல உள்ளங்கையை விரித்து விரித்துப் பார்த்துப் பூரித்துப் போனார். அடிமனத்தில் தேங்கிக் கிடந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிடத் துடித்தார்.“ என்று எழுதியுள்ளார். ஆம் அத்தகைய மனநிலையைத்தான் போஸ் அடைந்தார்.

அதிரடி மாற்றங்கள்

பதவியேற்றதும் போஸ் தன் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துக்கொண்டார். கார்ப்பரேஷன் ஊழியர்களின் சீருடையைக் கதர்த்துணியாக மாற்றினார். பிரிட்டிஷாரின்  பெயர்களைக் கொண்ட பொதுக் கட்டடங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றித் தேசியப் பெயர்களை இட்டார். பிரிட்டிஷார் வழங்கிவந்த பாராட்டுப் பட்டங்களையும் சான்றிதழ்களையும் நிறுத்தினார். இன்னும் பல மாற்றங்களால் பிரிட்டிஷார் உஷாரானனர். பிறகென்ன கைதுதான்.

கைது – கலவரம் – விடுதலை

போஸ்மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பெற்று 25.10.1924ஆம் நாள் அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.போஸ்க்கு ஆதரவாகக் கல்கத்தாவில் கலவரம் ஏற்பட்டது. ஆதலால் பிரிட்டிஷார் போஸை மாண்டலே சிறைக்கு மாற்றினர். அங்குப் போஸ்க்குக் கடும் நோய் ஏற்பட்டது. இந்நிலையில் சி.ஆர். தாஸ் காலமானார். போஸ் நிர்க்கதிக்குள்ளானார். 1926ஆம் ஆண்டு போஸ் சிறையிலிருந்தபடியே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனாலும் பிரிட்டிஷார் போஸை விடுதலை செய்யவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் 15.05.1927ஆம் நாள் போஸ் விடுதலை செய்யப்பட்டார்.

கட்சியில் பிளவு

தாஸின் சுயராஜ்ஜிய இயக்கத்தை அவருக்குப்பின் அவரது மனைவி வசந்திதேவி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று போஸ் விரும்பினார். ஆனால், வசந்திதேவியின் விருப்பப்படி போஸே தலைமைதாங்கினார். அது போஸின் அளவிற்கு இயக்கத்தில் ஈடுபட்டுவந்த சென்குப்தாவுக்குப்  பிடிக்கவில்லை. ஆதலால் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டது.

ஃபார்வர்ட் பத்திரிகைக்கு எதிராகச் சென் குப்தா “அட்வான்ஸ்“ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். தனித்தனியே தேர்தலில் நின்றனர். காந்தி இருவருக்கும் இடையில் நின்று சமரசம் செய்தார். ஆதலால் சென் குப்தா தேர்தலிலிருந்து விலகினார். ஆனாலும் போஸ், ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அடுத்துவந்த வங்க மாகாணத் தேர்தலில் போஸ் நின்றார். வென்றார்.

அதிருப்தி அளித்த காந்தி

1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸின் மாநாடு கல்கத்தாவில் நடைபெற உள்ளதாக காந்தி அறிவித்தார். மாநாடு ஏற்பாடுகளைப் போஸ் கவனித்தார். மாநாட்டில் நேரு, “குடியேற்ற நாடு என்னும் அந்தஸ்தைப் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு வழங்கவேண்டும்“ என்று தீர்மானம் நிறைவேற்றினார். இது போஸ்க்குப் பிடிக்கவில்லை. அதனை உடனே மறுத்து, “சுயராஜ்யம் மட்டுமே தேவை“ எனப் பேசினார். காந்தி இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, “31.12.1929க்குள் இந்தியா குடியேற்ற நாடு அந்தஸ்தைக் கொடுக்கவேண்டும். இல்லையெனில் சுயராஜ்ஜத்தையே நாங்கள் கோருவோம்“ என்றார். இருவழியாக மாநாடு அதிருப்தியில் முடிவுற்றது.

காந்தியின் கொள்கைகளோடு ஒத்துப்போக முடியாத நேரு, போஸின் கொள்கையை ஏற்றார். இருவரும் இணைந்து “விடுதலைக் சங்கம்“ என்ற ஒன்றைத் தொடங்கினர். மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.

புறக்கணிக்கப்பட்டார்

நாட்கள் உருண்டன. காந்தி விதித்திருந்த கெடு முடிவுற்றது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு குடியேற்ற நாடு என்ற அந்தஸ்தை அளிக்கவில்லை. லாகூரிர் காங்கிரஸ் மாநாடு கூடியது. காந்தி, “சுயராஜ்யம் மட்டுமே வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்தார். வெறும் கோரிக்கைகள் வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததால் போஸ் காங்கிரஸை உடைக்கத் துணிந்தார்.

காந்தியின் காங்கிரஸ் மிதவாத காங்கிரஸ் என்றும் அதனால் ஒன்றும் வழி கிடைக்கப் போவதில்லை என்றும் உறுதியாக நம்பிய போஸ், “காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி“ என்ற ஒன்றினைத் தொடங்கி அதின் தலைவராக ஸ்ரீனிவாச அய்யங்காரை நியமித்தார். போஸின் காங்கிரஸ் தீவிரவாத காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.

காந்தி – போஸ் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லும் குழுவில் இருந்து போஸின் பெயரைக் காந்தி நீக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top