Home » பொது » அயர்லாந்தில் போஸ்!!!
அயர்லாந்தில் போஸ்!!!

அயர்லாந்தில் போஸ்!!!

அயர்லாந்து தந்த உற்சாகம்

இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த அயர்லாந்தில் டிவெலரா தலைமையில் புரட்சிவெடித்தது. அயர்லாந் சுதந்திரம் பெற்றது. இதனை அறிந்த போஸ் அயர்லாந்தின் இடத்தில் இந்தியாவை வைத்துக் கற்பனைசெய்து மகிழ்ந்தார்.

அங்கு நடந்த புரட்சியைப் போல் இந்தியாவிலும் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். செயல்பட்டார். கைதுசெய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். மக்கள் ஆதரவினைப் பெற்றார். கல்கத்தாவில் நகராட்சி மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறையிலிருக்கும் போஸின் பெயரும் முன்மொழியப்பட்டு, போஸ் வெற்றி பெற்றார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. நேரு முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். அச்சூழலில், 1930ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையானார். பிரிட்டிஷ் அரசின் தடையைமீறி மால்தா கிராமத்திற்குப் போஸ் சென்றார். அவரைப் பிரிட்டிஷார் கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர். அதன்பின் விடுதலையானார். 26.01.1931 ஆம் நாள் இந்திய விடுதலைநாளாகக் கொண்டாட போஸ் விரும்பினார். பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. போஸ் மீறினார். ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பெற்று போஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியின் போக்கு

05.03.1931ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. அது இந்தியர்களுக்கு எந்த நலனும் தரவில்லை. போஸ் மனம்வெம்பினார். இந்நிலையில் பகத்சிங்கும் அவரது நண்பர்கள் இருவரும் ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டனர். அதுகுறித்து காந்தி கவலைப்படவில்லை. இது போஸ்க்கு வெறுப்தைத் தந்தது.

அரசியல் கைதிகளைக் குற்றவாளிகள் போல் நடத்துவதைக் கண்டித்து சிறையில் ஜாதின்தாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 13.09.1929ஆம் நாள் உயிர்நீத்தார். இது குறித்தும் காந்தி கவலைப்படவில்லை. இது போஸக்கு காந்தியின் மீதிருந்த நம்பிக்கை நீங்கக் காரணமானது.

இரண்டாம் வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது. அதிலும் இந்தியர்க்குச் சாதகமாக ஏதும் நடைபெறவில்லை. ஆதலால் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். போஸ் கைது செய்யப்பட்டு சியோனி சிறையில் அடைக்கப்பட்டார்.  உடல்நிலை பாதிப்படைந்தது. பிரிட்டிஷ் அரசு அவரைச் சிறைமாற்றம் செய்தது. பின் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படாததால் அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன் 13.02.1933ஆம் நாள் ஐரோப்பாவுக்கு அனுப்பிவைத்தது.

வியன்நாவில் சிகிக்சை பெற்ற போஸ் உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று அந்நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆராய்ந்தார். இந்தியாவில் நடைபெற்று வரும்போராட்டங்கள் குறித்தும் அறிந்துகொண்டேயிருந்தார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டு மக்கள் சேவையில் இறங்கினார். இது இந்திய விடுதலைக்குப் பின்னடைவைத் தரும் என்று கூறி, இது காந்திக்கும் இந்தியருக்கும் ஏற்பட்ட தோல்வி என்றும் காங்கிரஸ் இனி காந்தியை நம்பிப் பயனில்லை என்றும் காங்கிரஸைப் புதுப்பிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் போஸ் அறிக்கை வெளியிட்டார்.

காதல் வந்தது

1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவிலுள்ள பாட்கஸ்டீன் என்னும் பகுதிக்குப் போஸ் சென்றார். அங்கு எமிலி செங்கல் என்பவரைச் சந்தித்தார். எமிலி செங்கல் 26.12.1910ஆம் நாள் பிறந்தவர். அவரைத் தன் செயலராகப் பணியமர்த்தினார். பின்னாளில் எமிலி – போஸ் காதலர்களாக மாறினர். 27.12.1937ஆம் ஆண்டு தம்பதியர்களாக மாறினர்.

போஸ் – எமிலி செங்கல் திருமணம் ரகசியமாகவே நடைபெற்றது. தொடர்ந்து பிற நாடுகளுக்குப் பயணமானார். இப்பயணங்களுக்கு நடுவில் போஸ் 1934ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை 162 கடிதங்களை எமிலிக்கு எழுதியுள்ளார். போஸ் – எமிலி செங்கல் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனிதா எனப் பெயரிட்டனர்.

காங்கிரஸ் தலைவர்

1938ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போஸ் இந்தியா வந்தார். 51ஆவது காங்கிரஸ் மகா சபை ஹரிபுராவில் நடைபெற இருந்தது. அங்கு வாசிப்பதற்கான உரையினை ஓர் இரவில் எழுதிமுடித்தார். அதில் தாம் அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றால் செய்யவுள்ள திட்டங்களின் முழுவடிவமும் இருந்தது. ஹரிபுரா கூட்டத்தில் உரையாற்றினார். அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றார்.

பின்னர் திட்டக்குழுவினைக் கூட்டினார். இந்து-முஸ்லீம் பிரச்சனைக்கள் சுதந்திர இந்தியாவில் ஏற்படக்கூடாது என்பது குறித்து ஜின்னா முதலிய தலைவர்களுடன் விவாதித்தார்.  பின்னர் ஆறுமாதங்கள் கழித்து தேசிய திட்ட மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓர் நாடு திறம்பட வளர்வதற்கு என்னென்ன தேவையோ அவற்றை அதற்குரிய நிபுணர்களைக் கொண்டு திட்டமிடுவதே அம் மாநாட்டின் நோக்கம். இத்தகைய மாநாடுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் நடத்தப்படுவதே வழக்கம். ஆனால், போஸ் சுதந்திரத்திற்கு முன்பே அதனை நடத்தினார். இதனை உலக நாடுகள் இந்தியா குறித்த போஸின் எதிர்காலவியல் சிந்தனையாகக் கருதின.

மீண்டும் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வந்தது. காந்தி தன் தரப்பில் பட்டாபி சீதாராமய்யரை வேட்பாளராக நிறுத்தினார். போஸ் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காந்தி தனித்துவிடப்பட்ட நிலைக்கு ஆளானார். போஸின் வெற்றிக்கொண்டாட்டங்கள் திருபுரி போன்ற சில இடங்களில் வரவேற்பைப் பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கொண்டு சுதந்திரப்போரை நடத்தமுடியாது என்று அறிந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால்தான் தீவிரமான போரில் ஈடுபடமுடியும் என்று கருதி, காங்கிரஸ் காட்சியின் தலைமைப் பதவியை ராஜினாமாசெய்தார்.

“ஃபார்வார்ட் பிளாக்“ என்ற புதிய கட்சியினைத் தொடங்கினார். இதில் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர் பலரை இணைத்தார்.  ஆனால், வகுப்புவாதக் கட்சிகள் பல தோன்றி மக்களைப் பாகப்பிரிவினை செய்துவந்தன. போஸ் மனம்தளர்ந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top