கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார்.
மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,”ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !” என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அதில் நான்காம் இடம் பெற்ற போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லை என்பது ஒரு புறம் இன்னொரு புறம் ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசபந்து சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அவரின் முதன்மை சீடரானார். கல்கத்தாவின் மேயராக சித்தரஞ்சன் தாஸ் ஆனதும் போஸ் அதன் தலைமை நிர்வாக அலுவலராக கலக்கி எடுத்தார்.
சித்தரஞ்சன் தாஸின் மறைவுக்கு பின்னர் சுயராஜ்ய கட்சி வங்கத்தில் யுகந்தார் மற்றும் அனுஷிலன் என்கிற இரண்டு புரட்சிகர அமைப்புகளாக பிரிந்து கொண்டன. அதில் நேதாஜி யுகந்தார் அமைப்பில் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தார். டே என்கிற ஆங்கிலேய அதிகாரி சார்லஸ் டேகர்ட் எனும் கொடுமைக்கார காவல்துறை கமிஷனருக்கு பதிலாக தவறுதலாக கொல்லப்பட போஸ் முதலிய பலர் கைது செய்யப்பட்டார்கள். அவரை நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. உடல்நிலை சரியில்லாமல் போகவே பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் போஸ்.
சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு போஸ் மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இளைஞர்களின் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.
ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !” என்று குறித்தார்.
1938 ஆம் வருடம் போஸ் காங்கிரசின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ” எல்லாமும் வேண்டும் ; இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை !” என்று பதவியேற்றதும் முழக்கமிட்டார் அவர். அவருக்கு நேதாஜி என்கிற பட்டத்தை சாந்தி நிகேதனில் விழா எடுத்து தாகூர் வழங்கினார். நேதாஜி என்றால் வணங்கத்தகுந்த தலைவர் என்று அர்த்தம். அடுத்த வருடம் சிக்கல்கள் அவருக்கு காத்திருந்தன.
காந்தி நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தினார். போஸ் தேர்தலில் தமிழக காங்கிரசாரின் பெருத்த ஆதரவோடு 1,580-1,377 என்கிற விகிதத்தில் வென்றார் ! “சீதாராமையாவின் தோல்வி அவருடையது என்பதை விட என்னுடையது என்பதே சரியாக இருக்கும் !” என்று காந்தி குறித்தார். போஸ் பூரண விடுதலையை நோக்கி நாம் நகர் வேண்டும் ,இன்னமும் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது தேர்தலில் நின்று ஆட்சிக்கு வருவதில் பிற தலைவர்கள் முனைப்பாக இருப்பதை பார்த்து அவர்களை எல்லாம் வலதுசாரிகள் என்று போஸ் குறித்தார். “நீங்கள் ஒரு இடதுசாரி தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்ப மறுக்கிறீர்கள் ! உங்களுக்கும் அரசுக்கும் இடையேயான சமரசத்தில் நான் முள் போல இருப்பேன் என்று கருதுகிறீர்கள் !” என்றார். போஸின் நெருங்கிய நண்பரான நேரு கூட இப்படி பொதுவாக வலதுசாரிகள் என்று குறித்ததற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து கடிதம் எழுதினார்.
ஜி.பி.பந்த் பழைய செயற்குழுவின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். அது பெருத்த ஆதரவோடு வெற்றி பெற்றது. ஆனால்,காந்தி போஸ் விரும்புகிற செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றார். போஸ் ,”காந்தியார் போராட்டத்துக்கு தலைமை தாங்கட்டும் ! ஆனால்,இடதுசாரிகள் மற்றும் நான் வகுத்திருக்கும் சித்தாந்தம் மற்றும் வழிமுறைகளை அவர் கைக்கொள்ளட்டும் !” என கோரினார்.
காந்தி போஸ் தலைமையேற்று அவரின் வழிமுறையில் போராட்டத்தை நடத்தட்டும் என்று அறிவிக்க அதற்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவில்லாத சூழல் உண்டானது. போஸ் வெறுத்துப்போய் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை துவங்கினார். அனைத்திந்திய போராட்டதத்துக்கு அனைவரும் வாருங்கள் என்று அவர் குரல் கொடுக்க கட்சியை விட்டு அவரை நீக்கினார்கள்.
போஸ் மனம் நொந்து போனார். வேறு வழியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரை அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது. சத்தமேயில்லாமல் தப்பிப்போனார். அவரின் வீட்டை அரசு ஏலம் விட்டதும் அதை யாருமே ஏலம் எடுக்க முன்வராததும் தனி அத்தியாயம். பெஷாவர் நகருக்குள் நுழைந்து அங்கிருந்து ஆப்கானுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் வழியாக இத்தாலி போகலாம் என்று திட்டமிட்டு இருந்த போஸ் ஹிட்லர் அழைக்கிறார் என்பதை அறிந்து அவரை சந்திக்க மாஸ்கோவில் இருந்து ஜெர்மனி போய் சேர்ந்தார். எழுபத்தி ஒரு நாட்களில் அவர் செய்த இந்த சாகசத்தை ‘Great Escape ‘ என்று ஆச்சரியத்தோடு பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஹிட்லர் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆள தகுதியற்றவர்கள் என்றார். அதற்கு போஸ் ஆட்சேபத்தை பதிவு செய்தார். ஹிட்லர் போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் உதவுவதாக உத்தரவாதம் தந்தார், ஆனால்,எந்த உதவியும் கிட்டாமல் போனது.
ஜப்பான் போனார் நேதாஜி. ராஷ் பிஹாரி போஸ் உருவாக்கி செயலற்று போயிருந்த இந்திய தேசிய ராணுவத்துக்கு உயிர் தந்தார். போரில் பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை கொண்டு படையை கட்டமைத்தார். பெண்களையும் போர்ப்படையில் இணைத்துக்கொண்டார்.
“ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் “என்று முழங்கினார். அக்டோபர் இருபத்தி ஒன்றில் சுதந்திர இந்தியாவுக்கான அறிவிப்பை சிங்கப்பூரில் வெளியிட்டார் போஸ். அங்கே இருந்து வானொலியில் ,”தேசப்பிதா காந்தியடிகளிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் கோருகிறேன் !” என்று பண்போடு சொன்னார். காந்தி போஸ் அவர்களை ,”தேசபக்தர்களுள் இளவரசர் !” என்று பூரித்தார். டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்திய தேசிய அரசின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்டார். தேசியக்கொடியை ஏற்றினார். அவரை ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தாமான் மற்றும் நிகோபார் தீவுகள் இவர் பொறுப்பில் விடப்பட்டதும் அவற்றுக்கு ‘ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் ‘ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயரிட்டார்.
பர்மாவில் இருந்து மொய்ராங் என்கிற மணிப்பூரின் பகுதியை இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றியது. நாகலாந்து அடுத்து வீழ்ந்தது. தென்மேற்கு பருவ மழை போரின் போக்கை திருப்பியது. தகவல் துண்டிப்பு,ஒழுங்காக ஆயுதங்கள் வந்து சேராமை எல்லாம் தோல்வியை நோக்கி படையை தள்ளியது. போஸ் ஜப்பானின் உதவியோடு மீண்டு வந்து போராடலாம் என்று முடிவு செய்து கொண்டு சிங்கப்பூர் வரை சென்று அங்கிருந்து சைகோன் போனார். சைகோனில் இருந்து மன்ச்சூரியா நோக்கி இருவர் மட்டும் போகக்கூடிய குண்டு வீச்சு விமானத்தில் தோழர் , தோழர் ஹபீப்புடன் ஏறினார். தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கமிஷன்கள் வந்தும் அவரின் மரணம் குறித்த மர்மம் அப்படியே இருக்கிறது.
நேதாஜிக்கு சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உண்டு என்பது ஒரு பரவலான வாதம். அவரை ஹிட்லர் இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரி என்று அழைத்த பொழுது அதை கடுமையாக ஆட்சேபித்தார் அவர். ஆங் சானின் விடுதலைக்காக போராடிய புரட்சி படைகளை ஒடுக்க ஜப்பான் உதவி கேட்ட பொழுது கூலிப்படையாக செயல்படாது இந்திய தேசிய ராணுவம் என்று மறுத்த போஸ் ஜப்பானின் பிரதமர் இந்தியாவின் விடுதலைக்கு பின்னர் போஸ் எல்லாமுமாக இருப்பார் என்கிற வாதத்தையும் நிராகரித்தார்.
“ஒரு தனி மனிதன் ஒரு சிந்தனைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்யலாம். ஆனால்,அவன் இறப்புக்கு பின்னர் அந்த சிந்தனை பல்லாயிரம் உயிர்களில் மீண்டும் மறுபிறப்பெடுக்கும். இப்படித்தான் பரிணாமத்தின் சக்கரம் நகர்கிறது ; ஒரு தேசத்தின் சிந்தனையும்,கனவுகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன !” என்று முழங்கிய அசல் வீரர் போஸ் இந்தியர்களிடையே வீர எழுச்சியையும்,தன்னம்பிக்கையும் விதைத்து அடிமையின் உடம்பில் வலிமைகள் ஏற்றினார் அவர் என்றால் அது மிகையில்லை.