இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள்.
முகம்மது ஜியாவுதீன், ஓர்லாண்டோ மசோட்டா, கிளாசி மாலங், பகவான்ஜி, கும்நாமி பாபா, சவுல்மரி, இச்சிரோ உக்குடா போன்ற பல பெயர்களில் உலகின் பல பகுதிகளில் நேதாஜி உலவியிருக்கிறார். உலகின் மிகச்சிறந்த போராளி செய்யவேண்டிய அனைத்து செயல்களையும் தவறாமல் செய்தவர். அப் போராளி எதிர்கொள்ளவேண்டிய அனைத்து சிக்கல்களையும் துணிவுடன் எதிர்கொண்டவர். அப் போராளி பெறவேண்டிய பெரும் புகழினையும் பெற்றவர்.
தனிமையில் இனிமை
ஒடிசாவின், கட்டாக்கில், ஜானகிநாத் போஸ் – பிரபாவதிதேவி என்ற ஓர் இந்து வங்காளித் தம்பதியருக்கு 15 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்பதாவது குழந்தையாக 23.01.1897ஆம் நாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். போஸ்க்கு எட்டு சகோதர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் இருந்தனர். போஸின் தந்தை பிரபலமான வழக்கறிஞர். நிறைய பணம் புலங்கியது. பெரிய வீடு. நிறைய உறவு. ஆனால், போஸ் தனிமையை விரும்பினார்.
ஆரம்பக்கல்வி பயில்வதற்காக ஐந்து வயதில் போஸை ப்ராட்டஸ்டன்ட் ஐரோப்பிய பள்ளியில் சேர்த்தனர். பிரிட்டிஷாரைகிலப் பாடம் அவருக்கு ஒத்துவரவில்லை. குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் போதனை அவரைக் கவர்ந்தது. ஆன்மிகத்தில் மனம் ஈடுபட்டது. பள்ளியில் அவருக்கு பைபிள் போதிக்கப்பட்டது. கிறித்துவத்திற்கும் இந்துத்துவத்திற்கும் இடையில் ஊசலாடினார்.
1913ஆம் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வியை முடித்து அதில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்றார். தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். தனிமை அவருக்கு இன்பத்தையும் நிம்மதியையும் அளித்த்து. காசி, ஹரித்துவார், பிருந்தாவனம் எனப் பல ஆன்மிகத்தளங்களுக்குச் சென்றார். சந்நியாசிகளிடமும் மத, சாதி காழ்ப்புணர்வுகள் இருப்பதைக் கண்டு ஆன்மிகத்தில் வெறுப்படைந்தார். வீடுதிரும்பினார்.
முதல் எதிர்ப்பு
1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்தார். அங்குப் பணியாற்றிய சி.எப். ஓட்டன் என்ற பிரிட்டிஷ் பேராசிரியர் இந்தியர்களை இழிவாகப் பேசியதும் நடத்தியதும் போஸால் சகிக்கமுடியவில்லை. மாணவர்களைத் திரட்டி ஓட்டனைத் தாக்கினார். இந்தியர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போஸ் நடத்திய முதல் போர் இது.
ஓட்டன் தாக்குதல் தொடர்பாக போஸ் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் 1917ஆம் ஆண்டு சேர்ந்தார். 1919ஆம் ஆண்டு பி.ஏ. படிப்பினை முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்.
பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 13.04.1919ஆம் நாள் நடத்தப்பெற்ற படுகொலை போஸைக் கலங்கச்செய்தது. பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு அவருக்குள் மிகுந்தது. ஆனால், காலம் வேறுவிதமாகக் காய்களை நகர்த்தியது. போஸ் வெறுக்கும் பிரிட்டனுக்கே அவரை அனுப்பிக் கல்வி கற்க வைத்தது.
சுதந்திர தாகம்
தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் சென்றார். 1920 ஐ.சி.எஸ். தேர்வினை எழுதினார். நான்காவது மாணவராகத் தேர்ச்சிபெற்றர். அங்கு வந்திருந்த சரோஜினி தேவி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவ் உரை போஸைக் கவர்ந்தது. அது புதிய தெம்பினை அவருக்கு அளித்தது. இந்தியாவில் காந்தி புதிய வீச்சுடன் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை இந்தியர்கள் மத்தியில் தூண்டிக்கொண்டிருந்தார். இந்தியா சென்று விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும் என்று போஸ் விரும்பினார்.
1921ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய ஐ.சி.எஸ். பதவியை ராஜனாமா செய்தார். 26.07.1921 ஆம் நாள் மும்பை வந்தார். காந்தியைச் சந்தித்தார். அவர் கல்கத்தாவில் உள்ள சி. ஆர். தாஸைச் சந்திக்கும்படிக் கூறினார். சென்றார். சந்தித்தார். சி.ஆர். தாஸ், போஸின் துணிவினையும் பலத்தினையும் புரிந்துகொண்டார். தன் வலது கரமாகப் போஸை வைத்துக்கொண்டார்.
சிறிய வயதில் பெரிய பதவி
கல்கத்தாவில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் தலைவராக 25 வயதான போஸ் நியமிக்கப்பட்டார். மாணர்கர்களுக்குப் பாடம் நடத்தும் பாங்கில் சுதந்திர உணர்வை ஊட்டினார்.
முதல் உலகப்போரில் பிரிட்டன் சார்பாக இந்திய வீரர்கள் கலந்துகொண்டமையைப் பாராட்டும் வகையில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவின் வைசிராயராக லார்ட் ரீடிங் இருந்தார். அவர் இளவரசருக்கு இந்தியாவைச் சுற்றிக்காண்பிக்க எண்ணினார். இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பினை வலுவாகக் காட்டவேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிடப்பட்டது.
இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடையடைப்பு, வீட்டிற்குள் இருத்தல் என்ற முறையில் இளவரசருக்கு ஓர் இந்தியரும் தன் முகத்தைக்காட்டக்கூடாது என்று உறுதிகொண்டனர். இதுகுறித்து இந்தியாவின் பல இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
கல்கத்தாவில் பிரச்சாரம் செய்யும் குழுவிற்குத் தலைவராகப் போஸை சி.ஆர். தாஸ் நியமித்தார். கல்கத்தாவைப் போஸ் தன் கண்ட்ரோலுக்குக் கொண்டுவந்தார். 17.11.1921இல் இளவரசர் பம்பாய் வந்தார். அந்த இடம் மனிதர்கள் வாழா இடம்போலக் காட்சியளித்தது. கல்கத்தா வந்தார். அங்கு மயான அமைதி நிலவியது. திட்டமிட்டபடியே போராட்டம் சக்சஸ். கல்கத்தாவில் மட்டும் டபுள் சக்சஸ்.
சி.ஆர். தாஸ் போஸைப் பெரிதும் பாராட்டினார். இதற்குக் காரணம் போஸ்தான் என்பதனை அறிந்த பிரிட்டிஷாருக்கு வியர்த்தது. காரணம், பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை போஸ் பற்றி ஐந்து கருத்துகள் இருந்தன. ஓர் அகிம்சை வாதி, காந்தியின் நண்பர், ஆபத்தில்லாதவர், ஒரு திவிரவாதி, சிக்கலான ஆள். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. பிரிட்டிஷார் கூட்டிக் கழித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தனர். போஸைக் கைதுசெய்து ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்தனர். அதன்பின் போஸ் பிரிட்டிஷாரின் கண்காணிப்புக்கு ஆளானார்.