அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ஆண்டுகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்விதம் அவர் பயணம் செய்தபோது, ஒருமுறை அவருடன் சுவாமி அகண்டானந்தரும் இருந்தார். சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவர்.
இருவரும் இமயமலையில் இருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இருவரும் உணவு சாப்பிட்டு பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. அல்மோராவை அடைவதற்கு முன்பு, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முஸ்லிம்களின் இடுகாடு இருந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, பசி தாகம் காரணமாக விவேகானந்தருக்கு மிகுந்த களைப்பும் சோர்வும் ஏற்பட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டார். எனவே அவரை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் எங்காவது உணவோ, தண்ணீரோ கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு அகண்டானந்தர் சென்றார். அந்த இடுகாட்டில் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லிம் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் அன்றைய தினம் உணவு என்று சொல்வதற்கு, ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் இருந்தது. விவேகானந்தரின் மோசமான உடல் நிலை ஜுல்பிகர் அலிக்குப் புரிந்தது. எனவே அவர் ஓடிச் சென்று, தம்மிடமிருந்த வெள்ளரிக்காயை விவேகானந்தருக்குக் கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த விவேகானந்தர், அதைத் தமது வாயில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதற்கு ஜுல்பிகர் அலி, சுவாமிஜி, நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே! என்றார். அதனால் என்ன! நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் விவேகானந்தர். முஸ்லிம் வெள்ளரிக்காயை விவேகானந்தர் வாயில் வைத்து சாப்பிடும்படி செய்தார். அதனால் விவேகானந்தரின் களைப்பு ஒரு சிறிது நீங்கியது. இதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர், அந்த முஸ்லிம் உண்மையிலேயே அப்போது என் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் நான் களைப்படைந்ததில்லை என்று கூறினார். பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.