Home » விவேகானந்தர் » வலிமையே வாழ்வு!!! சுவாமி விவேகானந்தர்
வலிமையே வாழ்வு!!! சுவாமி விவேகானந்தர்

வலிமையே வாழ்வு!!! சுவாமி விவேகானந்தர்

மேலைநாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியான அலெக்சாண்டர் சிந்து நதிக்கரையில் உள்ள காடு ஒன்றில் ஒரு வயோதிபத் துறவியைக் கண்டு அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்தத் துறவி ஒருவேளை எந்த உடையுமின்றி, நிர்வாணமாக ஒரு கல்லின் மீது அமர்ந்திருக்கிறார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்துபோன சக்கரவர்த்தி அவரைத் தமது கிரீஸ் நாட்டிற்கு வருமாறு தூண்டுகிறார். அதற்காகப் பொன்னும், பொருளும் தருவதாகவும் ஆசை காட்டுகிறார். ஆனால் அந்த வயதான சாதுவோ அலெக்சாண்டரின் பொற்காசுகளைப் பார்த்தும், ஆசை வார்த்தைகளைக் கேட்டும் மென்மையாக சிரிக்கிறார், அவருடன் போக மறுத்து விடுகிறார். சக்கரவர்த்தியோ, தான் அரசன் என்ற தோரணையில் நிமிர்ந்து நின்று, என்ன, நீ வராவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என்று பயமுறுத்துகிறார். அவ்வளவுதான், அந்தத் துறவி கொல்லென்று சிரித்தபடியே, மன்னா, நீ உன் வாழ்நாளில் இது போன்றதொரு பொய்யைக் கூறியிருக்கவே முடியாது. யார் என்னைக் கொல்லமுடியும்? ஜடவுலகை ஆளும் சக்கரவர்த்தியே, நீயா என்னைக் கொல்லப் போகிறாய்? அது ஒரு நாளும் நடக்காது. ஏனெனில் நான் பிறப்பும், இறப்பும் அற்ற ஆன்மா. நான் பிறந்ததும் இல்லை, இறக்கப் போவதும் இல்லை. நான் எல்லையற்றவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன். அப்படிப்பட்ட என்னைக் கொல்கிறேன் என்று நீ சொல்வது சிறுபிள்ளைத்தனமாக அல்லவா உள்ளது!”

இந்த சம்பவத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் நம் நாட்டு மக்களைத் தன் வீரமொழிகளால் தட்டி எழுப்புகிறார்: ” இதுவல்லவா வலிமை! இதுவல்லாவா வலிமை! நண்பர்களே! என் நாட்டு மக்களே! வலிமை, வலிமை, நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறைவழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை, வலிமைதான். அதை யார் நமக்குத் தருவார்கள்? நம்மை பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான விஷ்யங்கள் உள்ளன, கதைகள் வேண்டிய அளவு உள்ளன… அருமை நண்பர்களே! உங்களுள் ஒருவனாகிய நான், உங்களுடனேயே வாழ்ந்து இறப்பவன் என்ற முறையில் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நாம் வேண்டுவது வலிமை, வலிமையே. ஒவ்வொன்றிலும் வலிமை வேண்டும். வலிமை தரும் பெரும் சுரங்கங்களாக உபநிடதங்கள் உள்ளன….நான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட ஒரு பெரிய பாடம், வலிமை, வலிமை. ஓ மனிதா, பலவீனனாக இருக்காதே என்பதுதான். மனித பலவீனங்களே இல்லையா என மனிதன் கேட்கிறான். உண்டு என பதிலளிக்கின்றன உபநிடதங்கள். ஆனால் அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா? அழுக்கால் அழுக்கைப் போக்க முடியுமா? பாவத்தால் பாவம் தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று கேட்கின்றன. வலிமை, ஓ மனிதா, வலிமையுடன் எழுந்து நில்; வலிமை பெறு என்று அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே அபீ:, பயமின்மை என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் காணப்படுகிறது. உலகிலேயே இந்த ஒரு சாஸ்திரம்தான் மீட்சியைப் பற்றிப் பேசாமல், சுதந்திரம் பற்றி பேசுகிறது. இயற்கையின் தளைகளிலிருந்து சுதந்திரம் பெறுங்கள், பலவீனத்திலிருந்து விடுதலை பெறுங்கள்..சுதந்திரம் – பௌதிக சுதந்திரம், மன சுதந்திரம், ஆன்ம சுதந்திரம் – இவையே உபநிடதங்களின் மூல மந்திரங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top