குருகுலம் ஒன்றில் பாடம் முடிந்ததும் பிரிவு உபசார விழா நடத்தப்படும்.அப்போது, குருவைப் பற்றி சீடர்கள் புகழ்ந்து பேசுவதும், சிறந்த சீடனை குரு பாராட்டி பேசுவதும் வழக்கம். ஒருமுறை விழா நடந்த போது, பெரும்பலான சீடர்கள், குரு தங்களுக்கு போதித்ததைப் பற்றி வானாளவ புகழ்ந்துபேசினார். ஒரே ஒரு சீடன் மட்டும், எல்லாம் கடவுளால் சிறப்பாக நடந்து முடிந்தது, என்று பேசினான்.அவனைக் கண்டு மற்றசீடர்களுக்கு கோபம்.குருவே! நீங்கள் கஷ்டப்பட்டு பாடம் எடுக்க, இவனோகடவுளால் தான் எல்லாம் நடந்தது என்கிறான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று, குருவுக்கு அடுத்து தான் தெய்வம் என்று வரிசைக்கிரமமே கூறுகிறது. ஆனால், இவன் உங்களை மட்டம் தட்டுகிறான் பாருங்கள், என்று புகார் செய்தனர். குரு எழுந்தார்.இந்த ஆண்டின் சிறந்த சீடன் அவனே! என்று வாழ்த்தினார்.சீடர்கள் அதிர்ந்தனர்.இவருக்கும் ஏதும் ஆகி விட்டதோ என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.குரு பேசினார்.சீடர்களே! நான் இத்தனை நாளும் நடத்திய பாடத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்று தான் நானும் உங்களுக்கு கற்றுக்கொடுத்தேன். என்னை வழி நடத்தியவரும் அவரே. அதையே அந்த சீடன் அவ்வாறு சொன்னான். கருவியான என்னை விட கரைசேர்ப்பவனான கடவுளை அவன் நன்றாக புரிந்துவைத்திருக்கிறான். அதனால், அவனே சிறந்த சீடன், என்றார்.புரிந்து கொண்ட சீடர்கள் தலை குனிந்தனர்.