Home » பொது » சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா
சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா

சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா

முள்ளங்கி தழையும்… : முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது முதல் பித்தநீர்ப்பை கல் வரை நீக்குகிறது. முள்ளங்கி, இந்திய பயிர் அல்ல. மேற்காசியா, கிழக்கு ஐரோப்பா, சீனாவில் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. எகிப்தில் 4,500 ஆண்டுக்கு முன் திட உணவாக பயன்பட்டுள்ளது. முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன. வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை. இதை உணவாக சமைத்து சாப்பிடலாம்; அப்படியே கேரட் போல சாப்பிடலாம்; ஜூஸ் செய்து குடிக்கலாம். எதிலும் சத்துக்கள் உள்ளன. முள்ளங்கியில், கால்சியம், வைட்டமின் சி, சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி தழையை பலர் உணவாக சாப்பிடுவதில்லை. அதில்தான் சத்துக்கள் , முள்ளங்கி தண்டை விட அதிகமாக உள்ளன. ஜூஸ், சூப்பில், முள்ளங்கி துண்டுகளுடன் இதை பயன்படுத்தி சாப்பிடலாம்; நன்றாக சுவையாக இருக்கும்.
ஒரு நாளுக்கு ஒரு முட்டை : கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டை விட, அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது. ஒரு வேறுபாடு, காய்கறி உணவை விட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக்கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல். ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம். கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது. கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!
கிரீன் டீ சாப்பிடறீங்களா? : காலம் காலமாக காபி, டீ சாப்பிட்டு வந்தால் அதை மாற்றவே கூடாது; தேவையும் இல்லை. ஆனால், உடல் பாதிப்பு என்று வந்து விட்டால், டாக்டர் சொல்படி தான் பின்பற்ற வேண்டும். அதுபோல, லைப்ஸ்டைல் மாறியுள்ள இளைய தலைமுறையினருக்கு எவ்வளவோ சத்தில்லா பாக்கெட் உணவுகள் விற்பனையில் இருந்தாலும், சத்தான சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் கிரீன் டீ. இப்போது கிரீன் டீ, பிளாக் டீ சாப்பிடுவது பேஷன் என்பது போய், சத்தான உணவாகி விட்டது. டாக்டர்களே இதை பரிந்துரைக்கின்றனர். மூளை சுறுசுறுப்பு, மறதி நோய் வராமல் இருப்பதற்கு இது மிக பயனுள்ளது. ஜப்பானியர் இதைத்தான் பல ஆண்டாக பயன்படுத்துகின்றனர். அதனால் தான், சுறுசுறுப்பாகவும், அல்சீமர் நோய் வராமலும் உள்ளனர் என்பது நிபுணர்கள் கருத்து. கிரீன் டீக்கு எங்கும் அலைய வேண்டாம்; கடைகளில் விற்கிறது; தரமான பிராண்ட் வாங்கி பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால், மூளை சூப்பர் தான்.
ஏதாவது ஒரு ஜூஸ்? : தினமும் தண்ணீர், ஜூஸ், சூப் குடிப்பது நல்லது. முன்பெல்லாம், காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப்போகும் வரை உணவு முறை சீராக இருக்கும். இப்போது அப்படியல்ல; தலைகீழாய் மாறிவிட்டது; சொல்வதற்கு பெரியவர்களும் இல்லை. இருந்தாலும், கேட்பதற்கு இளைய தலைமுறையினருக்கு விருப்பமில்லை. இதனால் பல நல்ல விஷயங்கள், மருத்துவ, கலாசார விஷயங்களில் இளைய தலைமுறையினர் தவறாக செல்ல வாய்ப்பு அதிகம். சத்துக்களை தருவதில் முக்கிய பங்கு, குடிதண்ணீர், பழங்களின் ஜூஸ், சூப்களில் உள்ளது. இந்த கோடையில், தர்பூசணி, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பல பழங்களின் ஜூஸ் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இவற்றில் உள்ள “ஆன்டி ஆக்சிடென்ட்’ ரசாயன சத்து, உடலுக்கு மிக முக்கியம். எந்த கோளாறும் அண்டாமல் செய்யும். ஒரு நாளைக்கு இவை எல்லாம் சேர்த்து 8 – 10 டம்ளர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top