பழுதடைந்த ஏரை சரி செய்ய வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தச்சரை அணுகினான் கண்ணப்பன். தச்சரோ கண்ணப்பனிடம் ஏரை சரி செய்ய நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார்.
உடனே கண்ணப்பன், “”தச்சரே! நானோ ஏழை விவசாயி, கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த முறை விவசாயத்தில் கிடைத்த பணத்தையெல்லாம் கொடுத்து கடனை அடைத்து விட்டேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வேண்டுமென்றால் உமக்கு நெல் மணிகளைத் தருகிறேன். நீர் அதனை வாங்கிக் கொண்டு எனது ஏரை சரி செய்து கொடுங்கள்,” என்று பணிவோடு கேட்டான்.
“”கண்ணப்பா! நெல் மணிகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? உன் ஏரை சரி செய்ய வேண்டுமானால் நூறு ரூபாய் பணம் கொடு. இல்லையென்றால் ஆளைவிடு!” என்றார் தச்சர்.
அந்த கிராமத்தில் அந்த தச்சரை விட்டால், வேறு தச்சர் இல்லை என்பது கண்ணப்பனுக்கு தெரியும். எப்படியாவது நூறு ரூபாய் கொடுத்து தன் ஏரினை சரி செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தச்சரை நோக்கினான்.
“”ஐயா தச்சரே! நீங்கள் முதலில் ஏரை சரி செய்யுங்கள். நான் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன்!” என்று கூறியபடி சென்றான் கண்ணப்பன். அவன் எது சொன்னாலும் அதனை உடனே செய்து விடுவான் என்று தச்சருக்குத் தெரியும். எனவே, ஏரை சரி செய்யும் வேலையில் இறங்கினார்.
அங்கிருந்து சென்ற கண்ணப்பன் அந்த ஊர் பண்ணையார் வீட்டிற்குச் சென்றான்.
“”வா கண்ணப்பா! எதற்காக வந்திருக்கிறாய்?” என்று அன்போடு கேட்டார் பண்ணையார்.
“”ஐயா! என்னுடைய ஏரை சரி செய்ய வேண்டும். அதற்கு நூறு ரூபாய் பணம் தேவைப்படுகிறது. உங்களிடம் இருந்து பணம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். இரண்டொரு நாட்களில் நான் உங்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவேன்!” என்றான் கண்ணப்பன்.
“”கண்ணப்பா! நான் உனக்குப் பணம் கடனாகத் தர வேண்டுமானால், என் வீட்டிலிருந்து என்னுடைய அரிசி ஆலைக்கு, ஐம்பது மூட்டை நெல் சுமந்து வரவேண்டும். அப்போதும் நான் உனக்கு கடனாகத்தான் பணம் கொடுப்பேன். அந்தப் பணத்தை நீ எனக்கு திருப்பிக் கொடுத்திட வேண்டும்,” என்றார் பண்ணையார்.
“பண்ணையாரின் வீட்டிலிருந்து அவரின் அரிசி ஆலைக்குச் செல்ல ஒரு கி.மீ., தூரம் இருக்கும். அதுவரையிலும் ஐம்பது மூட்டைகளை சுமந்து செல்ல இயலுமா?’ என்று யோசித்தான் கண்ணப்பன்.
“எப்படியும் நமக்கு நூறு ரூபாய் தேவைப் படுகிறதே… இந்த ஊரில் வேறு யார் நமக்கு நூறு ரூபாய் கடனாகக் கொடுப்பர்? அதனால், நாம் மூட்டைகளைச் சுமந்து சென்று பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். பின்னர் நம்மிடம் இருக்கிற நெல்லைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று நூறு ரூபாய் சேர்த்து பண்ணையாருக்கு கொடுத்திட வேண்டியதுதான்’ என்று மனதில் எண்ணிக் கொண்டவனாய் நெல் மூட்டைகளை சுமந்து செல்ல முடிவு செய்தான் கண்ணப்பன்.
உடனே அவன் பண்ணையாரை நோக்கினான். “”ஐயா! நான் மூட்டைகளைத் தூக்கத் தயாராக இருக்கிறேன். மூட்டை எந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மட்டும் என்னிடம் தெரியப்படுத்துங்கள்!” என்றான்.
பண்ணையாரும் தன் வேலையாளை அழைத்து, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் செல்லுமாறு கூறினார். கண்ணப்பனும் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.
அங்கிருந்த மூட்டைகள் ஒவ்வொன்றாக எடுத்து அரிசி ஆலைக்குள் கொண்டு சேர்த்தான். எப்படியாவது பண்ணையாரிடம் இருந்து நூறு ரூபாயினை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், மிகவும் சுறுசுறுப்பாக மூட்டைகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டான் கண்ணப்பன்.
அரிசி ஆலைக்குச் சென்ற பண்ணையாரும், அவன் ஐம்பது மூட்டைகளைக் கொண்டு சேர்த்து விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டார். உடனே அவர் கண்ணப்பனை தன் அருகே அழைத்தார்.
“”கண்ணப்பா! இதோ நீ கேட்ட நூறு ரூபாய் பணம். அதோடு நீ மூட்டைத் தூக்கி வந்த கூலியும் நூறு ரூபாய் இருக்கிறது. அதோடு நான் உனக்கு வெகுமதியாக கொடுக்கிற நூறு ரூபாயும் இதில் இருக்கிறது. ஆக மொத்தம் நான் உனக்கு முன்னூறு ரூபாயினைக் கொடுக்கிறேன்,” என்று அவன் முன்னே பணத்தை நீட்டினார்.
கண்ணப்பனோ இதனை எதிர்ப்பார்க்கவில்லை. உழைப்பை மதிக்கிற பண்ணையாரின் பண்பினைப் போற்றிப் புகழ்ந்தபடி அந்த முந்நூறு ரூபாயினை வாங்கிக் கொண்டான். பின்னர் பண்ணையாருக்கு நன்றி கூறியபடி தச்சர் வீட்டிற்குப் புறப்பட்டான்.
அப்போது பண்ணையார், “”கண்ணப்பா! நீ ஒரே மூச்சில் ஐம்பது மூட்டைகளை சுமந்து வந்திருக்கிறாய். அதனால், உன் உடம்பு மிகவும் களைப்பாக இருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த ஆலையில் வேலை செய்பவர்களுக்குச் சாப்பாடு தயாராகும் சமையல் அறைக்குச் சென்று, உனக்கு வேண்டுமளவுக்குச் சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி செல்!” என்றார்.
பண்ணையர் அவ்வாறு கூறியது அவனுக்கு மேலும் வியப்பனை அளித்தது. உடனே அவன் சமையல் அறையை நோக்கிச் சென்றான். அதற்குள் அங்கிருந்த வேலையாள் ஓடோடி வந்து கண்ணப்பனை, சமையல் அறைக்கு அழைத்துச் சென்று வேண்டுமளவுக்கு உணவு கொடுத்து உபசரித்தான். கண்ணப்பன் உணவு உண்டு விட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கிருந்து சென்றான்.
கண்ணப்பன் வேகமாக தச்சரின் வீட்டை வந்தடைந்தான். “”கண்ணப்பா வா வா! சற்று நேரம் இப்படி அமர்ந்து கொள். வேறு ஒரு அவசர வேலை எனக்கு இருக்கிறது. நான் அந்த வேலையை முடித்து விட்டு பின்னர் உன் ஏரை சரி செய்து தருகிறேன்!” என்றார் தச்சர்.
கண்ணப்பனும் பொறுமையுடன் தச்சர் சொன்னபடியே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். தச்சர் அவசரமாக உளியினால் ஓர் மரக்கம்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது உளி தவறுதலாக அவர் கையில் பட்டு ரத்தம் கொட்டியது.
அதனைக் கண்ட கண்ணப்பனோ பதறியபடி எழுந்தான். உடனே தனது வேட்டியின் ஓரத்தை கிழித்து ரத்தம் வெளியே கொட்டாதபடி அவர் கைவிரலில் நன்றாகக் கட்டினான்.
“”தச்சரே! அப்படியே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் என் வீட்டிற்குச் சென்று மருந்து எடுத்து வருகிறேன். அந்த மருந்தை எடுத்துப் போட்டால் கை விரல் காயம் குணமடைந்து விடும்!” என்று தன் வீட்டைநோக்கி ஓடினான்.
சிறிது நேரத்தில மருந்துடன் வந்தான் கண்ணப்பன். “”தச்சரே! இந்த மருந்தானது மூலிகைகளால் செய்யப்பட்டதாகும். இது விசேஷமான மருந்து. இந்த மருந்தை நீங்கள் உங்கள் கைவிரலில் போட்டுக் கொண்டால், வெட்டுப்பட்ட காயமானது எளிதில் குணமடைந்துவிடும்,” என்றான் கண்ணப்பன்.
கண்ணப்பன் மூச்சிரைக்க ஓடி வந்து கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்ட தச்சரும், அந்த மருந்தை தனது கை விரலில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வலி நின்றது. கண்ணப்பன் சொன்னது போன்று அது உயர்ந்த மருந்தாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். உடனே கண்ணப்பன் தச்சரை நோக்கினான்.
“”ஐயா! இப்போது உங்கள் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்தோடு நீங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. எனவே, முடிந்தால் நாளை என் ஏரை சரி செய்து கொடுத்தால் போதும். நீங்கள் கேட்டபடி நூறு ரூபாய் இப்போது வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்,” என்று அவர் முன்னே நூறு ரூபாயை நீட்டினான் கண்ணப்பன்.
அந்த நூறு ரூபாயை பார்த்ததும் தச்சர் கண் கலங்கிவிட்டார்.
“”கண்ணப்பா! உன்னை நான் சாதாரண விவசாயிதானே என்று நினைத்தேன். ஆனால், உனக்குள் இருக்கும் அன்புள்ளத்தை இப்போது நான் புரிந்து கொண்டேன். என் கைவிரலில் காயம் ஏற்பட்டதற்கு துடிதுடித்து விட்டாயே; நீ அணிந்திருக்கிற வேட்டியைக் கூடக் கிழித்து என் வீரல் காயத்திற்குக் கட்டுப்போட்டாயே. அதோடு மட்டுமல்லாமல் மூச்சிரைக்க ஓடி வந்து காயத்திற்கு மருந்தும் கொடுத்தாயே…
“”உன்னிடம் நான் எப்படி பணம் வாங்க முடியும்? என் கை விரல் சற்று ஆறியதும் உனக்கு நானே புது ஏர் ஒன்றை செய்து தருகிறேன். அதற்கு நீ பணம் கொடுக்க வேண்டாம். நீ என்னிடம் காட்டிய உள்ளன்புக்குப் பரிசாக அந்த ஏரினை நான் செய்து கொடுக்கிறேன்!” என்றார் தச்சர்.
தச்சர் இவ்வாறு கூறுவார் என்று கண்ணப்பன் சற்றும் நினைக்கவில்லை. அவன் மிகவும் மனமகிழ்ச்சியுடன் அவரிடம் இருந்து விடைபெற்று, வீட்டிற்குப் புறப்பட்டான். தச்சரும் தான் சொன்னது போலவே அவனுக்கு அழகான ஏர் ஒன்றை செய்து கொடுத்தார்.
குட்டீஸ்… பொறுமையோடு உழைப்பவர்களுக்கு கடவுள் தரும் பரிசுகளை பார்த்தீர்களா?